இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 13, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


காதலோ,,காதல்


311)
யுத்தமொன்று சத்தமின்றி முற்றுமின்றி நீண்டிருக்க
முத்தமிட்டுத் தந்தாள் குறிப்பு

312)
நாணாமல் போய்நீ வழங்கு சிறுநகை;
காணாமல் போகும் பகை

313)
நீவருவாய் என்றிருந்தேன்; வந்தாய் நகையோடு;
நீவருவாய் என்றானாய் இன்று

314)
மானாக ஆண்மருக; ஆணாக பெண்உருக
தேனாகும் காதல் உறவு

315)
நானென்(று) அவன்விஞ்ச ஏனென்(று) இவள்கொஞ்ச
வீணாகிப் போனான் அவன்

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


இயல்பு!!!!!!!


306)
அரவமின்றி வந்தமைதி கொன்று விரைந்து
மறைவ(து) அரவம் இயல்பு

307)
வேகமாய் வந்து பயம்தந்து வந்தவழிப்
போவ(து) அலையின் இயல்பு

308)
தண்டின்மேல் தங்கி இருந்தாலும் வண்டினைத்
தேடுவது மொட்டின் இயல்பு

இயல்பு?!?

309)
ஆளில்லா ஊரில் அடுத்தடுத்துத் தேரிழுக்க
நாட்குறித்தல் மூடர் இயல்பு

310)
தோள்வலிமை தானழகு; பாழும்தோல் பின்சென்று
வீழ்வ(து) உலகின் இயல்பு

February 8, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்காதலா..என் காதலா........

301)
என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
வந்தின்றும் சிக்கவில்லை நீர்

302)
நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
நானென்ன ஆவேனாம் கூறு

303)
உம்வாசம் நானுணர்ந்தேன்; தன்வேசம் தானுதறி
முன்வாசல் ஓடும் மனது

304)
ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்

305)
சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
சொல்லடா என்செய்ய வென்று