இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 29, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




’அ’ தந்தான் ’ஆ’சான் :



191)
கொற்றவன்முன் கற்றவன் நிற்பான் பயம்துறந்து;
கொற்றவன் நிற்பான் பணிந்து


192)
மானவன்தான் என்றாலும் முன்பவனும் ஓர்குருவின்
மாணவன்தான் என்ப(து) அறி

(மானவன் = அரசன், வீரன், தலைவன்)

193)
படிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்பார்:
படிக்கல்லாய் ஆவாய் உணர்


194)
தருவது மட்டுமே தன்செயல் என்னும்
குருவிற்(கு) இணையில்லை இங்கு


195)
புரியாமல் கற்கும் எதுவும் நிலைக்கா(து)
அதுவாகும் நீர்மேல் எழுத்து

August 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


குட்டிக் கதை சொல்லவா ?

186)
தேன்தான் கொடுக்குமென்(று) எண்ணித் தொடராதே;
தேனீக்கும் உண்டாம் கொடுக்கு


187)
ஓடி ஒளிந்துவிடும் பாம்பைக்கை யால்பிடித்தால்
ஆடி அடங்கிவிடும் வாழ்வு


188)
எலிஅழுதால் பூனை விடாது; வலிக்க
எதிர்த்தால் பிறக்கும் வழி


189)
புலியில்லா ஊரில் தெருவெல்லாம் கூத்தாம்;
எலிதான் நடத்தும் அரசு


190)
ஐந்தடக்கி நிற்கும்; உறுமீன் வரும்வரையில்
சைவமாய்க் காத்திருக்கும் கொக்கு

August 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கோபத்தில் அவளிருந்தால் ...!

181)
வானம் பறக்க முயல்வேன்நான்; ஐயத்தில்
வானம் பறிப்பாள் அவள்


182)
கேள்விக் குரிய பதில்பலக் கொண்டவளாம்
கேள்விக் குறியாம் அவள்


183)
நாளை வருவேன் எனச்சொல்வாள்; நான்நம்பி
நாளையெண்ணிக் கொண்டிருப் பேன்


184)
ஆத்திரத்தில் பேசா(து) இருக்கும் அவளறிவாள்
பாத்திரத்தால் பேசும் மொழி

185)
”வழிபடு என்றுன்னை வேண்டவில்லை; போகும்
வழிவிடு போதும் எனக்கு”

August 20, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அறி.. நீயாவாய் அரி :
176)
உதறிக் கழித்த பொழுது கதறி
அழுதாலும் மீளா(து) அறி


177)
மணக்கும் மலரைப் பறிக்கும்முன் முள்ளின்
குணத்தை முதலில் அறி


178)
தடுமாறும் போதெல்லாம் தோள்கொடுக்க உன்தடத்தில்
பாரியின்தேர் வாரா(து) அறி


179)
கொடுக்கும் குணத்தைக் கெடுப்போர் இடுப்பின்
உடுப்பை இழப்பார் அறி


180)
அச்சாணி இல்லாமல் சக்கரம் முச்சாணின்
முக்கையும் தாண்டா(து) அறி

August 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


ஏன் ஏங்க வைக்கிறாள் இவள் ? :
171)
விரகம் இறுக்க விரைவான் அவனும்;
விரதம் இருப்பாள் அவள்


172)
ஏமாறத் தான்வேண்டும் நானின்றும்; ஏன்மாற
வில்லையாம் இன்னும் அவள்


173)
வாய்ப்போடு வந்தமர்ந்தேன்; வாய்ப்பாடு கேட்டுவிட்டாள்;
வாய்ப்பூட்டுள் சிக்கியது நாக்கு


174)
இல்லாள் பெருமையைக் கேட்காமல் சொல்லும்
அவளருகில் இல்லாப் பொழுது


175)
செல்லக் கிளிச்சொல்லைக் கேளாமல் வந்தஎன்னுள்
மெல்லப் படரும் கிலி


August 14, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அறிந்ததைச் சொல்லவா உனக்கு ?

166)
எள்வேண்டும் என்போர்முன் எண்ணையுடன் சென்றால்உன்
எண்ணம்மேல் குற்றம் வரும்

167)
மண்ணில் எதிர்பார்க்கும் மாற்றம் எதையும்நீ
உன்னில் இருந்தே தொடங்கு

168)
பூவுள் மறைந்திருக்கும் நாகம்;உன் நாவுள்
மறைந்திருக்கக் கூடும் விசம்

169)
விசாலமாய் ஆக்குன் மனதை; உறவின்
விலாசமாய் மாறும் அது

170)
பிறர்குறையை நக்குவதைக் காட்டிலும் தன்கறையை
நீக்கினால் சேரும் சிறப்பு

August 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இயற்கையே இவள்தானோ !

161)
மேகம்போல் மூண்டாள்; கொடும்பூதம் போல்சூழ்ந்தாள்;
வேகமாய் என்னுள் மழை

162)
எண்ணமெல்லாம் என்னவள்; சேர்ந்திடும் நாள்வரை
வண்ணமில்லா வானவில் நான்

163)
கோடை வெயிலிலும் கொஞ்சியவள் வந்துநின்றால்
வாடைக் குளிர்தான் எனக்கு

164)
பக்கென்றுப் பற்றிவிடும் தொட்டவுடன்; பாவிமகள்
பத்து விரலும் திரி

165)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நான்;வீழ்த்தும் திண்ணத்தில்
நீளும் அவளின் கனவு

August 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்து கொள், அறியாமையைக் கொல்:
156)
தங்கி இருத்தலும் தேங்கிக் கிடத்தலும்
ஒன்றல்ல என்ப(து) அறி

157)
தனித்துவந்தோம் என்று தவறாய்க் கணித்துத்
’தணிந்துபோ’ என்போரை வீழ்த்து

158)
புலியின்மேல் உள்ள வரிகள் அனைத்தும்
தழும்பல்ல என்ப(து) அறி

159)
பத்துக்குள் ஒன்றென்று முங்காது; நான்தான்
பதினொன்(று) எனமுந்தி வா

160)
உள்க்காயம் ஏற்கப் பழகு; துளையின்றிப்
புல்லாங் குழலும்தான் ஏது

August 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கனவே நினைவாக :

151)
அசத்தல் கனவு; வசமாக்க வந்தாள்;
நிசத்தில்என் முன்னால் நிலவு

152)
உன்னைஉள் வாங்கும் பொழுதெல்லாம் நான்பெறுவேன்
விண்ணைவில் ஆக்கும் திறன்

153)
வந்தணை என்றவரம் வேண்டுவேன்; தந்தவுடன்
வந்தனை செய்வேன் பணிந்து

154)
தழுவல் விலக்குவாள்; தள்ளித் தவழ்வாள்;
நழுவுமென் காலின்கீழ் வாழ்வு

155)
எதிரிருந்தும் இல்லை இழுத்தணைக்கும் வாய்ப்(பு);என்
எதிரிக்கும் வேண்டாமிவ் வாழ்வு