இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 31, 2017

பாட்டி வைத்தியம் - 6 _ பெண்ணுக்குக் கைமருந்து !


தாய்மை:
1086)
கருவுறும் காலத்தில் கேழ்வரகு சேர்த்தால்
பெருகும் இரும்பின் வரவு


1087)
நொய்யரிசி வெந்தயக் கஞ்சியால் தாய்ப்பால்
சுரந்துவரும் மிஞ்சும் அளவு


மருந்து:
1088)
கருஞ்சீ ரகம்,முள் முருங்கை கருப்புஎள்சேர்
மாத விலக்காகும் சீர்


1089)
பப்பாளி அன்னாசி கத்தரி எள்ளை,
விலக்காகும் நாளில் விலக்கு


1090)
கூடும் உடலெடையை, கட்டுக்குள் வைத்திருந்தால்
நீர்க்கட்டி நீர்த்து விடும்


1091)
வல்லாரை ஆட்டுப்பால் சேர்த்தரைத்து உண்போர்க்கு
வெள்ளைப் படல்நிற்கும் ஆம்


1092)
வெள்ளைப் படலுக்கு எருமைத் தயிரோடு
அருகம்புல் கீழாநெல் லி


1093)
நெல்லியுடன் தேனும் தொடர்ந்துண்போர்க்கு ஆகுமது
வெள்ளைப் படலுக்குத் தீர்வு


எச்சரிக்கை:
1094)
பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும்
கெடுமாம் கருவோடு விந்து


1095)
குருதி வெளுக்கும் கருவும் குலையுமாம்
குங்குமப்பூ கூடும் பொழுது


நடி(த்)......தேன் ! , விட்டுக்கொடு(த்)..... தேன் !!


1081)
பெண்மகிழ ஆணவனும், ஆண்நெகிழப் பெண்ணவளும்
வாழும் உலகுதான் வீடு


1082)
இல்லாளை வெல்வதைத் தன்இலக்காய்க் கொள்வான்ஆண்
தோற்பதுபோல் காட்டுவாள் பெண்


1083)
ஏமாற்றி விட்டதாய்ப் பெண்நினைத்து, ஏமாந்து
விட்டதாய் நான்நடித்தால், தேன்

1084)
என்முன்னால் தூங்குவது போல்நடிக்கும் உன்னை
எழுப்புவது போல்நடிப்பேன் நான்


1085)
எழுப்புவது போல்நடிக்கும் உன்முன் மெதுவாய்
விழித்தது போல்நடிப்பேன் நான்


August 29, 2017

நபிமொழி - 22 :- மது !

என்குறள் / துரைக்குறள் :- 1071 - 1080

மதுவை ஒதுக்கு !
உருமாற்றம் செய்து மதுவை உணவாய்த்
தருவதற்கும் உண்டு தடை
......................முஸ்லிம் 4014

பயம்தரும்நோய் ஒத்த மதுவை, மருந்தாய்ப்
பயன்படுத்த உண்டு தடை
........................முஸ்லிம் 4015

மது,சூது கொண்டுதரும் கேடென்பது இம்மை
மறுமையைத் தாண்டிப் பெரிது
................... குர்ஆன் :02:219

போதை தருமனைத்தும் மார்க்கத்தின் பாதையில்
தள்ளிவைக்கப் பட்டது தான்
......................முஸ்லிம் 4067

திராட்சையுள், பேரீச்சை யுள்,உணவும் நன்மைத்
தராதழிக்கும் பாழ்மதுவும் உண்டு
..................குர்ஆன் :16:76மதுவோடு வரும் அழிவு !
தொழுவாய் முறையாய், தவிர்ப்பாய்த் தொழுகயை,
போதைத் தெளியாத போது
......................குர்ஆன் :04:43

மதுவை அருந்தத் தடைஉண்டு அதுபோன்று
விற்கவும் உண்டு தடை
...............................முஸ்லிம் 3220

மதுவுக்கு உருதருவோர் விற்போர் பருகுவோர்,
சுமப்பார் இறையின் பழி
..............................இப்னுமாஜா 3371

மதுவை அருந்தி மதியை இழப்போர்,
மிதிக்கப் படவேண்டும் ஆம்
...........................புகாரி 2316

குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி காட்டு,
தொடர்வோரை சாவுக்குள் ஓட்டு
....................... அபுதாவூத் 3886

August 23, 2017

தாழ்வுமனம் தவிர்...!


1066)
’என்னடா வாழ்விது’ எனத்தாழும் எண்ணம்கொல்,
என்னுடைய வாழ்விதெனக் கொள்


1067)
என்ன முடியும் உனக்கென்போர் நாணக்கேள்,
‘என்ன முடியாது எனக்கு’


1068)
சாதிக்க வில்லையெனச் சோராதே, இன்றுலகில்
வாழ்வதே சாதனைதான் போ


1069)
எதனால் இழக்கிறாய் உன்தெம்பு, எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு


1070)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு,
வரம்கேட்டு நிற்பது எதற்கு

இயற்கையின் கடிகாரங்கள் / ’அலாரம்’கள்


1061)
கரிச்சான் குயில்தன் குரலை எழுப்பும்
அதிகாலை மூன்று மணிக்கு


1062)
குயில்தன் குரலெடுத்துக் கூவும் அதிகாலை
நான்குமணி ஆன உடன்


1063)
நான்குக்கும் ஐந்துக்கும் மத்தியில் தான்சேவல்
கூவும் பெருங்குரலில் ஆம்


1064)
காகம் குழுவாய்க் கரையத் துவங்கினால்
ஆகும் மணிஅப்போது ஐந்து


1065)
சரசர வென்றுமீன் கொத்திச் சிறகசையும்
போது மணிஆகும் ஆறு

August 22, 2017

பாட்டி வைத்தியம் - 5 _ மோர்...மோர்...மோர்


1056)
கம்பங் களியோடு மோர்கலந்து உண்போர்முன்
பம்மும் வெளிஉலவும் சூடு


1057)
நெய்சேர்த்த வெந்தயத்தை மோர்கலந்து உண்பவர்க்கு
வாய்க்கும் வலிக்கா வயிறு


1058)
மோரை அருகம்புல் சாறுடன் உட்கொண்டால்
நீரிழிவு கட்டுப் படும்


1059)
பித்தம் கபம்வாதம் என்னும்முக் குற்றம்
சமப்பட,மோர் நாளும் குடி


1060)
மோர்,மிளகு கச்சக்காய், பச்சிலை, வெந்தயம்
நீர்க்கட்டிப் போக்கும் மருந்துAugust 13, 2017

சிசுவென்று நினைத்தயா..!

செய்தி : உத்திரப்பிரதேசம் .. அரசு மருத்துவமனை...ஆக்சிஜன் பற்றாக்குறை..60மணி நேரம் .. 70குழந்தைகள் மரணம்
1051)
சிசுசிதைமேல் நின்று பசுவதைப் போக்க
நடக்கிறது போராட்டம் நன்று


1052)
பிஞ்சென்றால் என்ன, பணம்கொஞ்சம் பாக்கிவைத்தால்
பிய்த்தெறிய அஞ்சாது அரசு


1053)
எரிவாயு ஏனென்று சொன்னது உயிர்வாயு
வீணென்று நின்றது அரசு


1054)
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றும் பதறாத
வஞ்சகர்க்கு வைப்போம்வா நஞ்சு


1055)
நம்பிவந்த பிஞ்சுகளைக் காப்பாற்றா நண்பா!ஏன்
இவ்வாழ்வு, நாண்டுகொண்டு சாவு


August 12, 2017

தேவன்வழி - 3 :- வாழ்வியல்..!

என்குறள் :- 1046 -1050
தீமைக்குத் தீமையைச் செய்யாதிரு, எல்லார்க்கும்
நல்லதையேச் செய்ய நினை

ரோமர் 12:17

உத்தமர்க்கு உத்தமராய், நல்லவர்க்கு நல்லவராய்,
மாற்றுக்கு மாற்றாய் இரு

சங்கீதம் 18:25

கோபம் வரும்பொழுது உன்இதயத் துள்பேசு
பாவங்கள் செய்யாது இரு

சங்கீதம் 04:04

இரக்கமில்லா உள்ளம் உடையோர்ர்க்கு இரக்கமில்லாத்
தீர்ப்புத்தான் வந்தடையும் ஆம்

யாக்கோபு 2:13

தோற்றத்தை வைத்தெதையும் சொல்லாமல், நீதியின்கீழ்
சொல்லப் படவேண்டும் தீர்ப்பு

யோவான் 07:24

மரம்... தப்பினால் , மரணம் !

என்குறள் :
1041)
வீட்டிலுள்ள மாட்டிற்கும் முன்நாம்நம் நாட்டுக்குள்
காத்திருக்க வேண்டியது காடு


1042)
மழைப்பிச்சை வாங்கும் மரத்தை அழித்தால்
மடிப்பிச்சைத் தான்எடுப்பாய் ஆம்


1043)
கதவாய் மரத்தையெல்லாம் மாற்றிவிட்டு, காற்று
வரத்திறந்து வைப்போம் கதவு


1044)
ஆறா யிரம்தான் விலைபோகும் நூறா
யிரம்கரு தாங்கும் மரம்


1045)
லட்சம் நடுவதே லட்சியம் என்பது
அலட்சியமா கும்நட்ட பின்பு

August 6, 2017

நட்புக்கும் மேலேது இங்கு !

நட்புதின வாழ்த்துகள் !

1036)
”ஏன்வேண்டும் ஏணி!” எனக்குமுன்,என் நட்பவன்
’நான்’என நிற்கும் பொழுது


1037)
மகிழ்வில் கலப்போரைக் காட்டிலும், உந்தன்
இகழ்வில்உடன் நிற்பதுதான் நட்பு


1038)
பங்கெடு நண்பன்வெல் லும்பொழுது, பங்குகொடு
தோற்றுஅவன் வாடும் பொழுது


1039)
ஏனென்றுக் கேட்டுப்பின் தீர்ப்பது தான்உறவு,
தீர்த்தப்பின் தான்கேட்கும் நட்பு


1040)
விருதுதரும் கையை விடமேலாம், தோற்கும்
பொழுதுதொடும் ஒற்றை விரல்

August 1, 2017

நீரா ? ... தண்ணீரா ??1031)
நீர்சிக்க வைத்தேன் வலையொன்று; ’நீர்’சிக்கி
வீழ்த்தினீர் நீரின் சிறப்பு


1032)
மீன்என்றும் வேண்டாது நீர்வற்ற வேண்டுமென;
நானும் அதுபோலத் தான்


1033)
நீர்சூழ்ந்தால் வீணான மண்ணாகும் தீவு;என்னை
’நீர்’சூழ்ந்தால் நானாவேன் பூவு


1034)
’நீரில்லை’ என்றால்நான் யார்கூறு; நீரில்லை
என்றால் அதுஇல்லை ஆறு


1035)
நீர்தேங்கி நின்றாலும் ’நீர்’தங்கிச் சென்றாலும்
ஊர்சொல்லும் பாசமுண்டங்கு என்று