இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 21, 2016

நபிமொழி - 11 ... பயமேன் !


நானிருக்க பயமேன் !
766)
அஞ்சாதீர் நீர்எதற்கும்; பார்த்தபடி கேட்டபடி
உங்களுடன் தானிருப்பேன் நான்
............... குர்ஆன் 20:46

767)
எமைநீர் நினைத்திருப்பீர்; நானும் உமைத்தான்
நினைத்த படியிருப்பேன் ஆம்
.................. குர்ஆன் 2:152

768)
அறிவுரையைத் தந்தோம் பிறர்க்கு; மறைந்திருக்கும்
செய்தி அறிவார் பிறகு
........................ குர்ஆன் 38:87 88

அவனிருக்க பயமேன் !
769)
இறையை நினைத்துத் தொழும்பொழுது உந்தன்
அருகில் இருப்பான் அவன்
.................... முஸ்லிம்5212

770)
அருகில் இருப்பான் பதிலும் தருவான்
இறைமுன் துதிக்கும் பொழுது
.................. குர்ஆன் 2:186

நெருப்புடா !


ஆண்_டா ! நெருப்பு_டா !!
761)
கத்தி உறைவிடுத்து; சுற்றித் தலையெடுப்பான்;
கத்தி அடங்கும் களம்


762)
உறையைவிட்டு வந்துவிட்ட வாளாய்; எதிரை
உறையவிட்டுப் பார்ப்பான் இவன்


763)
குத்தவரும் கத்திக்கும் நெஞ்செடுத்துக் காட்டிநிற்பான்;
உக்கிரத்தின் உச்சம் இவன்


764)
வெருட்டும் எதிரிகண்டு அஞ்சான்; வரட்டும்
எதிர்கொள்வேன் என்பான் இவன்


765)
கொல்ல வரும்பகையை வெல்ல; ஒருதிசைக்குச்
சொல்லிவர வைப்பான் இவன்


பி.கு : கபாலி / ஒரு குறியீடு ... எல்லார்க்குள்ளும் இருக்கும் இத்’தீ’

June 16, 2016

நபி மொழி - 10 ..... பொதுவியல் !


என்குறள் 755 - 760 :
முஸ்லிம்4151
விருந்தில் பணிவாய் அமர்ந்துண்ணும் பண்பு;
விரும்பத் தகுந்ததா கும்



முஸ்லிம்4182
ஒருவர் உணவை இருவர் பகுப்பார்;
குறைவாய் இருக்கும் பொழுது



முஸ்லிம்4399
மூவர் இருக்கும் இடத்தில் இருவர்
ரகசியம் பேசத் தடை



முஸ்லிம்5122
அகத்தில் மலர்ந்து முகத்தில் சிரிப்பாய்;
ஒருவரைச் சந்திக்கும் போது


முஸ்லிம்5185
இல்லாது அழிந்து விடுவார்; ஒருவர்தம்
எல்லையை மீறும் பொழுது

June 14, 2016

ஆறு... !


ஆற்றியல் !

751)
முன்நகர்ந்த பின்னால்;பின் வாங்கு வதுதவறு;
பின்னோக்கிச் செல்வதில்லை ஆறு


752)
முன்நகர்ந்தால் தான்ஆறு; தேங்கிப்பின் நோக்கத்
தொடங்கினால் உண்டுதக ராறு


753)
ஆற்றுக்கு அணையிட்டால் சந்ததிக்குச் சோறு;
வழிவிட்டால் மீந்திருக்கும் சேறு


754)
ஆற்றை மறிக்க முயல்வதற்கு முன்சேர்ந்த
சேற்றை அகற்ற முயல்


755)
தாய்மடியைத் தேடிவரும் சேய்போன்று பாய்ந்து
கடலடியில் சேர்ந்துவிடும் ஆறு

June 6, 2016

நபி மொழி - 9 .... ரமலான் நோன்பு ...!


என்குறள் : 741 - 750

முஸ்லிம் 1956
நரகம் அடைபடும், சொர்க்கம் திறக்கும்
ரமலான் தொடங்கும் பொழுது


புகாரி 2008
நன்றெதிர் பார்க்கும் ரமலான் தொழுகைமுன்;
நின்குறைமன் னிக்கப் படும்


முஸ்லிம் 1958
பிறைபார்த்து நோற்று; பிறைபார்த்து நோன்பைத்
துறப்பது மார்க்க மரபு


முஸ்லிம் 1990
கரும்பொருள் கண்மறைந்து, வெண்பொருள் முன்தெரியும்
வேளைக்குள் உண்டு பருகு


முஸ்லிம் 2004
விரைந்துதன் நோன்பைத் துறந்து, விரைந்து
தொழுவோர் இறைக்கு விருப்பு


முஸ்லிம் 2023
தன்னடக்கம் கொண்டோர்தாம் நோன்பிருக்கும் அன்று
துணையோடு இருந்தாலும் நன்று



முஸ்லிம் 2119
தானேமுன் வந்(து)அவன் நன்செய்வான்; நோன்பில்
உணவை உணர்வைவிடு வோர்க்கு


முஸ்லிம் 2093
இருபெரு நாளிலும் நோன்பில் இருப்பதற்கு
மார்க்கத்தில் உண்டு தடை


புகாரி 1975
பகலெல்லாம் நோன்பிருந்த பின்இரவு எல்லாம்
தொழுவதற்கு உண்டு தடை

June 5, 2016

நபி மொழி - 8 ... போரும்... தற்காப்பும் !

736)
பகைவரை நேராகச் சந்திக்க நேர்ந்தால்
பொறுமையைக் காத்தல் சிறப்பு
............... புகாரி 2833

737)
தாக்க இருக்கும் எதிரியை; சொல்லாமல்
தாக்க அனுமதி உண்டு
....................... முஸ்லிம்3564

738)
சூழும் எதிரியைச் சூழ்ச்சியால் வீழ்த்திவிட
போரில் அனுமதி உண்டு
..................... முஸ்லிம்3580

739)
எதிரியை ஏமாற்றி வீழ்த்திவரும் வெற்றி
மதிப்பை இழந்து விடும்
...................... புகாரி 3032

740)
வஞ்சகன் என்றறிந்த பின்அவரை தந்திரத்தால்
வெல்ல முனைந்து விடு
.................... புகாரி 3033

June 4, 2016

அவள் பார்வை ... கூடல் !



731)
தீண்டாது தன்எல்லைத் தாண்டும் அவன்செயலால்
தூண்டாது எரியும் திரி


732)
மோகத்தின் தாகத்தால் என்இடைப் பற்றும்நீ;
மேகத்து இடைப்பற்றும் தீ


733)
சம்மதம் கேட்கும் வரைதான் அவன்குழந்தை
தந்தபின்நான் ஆவேன் அது


734)
ஆனவரை நானவரை அள்ளி அணைத்திருப்பேன்
ஆணவரே நாணும் வரை


735)
என்விருப்பை முன்வந்து தன்விருப்பம் என்றுரைக்க
என்உருவைக் காட்டுமவர் கண்

June 2, 2016

நபி மொழி - 7 .... மரணம் !


என்குறள் : 726 - 730


இறைவிருப்பம் இன்றி எவரும் இறக்க
வழியில்லை என்பது அறி
.................................. குர்ஆன் 03:145

மறைவாய் இருந்தாலும் நிச்சயித்த நாளில்
மரணம்உனை வந்துஅடையும் ஆம்
........................குர்ஆன் 04:78

இறையின் வழியில் அறப்போர் புரிந்து
மரணம் அடைந்தால் சிறப்பு
...............................முஸ்லிம்3824

அறப்போரில் வீழ்ந்தோர் குறைகள்; கடன்தவிர்த்து
மன்னிக்கப் பட்டு விடும்
.................................... முஸ்லிம்3830

இன்னலெதிர் கொள்ளாது இறக்க நினைப்போரின்
முன்வந்து நிற்கும் இழிவு
................................. முஸ்லிம்5203