இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 29, 2016

பாட்டி வைத்தியம் - 2



721)
முன்நரை என்னும் குறைமறைந்து போய்விடும்
முள்முருங்கை உண்டுவரு வோர்க்கு


722)
நெல்லிக் கனிநான்கு நாளும்உண்; சொல்லிஇனி
நீளும்உன் வாழ்வுபிறர் முன்


723)
அருகம்புல் சாற்றின் அருமை அறிவாய்;
குருதியைச் சுத்தம்செய் வாய்


724)
அகத்துள் புழுவை அழிக்கும் அகத்தி;
அளவாய்ப் புசிக்கும் பொழுது


725)
வாழை இலைகொண்டு காயத்தைப் போர்த்து;
கொடும்தீயின் தாக்கத்தைப் போக்கு




May 28, 2016

நபி மொழி - 6 ... தர்மம் !


என்குறள் : 716 - 720
யார்க்கும் தெரியாமல் செய்து வரும்தர்மம்
தீர்க்கும்உன் பாவத்தை ஆம்
...............புகாரி 1421

பிறரறியச் செய்துவரும் தர்மமும் நன்று;
பிறர்செய்யத் தூண்டும் அது
..............புகாரி 1421

தேவைக்கு மிஞ்சிய செல்வத்தை; இல்லாரின்
தேவை அறிந்துதர்மம் செய்.
.............. புகாரி 1426

தான்செய்த தர்மத்தைச் சொல்லாது ஒளிப்போரைத்
தான்சேரும் நன்மையனைத் தும்
.......... புகாரி 1430


அளந்து பிறருக்குத் தர்மம் அளிப்போர்க்கு
அளந்தே தருவான் இறை
................. புகாரி 1433

May 24, 2016

குடும்பத் தலைவன் .....!


ஆண் ... இவனே ஆண் !

(+)
711)
வென்றவள்நான் என்னும்தன் நம்பிக்கை;; இல்லாளைச்
சென்றடையச் செய்பவனே ஆண்


712)
மனைவியைத்தன் தாய்க்குச் சமமாய் நினைத்து
நிலைக்கவைத்தால் தானவன் ஆண்


713)
சிரித்திருக்க வைப்பதிலும்; பெண்ணின்கண் ணீரை
நிறுத்திவைக்கப் பார்ப்பவனே ஆண்


(-)
714)
இல்லாளை வென்றவன்நான் என்றெண்ணி வாழ்பவன்தன் இல்லறத்தில் வீழ்ந்தவன்தான் ஆம்

715)
இல்லாளை வெல்ல நினைப்பவன் இல்லறத்தில்
வெல்வதற்கு இல்லை வழி

May 22, 2016

நபி மொழி - 5 .....இறை...அவன்....இறை(ய)வன் !


என்குறள் 706 - 710 :

குர்ஆன் 01:02
அகிலம் படைத்தான்; நிலைக்கவைத்தான்; எல்லாப்
புகழும் அவனுக்கே தாம்


குர்ஆன் 02:106
ஒன்றை மறுத்தான் எனிலதைக் காட்டிலும்
நன்றாய்த் தருவான் அவன்


குர்ஆன் 02:154
இறையின் வழியில் உயிரை இழந்தோர்
இறந்தவர் இல்லை உணர்



குர்ஆன் 02:190
போர்தான் எனினும் வரம்பை மீறினால்
ஏற்க மறுப்பான் அவன்


குர்ஆன் 06:103
உன்கண் அறியாமல் உன்கண்ணுக்கு உள்பார்க்கும்
நுட்பம் அறிவான் அவன்

அரசு...இயல்.....அரசியல் !


அரசு (+)
701)
மன்னனை மக்கள் மறந்திருப்பார் என்றால்
நடப்பது நல்லாட்சி ஆம்

702)
மன்னன் குடியைப்போல் வாழ்ந்தால்; குடிக்கெல்லாம்
மன்னன்போல் வாழ்வமையும் ஆம்

703)
அசுர பலத்தில் அரசு; வெளுக்கும்
உரச நினைப்போர் முதுகு

அரசு (-)
704)
ஆயுதத்தின் போர்வைக்குள் ஆளுபவர் வாழ்ந்திருக்கும்
நல்லமைதிப் பூங்காநம் நாடு

705)
ஆட்சியால் நாடழிந்தால்; ஆள்வோரைத் தேர்ந்தெடுத்தோர்
தான்அதற்கு மொத்தப் பொறுப்பு

May 6, 2016

நபி மொழி - 4



என்குறள் 696 - 700 :
சொல்லியதை மிஞ்சுவோர்; நம்பிக்கை யைக்கொல்வோர்;
பொய்சொல்வோர் வஞ்சகர் ஆ
ம் .............. புகாரி 33


நம்பி, புனித இரவன்று நின்றுதொழும்
பொல்லார்ப் பழியழியும் ஆம்
............... புகாரி 35, 37


அறப்போர் புரிவது இறைமேல் நிறைந்திருக்கும்
நம்பிக்கை யுள்ஒன்றாம் ஆம்
.............. புகாரி 36


நிரந்தரமாய்ச் செய்யப் படும்நல் அறம்தான்
இறைக்கு மிகவிருப்பம் ஆம்
..............புகாரி 43


மார்க்கத்தை ஏற்றுள் நுழைந்தபின் வேற்றாகி
மாறியவர் யாருமில்லை ஆம்
............புகாரி 51

பார்....இப்படியும் பார்...!




சோதனையியல் :
691)
வாய்ப்பு வருமென்று வாய்ப்பார்த்து நிற்காமல்
வாய்ப்பை உருவாக்கப் பார்

692)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்


693)
எதிலும் அடைஆழம் என்பார்; முதலில்
அவரது அடையாளம் பார்


694)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்


695)
நின்று தயங்கியவர் வென்றதில்லை; நன்றாய்த்
துவங்கியவர் நின்றதில்லை பார்

May 4, 2016

நபி மொழி - 3 ......


என்குறள் 686 - 690 :


செயலின் விளைவனைத்தும் எண்ணத்தைச் சார்ந்தே
இயல்பாய் அமைந்து விடும்
............................. புகாரி 1

இல்லார்ப் பசிப்பிணியைப் போக்குவதும்; எல்லார்க்கும்
சொல்லும்நல் வாழ்த்தும் சிறப்பு
........................ புகாரி 12, 28

தம்உயர்வைத் தம்உறவும் பெற்றடைய வேண்டாதார்
கொண்டஇறை நம்பிக்கை வீண்
........................புகாரி 13

மார்க்கநலன் காப்பதற்கு; தன்னுள் ஒடுங்குவதும்
மார்க்கத்தின் ஓரம்சம் ஆம்
............................. புகாரி 19

நாணும் குணமும் இறையின்மேல் நம்பிக்கைக்
கொண்டோரின் நற்பண்பா கும்
........................... புகாரி 24

நன்றி :படம் :FACE BOOK :Des Pardess / Haroon Rasheed

May 3, 2016

வாய்ப்பு ...!



681)
சிரித்துரைக்கும் போதுபொய் மெய்யாய்;மெய் பொய்யாய்
உருமாற உண்டாகும் வாய்ப்பு


682)
வரிசையில் வந்தவரை வாய்ப்பார்க்க வைத்துவிட்டு
வாரிசை வந்தடையும் வாய்ப்பு


683)
மிஞ்சியதைத் தந்துன் உழைப்பையள்ளித் தின்பவரை
மிஞ்சவும்ஓர் நாள்வரும் வாய்ப்பு


684)
துச்சமென்று யாரையும் தூற்றாதே; யார்க்குமுண்டு
உச்சமொன்றை வந்தடையும் வாய்ப்பு


685)
நல்லதென நாம்நினைக்கும் ஒன்று பிறர்கண்ணுக்கு
அல்லதென வாகஉண்டாம் வாய்ப்பு