இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 26, 2017

நபிமொழி - 18 :- கல்வி..! கற்போம்...கற்பிப்போம்..!!


916)
ஆளுமைக்கு மத்தியில் பெண்களுக்குக் கற்பிக்க
நாளொன்றை மொத்தம் ஒதுக்கு
................ புகாரி 101

917)
பெற்றதைத் தந்துதவ; கற்றதைக் கற்றுத்
தருவதற்குப் பேராசை கொள்
................... புகாரி 73

918)
விரும்பாரைக் கண்(டு)அவரைத் தள்ளி; அறிவோரைத்
தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொடு
.................. புகாரி 127

919)
இனியதைச் சொல்வீர் விரும்பத் தருவீர்
திணிக்காதீர் என்பதுஇறை வாக்கு
............... புகாரி 69 6125

920)
நேரடியாய்க் கேட்பதைக் காட்டிலும் கேட்டவர்
கூறுவதைக் கேட்பதும் நன்று
.................... புகாரி 67

April 24, 2017

துரோகம் ...! விரோதம் ...!!

911)
துரோகத்தால் வீழ்ந்தோரின் எண்ணிக்கை இன்று
விரோதத்தில் வீழ்ந்தோர்க்கும் மேல்


912)
பிறர்வாழ வேண்டுவோர் வீழ்ந்தால்; அவர்சரிவின்
பின்இருப்பார் வாழும் பிறர்


913)
விரோதியிடம் போய்த்தானாய் வீழ்ந்தாவது உந்தன்
துரோகியின்முன் வாழ்ந்து விடு


915)
விரோதம்தான் வீரனின் வாழ்விற்கு அழகு;
துரோகத்தால் சேரும் இழுக்கு


915)
விரோதியைக் கண்டால் பொருது; துரோகியைக்
கண்டால் விரைந்து விலகு

April 22, 2017

மாதம் பத்து ....!

906)
சிப்பிக்குள் முத்தாகப் பொத்திவைத்த சொத்தடையக்
காத்திருக்கும் மாதமது பத்து


907)
வரும்முதலில் வாந்தி இரண்டில் அதிமகிழ்ச்சி
மூன்றில் மிகமயக்கம் தான்


908)
நான்கில் புளிப்பெடுக்கும் ஐந்தில் தலைவலிக்கும்
ஆறில் சொடுக்கும் வயிறு


909)
ஏழில் வலைகுலுங்க எட்டில் எழும்சோர்வால்
ஒன்பதில் நீளும் பயம்


910)
பத்துதெல்லாம் சாவோடு சூதாடி தாயமிட்டுப்
பெற்றெடுப்பாள் தன்சேயை தாய்

April 19, 2017

நபிமொழி - 17 ....இருபக்கமும் அறிந்த நடுநிலையாளன் !



தராசியல் ! ... வட்டவியல் !! ..

குறளுக்கான குறிப்புகளைத் தேடி..இறையின் அறிவுரைகளுக்குள் அலையும் வேளையில் ... பல ஆர்வமூட்டும் கோணங்கள் என்வலையில் கிடைத்தன . அதில் ஒரு பார்வைதான் இங்கே தொடர்வது .
உலகின் கட்டுக் கோப்பான வாழ்வுக்கு... அறிவுரைகளை கட்டளைகளை சட்டமாக விளக்கமாகத் தந்திருக்கும் இறைவன் .. வேறுபல இடங்களில் அவற்றிற்குச் சில விலக்குகளும் அளித்திருக்கிறான்...
வீட்டுக் கூடத்தில் எல்லாரும் இருக்கும் போது பேரப்பிளைகளிடம் ’’ஏய்ய்ய்ய்.. அதைச் செய்யாதே .. இதைச் செய்யாதே” கடுமை காட்டும் ’ஸ்ட்ரிக்ட்டு’தாத்தா ... கூட்டம் கலைந்த பிறகு ... தானும் குழந்தையாகி “இப்போ சரி...இனிமேல் இதுபோலச் செய்யாதீங்க.. ஆமா”என்று குதூகலமாவதுபோல .... தம் மக்களுக்காக இறங்கும் இறையை/இறையின் மொழியை பல இடங்களில் கண்டேன்

என்னள்வில் இது ஒரு புதிய பார்வை ...ஒரு முயற்சி.. ஒரு கோணம்... அவ்வளவே . இது மற்றவருக்கும் ஏற்புடையதா என்று அறியவே இங்கு பதிகிறேன் .. ஆன்றோரும் சான்றோரும் கருத்துரைத்தால் மட்டுமே மேலும் தொடர்வேன்.

என்குறள்: 895 – 905

1.வாழ்த்து . ( முதலில் வாழ்த்தில் இருந்தே ஆரம்பிப்போம். )
சிறியோர் பெரியோர்க்கும் செல்வோர் இருப்போர்க்கும்
நல்வாழ்த்து சொல்லிடவேண் டும்
புகாரி 6231

வாழ்த்தப் படும்போது அதைவிட நன்றாக
அல்லது அதைப்போன்று வாழ்த்து
குர்ஆன் 04:86
#முதலில் ....யார் முதலில் வாழ்த்த வேண்டும் என்று ஒரு குறிப்பு .
தொடர்வது ...வாழ்த்தைப் பெறுபவருக்கான குறிப்பு . அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் இது அவருக்கும்பொருந்தும் .. எனில் இங்கு அந்த வாழ்த்து வட்டம் பூர்த்தியாகி விடுகிறது

2.மரியாதை
எழுந்துநிற்க வேண்டும்; இறந்தஉடல் உன்னை
விலகிக் கடக்கும் வரை
முஸ்லிம்1745

வரும்போது எழுந்துபிறர் நிற்க நினைப்போர்;
நரகத்துள் போய்ச்சேர்வார் ஆம்
அபுதாவூத் 4552
#இறுதி ஊர்வலம் ஒன்று நம்மைக் கடந்து செல்லும் பொழுது எழுந்து நிற்க வேண்டும் என்பது கடமை . நாம் வரும்போது பிறர் எழுந்து நிறக வெண்டும் என விரும்பொவோர் ... முதல் குறிப்பை மட்டும் அறிந்தார் எனில் ... இனி அது போல வாழ்வில் விரும்புவதற்கான வாய்ப்பே இருக்காது  ஒரு வட்டம் பூர்த்தியாகி விடும்


3.கடுமை.
கொடுத்தக் கடனை அடைய கடுஞ்சொல்
கூற அனுமதி உண்டு
புகாரி 2306

கடனைத் தராதார் இடத்தில் கடுமையைக்
காட்டார்முன் சொர்க்கம் வரும்
முஸ்லிம்3180
#சட்டப்படி.. கடனை வசூல் செய்ய கடுமை காட்டச் சொல்லும் இறை... தர்மப்படி ...இல்லாரின் சூழலை மனதில் கொண்டு ... மிகப் பெரிய பலன் தரும் இரண்டாம் குறிப்பைத் தருகிறாஜ்ன் .. இதை அறிந்துவிட்டால் ... அந்த முதல் சூழல் நிகழாமலேயே போய்விடும்  ஒரு வட்டம் பூர்த்தியாகி விடும்


4.நேர்த்திக் கடன்
நன்றெதுவும் தந்துவிடாது என்பதால் உண்டுதடை
நேர்த்திக் கடன்செய்வ தற்கு
புகாரி 3370

கஞ்சன் மறைப்பதும் கொஞ்சம் வெளிப்படும்
நேர்த்திக் கடன்மூலம் ஆம்
புகாரி 3370
#செயலுக்குத் தடை விதித்தித்து விட்டு ... பின்... ”சரி மூடர்கள் செய்துவிட்டுப் போகட்டும்.. அப்பொழுதாவது பதுக்கிவைத்திருப்பதில் ஒரு பகுதியாவது வெளிவந்து ... இல்லாருக்கும் பயன்படும்” என்று இளகி வருவான் இறை. இங்கும் ஒரு வட்டம் பூர்த்தியாகி விடுகிறது


5.விருந்தோம்பல்
உறவோடு ஒருவர் அழைப்பின்றி வந்தால்
உறவாடி வைப்பாய் விருந்து
முஸ்லிம்4141

உறவின் வரவேற்கும் பண்பை அறிந்து
விருந்தில் புதியவரைச் சேர்
முஸ்லிம்4143
#விருந்தளிப்போரிடம் “திடீரென்று .. சொல்லாமல் ஒருவர் , கூடுதலாக வேறுஒருவரையும் சேர்த்து அழைத்து வந்துவிட்டார் எனினும் வரவேற்று விருந்து வை” என்று சமாதானம் செய்யும் இறைவன்...
விருந்துக்கு போவோரிடம் “ அங்கே வருந்தளிப்போரின் மன்நிலை, குணநலம் அறியாமல் .. புதித்தாய் ஒருவரை சொல்லாமல் சேர்க்காதே” என்று எச்சரிக்கையும் செய்வான் இறை . இரண்டும் சரியாய்ப் புரிந்து கொள்ளப் படுமாயின்... ஒரு வட்டம் பூர்த்தியாகி விடும்

April 18, 2017

மரம் ... ! வரும்காலத்தின் உரம் ... !!

891)
ஆளுக்கு ஒருமரம் நட்டு;வரும் நீர்தேக்க
ஊருக்கு ஒருகுளம் வெட்டு


892)
அறம்வளர்க்க அப்புறம் பார்ப்போம்; முதலில்
மரம்வளர்க்க முன்வரப் பார்


893)
சொன்னால் குளம்வெட்ட ஆளில்லை, தன்னால்
மரம்வெட்டா நாளில்லை ஆம்


894)
மரம்வைத்தால் கேலிசெய்யும் பார்,மரம் வெட்ட
வருவோர்க்குக் கூலிதரும் பார்


895)
மதம்வளர்க்க ஏங்கும் மனிதன், மரம்வளர்க்க
வந்தால்தான் ஓங்கும் உலகு

April 14, 2017

நபிமொழி - 16 ......மன்னிப்பு ..!


என்குறள்:- 866 - 890
அன்புடையோன் முன்னிலையில் மன்னிக்க வேண்டினால்
வேண்டுதலை ஏற்பான் அவன்
..............................குர்ஆன் 02:160

அறியாமல் தீதிழைத்தோர் பின்அறிந்து மன்னிக்கக்
கோரினால் செய்வான் அவன்
...............................குர்ஆன் 04:17

எண்ணம்போல் தண்டிக்க; எண்ணம்போல் மன்னிக்க
உண்டாம் உரிமை இறைக்கு
...............................குர்ஆன் 05:40

அச்ச உணர்வூட்டித் தண்டிக்கும்; உச்சத்தில்
மன்னிக்கும் அன்புடையோன் ஆம்
..........................குர்ஆன் 05:98

பாவத்தை மன்னிப்பான்; பாவியைத் தண்டிப்பான்;
பாவத்தை ஏற்பான் அவன்
...............................குர்ஆன் 40:03

April 10, 2017

இலவு காக்கும் உழவு..!


படம்:நன்றி-RAVI PALETTE
861)
வீர விளையாட்டில் நேராய் விவசாயம்
சேரவழி செய்தது அரசு


862)
ஏடெடுப்போர் ஓங்கி இருந்தாலும் ஏரெடுப்போர்
ஏங்கினால் ஓடெடுக்கும் நாடு


863)
உழவன் உழைத்திருக்க உண்டிருந்தோம் அன்று/இன்று
உழவனையே உண்கிறோம் மென்று


864)
உழைப்பே உயர்வுதரும் என்றால் உழவன்
நிலைதாழ்ந்தே போவது எதற்கு


865)
விதைத்தது அனைத்தும் விளைந்தும் செழிக்கவில்லை
ஏனிங்கு உழவன் நிலை

April 9, 2017

நம்பிக்கை... தன்னம்பிக்கை !!


( + )
856)
நம்பிக்கை வெற்றிதரும்; வெற்றியோ நம்பிக்கை
வைத்திருந்தால் தானே வரும்


857)
தன்னடக்கம் கொண்டிருப்போர் தம்முள்;தன் நம்பிக்கை
தன்னால் விளைந்து விடும்


858)
தன்திறத்தை நம்புபவர் தானே பெறுவாராம்
எந்திரத்தை வெல்லும் வரம்


( - )
859)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்


860)
தன்திறன்மேல் நம்பிக்கை வைக்காத வாழ்வாகும்
தண்ணீரின் மேல்வரையும் கோடு