இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2009

உனக்குள் ஒருவன்..!


தீவிரவா தத்தின் துளைக்குமந்த வேர்தனை
தீவிரமாய்த் தூரறுக்கும் வாய்ப்புக்கும் - தீயாய்
எரிக்கவும் காத்திருக்கி றானொருவன்; உன்னுள்
இருக்கும் அவனையு ணர்
[29-09-09]

தீவிர வாதத்தின் கூர்மிகுந்த வேர்தனை
தீவிரமாய்த் தேடித் தரைவீழ்த்த - தீயின்
தனலாக வாய்ப்புக்(கு) தவிக்கும் ஒருவன் ;
உனக்குள் அவனை உணர் ..
[04-10-09]

September 29, 2009

வழுக்கியது பசியிலா? பாசத்திலா ?


வழுக்கியது தொண்டைக்குள் வாயினில் வைத்த
புழுங்கலரி சிச்சாதம்; பயலறிவேன் ஏனிதென்றே;
சொல்லிச்சேர்த் தந்தநெய்யா?; சொல்லாமல் அம்மாவின்
அள்ளியே வார்த்தந்தக் கை

September 27, 2009

பாரதியின்.........!


வேரோடு என்னையே வீழ்த்திய தாய்எண்ணி
யாருமி ருந்துவிடா தீர்பாரும்; தீந்தனலாய்ப்
பாரதிரத் தீயோரை வெந்துதணிப் பேன்;நானே
பாரதியின் அக்கினிக் குஞ்சு

[29-09-09]
[இன்னிசை/ஒருவிகற்பம்]



வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாராதி ருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..

[04-10-09]
[நேரிசை/ஒருவிகற்பம்]

வாழ்த்து


26-09-09 அன்று அய்யா தமிழன் வேணு அவர்களின் பிறந்தநாள்

குழுமத்தில் செந்தமிழைப் போற்றும்; வளர்ந்த
குழந்தையின்பி றந்தநா ளின்றேதான் -ஆள்தமிழே
நூறாயுள் தாஎனக்கு! உன்தலைம கன்அவனை
நூறாண்டு நான்வாழ்த் தவே!!

’தமிழ்தான்வே ணும்’என் னுமிடத்தில் தலைவர்
தமிழ்வேணு; தன்னால் வருவாரவர்! - தம்மைத்
தமிழாக்கி இன்பம் தருவார்!!; செழிப்பார்
தமிழன் னையைப்போ லவே

காத்திருக்கும்....!


மறையாத சூரியன்; மண்ணில் எனக்குக்
கரையாத சந்திரன வன்தான் - வரும்வரைக்
காத்திருப்பேன் தெற்கேநான்; இந்திய எல்லையைக்
காத்து வடக்கில வன்

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; கரையாமல்
காத்திருப்பேன் உன்னையிங்கு நான்

நான்

பாதைத் தேர்வு

September 24, 2009

புகையேப் பகை


புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகை செய்வார் உணர் ..

திருத்தம் :ப்ரசாத்
புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகையதைச் செய்வார் உணர் ..

September 23, 2009

வானும் நானும்


ஒற்றைத் தலையணையில் ஓட்டுவெளி யில்தனியே
வெற்றுத் தரையினில் வீழ்ந்திருந்தேன் - சுற்றிவரும்
வெண்மேகம்; எட்டடியில் வட்டநிலா; வீழ்ந்தது
என்கா லடியில்சொர்க் கம் ..

சிட்டுக் குருவி - 2


கூடுகட்டி வாழயிங்கே இல்லையொரு குட்டிமரம்
காடுவழிப் போகுதந்த சிட்டுதன் - நாடுவிட்டு
எங்கோ எதிர்த்திசையில் காற்றில் கரைந்தது
மங்கியழும் உள்ளத்து டன்

சிட்டுக் குருவி


அலைபேசிக் கோபுரத்தின் நுண்ணதிர்வில் சிக்கி
நிலைகுலைந்த சிட்டுக் குருவி - கலைந்தோடி;
எங்கும் சுயம்வளர்க்கும் மாண்பில்லா மண்தேடி
பொங்கிப் பறந்த துணர்

வீட்டில் பாடம்


உச்சப் பெருமூச்சோ டென்வாசல் முற்றத்தில்
பிச்சைக்கு நிற்குதொரு பச்சைக் குழந்தை;
விரட்டிக் கதவடைத்தேன்; பின்னால்க் குழம்பி
மிரண்டென் இளைய மகள்


[அமைப்பு : இன்னிசை/இருவிகற்பம்]

உணர்ந்து கொள்


நாடெல்லாம் ஆண்டவனைத் தேடும் உடலுக்குள்
ஆடாமல் உட்கார்ந்தி ருப்பாரவர் - நாடாமல்
இல்லாரைக் காக்கும் எளிய மனதுக்குள்
சொல்லாமல் வாழ்ந்திருப் பார்

[ நேரிசை / இருவிகர்பம் ]

September 22, 2009

கண் தானம்


மண்ணில் பிறந்துபின் மண்ணுள் புதையுமுன்
கண்ணில்லா தோரிடத் தில்விதையுன் கண்ணையே;
வின்னவனே வந்துநின்று காத்திருப் பார்சேவிக்க
மண்ணில் உனக்கு முன்பு

எல்லாம் தெரியும்


ஊர்வல மென்றால் நகர்தனில் தேரோடும்
ஊர்வலம் மட்டுமென் பார்களே - பார்தனில்
கால்நடை ஊர்வலம் பற்றி யெதுவுமே
வாழ்த்தாமல் காப்பார வர்

எல்லாம் தெரிந்தோரி வர்கள் உலகினில்
உள்ளதெல் லாமறிந் தோர்

நவீன மரபு


சொல்லுக்குத் தீந்தமிழாம்; வில்லுக்கு அர்ச்சுனனாம்
கல்லுக் குவைரமாம் என்றெல்லாம் - சொல்லியபின்
சொல்லில்லா மல்திண றிப்பாடி வைத்தனரே;
பல்லென்றால் பாவனாவின் பல்

எய்ட்ஸ்


மதிகெட்டுப் பாதையில் தேடிச் சுகித்தால்
விதிமுடிக்க வந்துசேரும் ஆழிநோய் - சதியவள்
பித்தாகி வீதியில் நின்றிட; நற்குடும்பம்
சித்தம் சிதறிப்போ கும்

நகரத்தான் விஜயம்


அரவமற்றக் காலையில் கொட்டும் இருளில்
வருவது பாம்பா; அசைவது கொள்ளிவாய்ப்
பேயா எனமிரளும் வீரனுக்கு அச்சத்தில்
ஆயெப் படியிறங் கும்

ஏக்கம்


குஞ்சைச் சிறகுக்குள் பொத்திய வான்கோழி
பிஞ்சுவாய்க்குள் கெஞ்சியூட்டும் தேன்சிட்டு - கொஞ்சியே
ஊட்டி விளையாடும் வீதிநாய்; ஏங்கியென்
வீட்டைத் தேடுதே மனசு

மாமியாரான மருமகள்


மருமகளாய் வந்துயே மாந்தமா மிக்கேன்
மருமகளின் எண்ணம் எதுவும் புரியவில்லை;
நம்பியே வந்தோரின் உள்ளம் மிதிப்பவர்
நிம்மதி யும்நிலைக் கா(து)

மருமகளாய் ஏமாந்த மாமிக்கு வந்த
மருமகளின் ஏக்கம் அணைக்கத் தெரியவில்லை;
பட்டுணர்ந்த வாழ்க்கையின் முக்கியப் பாடமது
பட்டென்(று) மறந்தது ஏன்?
18-10-09

நான்


தன்னையெது வும்மிகா தென்றதோர் உள்மனக்
கணக்கிட் டபடியேயி ருந்திடுவேன் - உண்மையில்
தன்னை உணராமல் எண்ணத்துள் மூழ்கியே
தன்னையும் தாண்டா தவன்



திருத்தம் :

தானறியா ஒன்றிருக்கா தென்றதோர் உள்மனதில்
நானறிந்த வாறிருப்பேன் நம்புவீர் -- ஞானமாய்
தன்னை உணராமல் தன்எண்ணம் மூழ்க்கியே
தன்னையும் தாண்டா தவன்

--சி. ஜெயபாரதன்

மாணவன்


விரைவாய்த் துவங்கும் வகுப்பினில் வெண்பா
தரையில் அமர்ந்து படிப்பேன் - துரையின்
கடைசி வரிசையின் வேண்டுகோள் ஏற்று
தொடங்க வருவீர் விரைந்து

வணக்கம்


கரமதை ஊன்றித் தவழவெண் பாவில்
சிரமதைத் தூக்கி வளர - வரும்பாவின்
சீர்தனை வெட்டித் தவறினைச் சுட்டி
உரமிட்டு வாழ்த்திடு வீர்