இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 30, 2017

அதுஒரு பொற்காலம் ..!1026)
பொட்டிட்டு கும்பிட்டக் காலம் வரை,மரத்தை
வெட்ட விடவில்லை நாம்


1027)
கோலத்தை, சாணியை, சூடத்தை, விட்டோரின்
காலத்தைச் சுற்றிஇன்று சீக்கு


1028)
ஆல்,வாகை, வேம்பு,அரசின் கீழிருந்த நாள்வரையில்
சுத்தமாய் விட்டிருந்தோம் மூச்சு


1029)
சுத்தமென்று பாட்டிலுக்குள் நீரை அடைத்தபின்பு,
பொத்தலாகிக் போனது வாழ்வு


1030)
தாதைவடி கட்டிவிட்டு, ஏதுமிலாத் தண்ணீரை,
தாதுநீர் என்கிறோம் இன்று

(தாதுநீர்=மினரல் வாட்டர்)

மழை... மழை..... மழை !1021)
மழைக்காலம் என்றொன்று இருந்ததாம் அன்று,
மழைநாட்கள் மட்டும்தான் இன்று


1022)
குடையென்ன செய்து விடமுடியும், ஓயாது
அடைமழை பெய்யும் பொழுது


1023)
தொடரும் கொடும்வெயிலை ஏற்கும் மனது
நடுங்கும், மழைவலுக்கும் போது


1024)
மழையில் ஒதுங்கநடை தேடி அலைவோரின்
கையில் விரியாக் குடை


1025)
குடைமறந்த நாளில், தவறாமல் வந்து
விடுமெனக்கு மட்டும் மழை

July 27, 2017

கலிகாலம்.... இன்று !1016)
தேர்தரவே அந்நாளில் ஆளுண்டு, தொண்டைக்கு
நீர்தரவும் ஆளில்லை இன்று


1017)
பின்நின்று தூற்றும் உறவுண்டு, முன்வந்து
தூக்கத்தான் ஆளில்லை இன்று


1018)
மலர்ந்தால் மதிப்பது உதிர்ந்தால் மிதிப்பது
உலக இயல்பானது இன்று


1019)
கதைகட்டும் கூட்டம் நினைத்தால் எதையும்
சிதைத்து விடக்கூடும் இன்று


1020)
உதவிக்குத் தட்டும் பொழுது கதவுகள்
கல்லாகிப் போகிறது இன்று

July 26, 2017

ஓவியம் : 2 ..... அவளதிகாரம் !என்குறள் ; 1011 - 1015

கல்லில் இடித்துவிட்டு, மன்னிப்பும் கேட்டுவிடும்
பிள்ளைகுணம் யார்க்குவரும், செல்

கலங்குவோர் தானழுவார், ஆனால், கலங்கியது
இவ்வுலகு உன்அழுகை கண்டு

ஆறுதல் சொன்னால், அடைக்கலம் ஆகிவிடும்
அன்புக்கு அலையும் மனம்

’தன்னால் பிறர்கிழிவு கூடாது’ எனும்எண்ணம்
கொண்டோரைத் தான்சூழும் கேடு

மாறுதல் வேண்டுவோர்க்கு ஆறுதல் தந்தோர்பின்
’ஆண்டவன்’ வந்துநிற்பான் ஆம்

ஓவியம் : 1.. நான் , நான் தான் !எந்தப்புற்றில் எந்தப்பாம்பிருக்கும் என்னும் பயத்தைவிட, பாம்புகளே இல்லாதப் புற்றுகளை கவலையுடன் கவனித்துவரும் காலக்கட்டத்தில், எதிர்பாராத ஒருப்புற்றில் இருந்து ஓவியமாய்க் கிளம்பி இருக்கிறது அனகோண்டா ஒன்று ! அது... பிக்பாஸ் (BIG BOSS) நிகழ்ச்சியில் ’’ஓவியா’’.
பெரியவர்களின் வாயிலாக, வாழ்வியல் கருத்துக்களை, கடினமானத் தத்துவங்களைக் கேட்கும் போது, அதைத் திணிப்பாகவே உணர்ந்து, தவிர்த்து செல்லவே விரும்புகிறது இன்றைய இளைய சமுதாயம்.. ஆனால்.....
20களில் உள்ள ஒரு சின்னப்பெண், எந்தவிதமான முன் தயாரிப்பும் இன்றி, போகும்போக்கில் , சொல்லிச் செல்லும் பேச்சுவழக்குகள் எல்லாமே வாழ்வியல் தத்துவங்களாய் அமைந்து, இளைஞருக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பிடித்துப்போகும் அளவுக்கு ஆழமானதாக , எளிதாக, விரும்பிஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதென்றால்., இதை மிகஅதிசயமான, அபூர்வமான நிகழ்வாகவேக் கருத வேண்டி இருக்கிறது .

#கவர்ந்த சில நிகவுகள், வாய்மொழிகள்.... இங்கே ’என்குரல்’வடிவில்
#அது ஒருபொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் எனினும், நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொண்டால் தவறில்லை.

என்குறள் ; 1006 -1010

விண்ணே எதிர்நிற்கும் போதும் எனக்கென்ன,
என்னோடு நான்நிற்கும் போது

அறிந்துகொள்ளச் சொவ்வேன்,என் சொல்லைப் புரிந்துகொள்ள
வில்லையென்றால் நீதான் பொறுப்பு

விட்டுத் தருவதை ’வீழ்ந்துவிட்டாய்’ என்றிழிந்தால்
கெட்டுவிடப் போவதில்லை நான்

உண்மையை ஓர்முறை பேசிப்பார், உன்னைப்
உனக்குப் பிடித்து விடும்

எல்லார்க்கும் தான்உண்டு சோகம்அதை எல்லாம்
வெளிக்காட்டி என்ன பயன்July 14, 2017

அச்சம் தவிர்.. !


1006)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


1007)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை


1008)
மிரட்சிக்கு இடம்கொடுத்தால் மாய்ந்து விடுமாம்
புரட்சித் தடம்பதிக்கும் வாய்ப்பு


1009)
அச்சம் வழியும் மனமுடையோர்க்கு உச்சம்
அடையும் வழியில்லை ஆம்


1010)
எதிர்பற்றிச் சிந்தித்து அடங்காது எதிர்கொண்டு
சந்திப்போர்க்கு உண்டு சிறப்பு

July 13, 2017

இருவரி கொண்டுன் .. கண்முன் வரவைப்பேன் ... காட்சி..!


இயற்கை:
1001)
மலைமுகட்டில், நிற்கும் மரக்கிளையில், தொங்கும்
இலைநுனியில், தூங்கும் பனி


1002)
தலைமேல் அமர்ந்த பனித்துளி, காய்ந்தால்,
தலைநிமிரும் புல்லின் நுனி


1003)
மூங்கிலிலை மேல்தூங்கும் நீர்த்துளி, கைதாகும்
பாயும் கதிரோன் ஒளி


1004)
மழைநின்ற மாலைப் பொழுது, நனைந்த
இலைகள் கவிழும் அழுது


1005)
மலையில் வழிந்தோடும் தண்ணீர் விழுது,
வழியாடும் ஆலம் விழுது


படங்கள் :
தமிழ் ..!


வாழ்க உறவுகள் !
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை . இந்தப்பதிவுடன் என்குரலை, என்குறளாகப் பதிந்து 1000 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறேன் . குறள்விளக்கமாக ஒரு 1330 + இந்த 1000 + இன்னும் பதிவிடாமல் எப்படியும் ஒரு 1500 ., ஆகமொத்தம், ஏறக்குறைய, 4000 குறள்கள் என்னும் கணக்கில் (இப்போது :)இருக்கிறேன் .. இறையருளுக்கும், நட்பு வட்டத்துக்கும், இப்படி ஒரு முயற்சிக்குப் புள்ளிவைத்து ’உங்களால் முடியும் அண்ணே’ என்று வி(உ)தைத்து உந்தித் தள்ளிவிட்ட சகோ. பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும் எல்லாச் சிறப்புகளும் உரித்தாகுக !

996)
தாயே, உனைவாழ்த்தச் சொல்லில்லாச் சேயானேன்;
உன்மொழியால் சொக்கியதென் நாவு


997)
முறத்தால் புலியடித்தப் பெண்ணும், அறத்தால்
பசுகாத்த மண்ணும் எமது


998)
கணியன்பூங் குன்றன் கணித்தான் தனிநின்று
’யாவரும் கேளிர்’தான் என்று


999)
பாரதிரக் கூறுவேன் பாரதிதான் சாரதியாம்;
ஆதி அவன்தான் நமக்கு


1000)
முப்பதுக்கு ஓர்பாரதி; நூற்றி இருபதிப்போது;
எப்போது யார்வருவார் இங்கு


July 12, 2017

தேவன்வழி - 2 :- அன்பு..!என்குறள்:- 991 - 995

ஒருவரின் மேல்ஒருவர் அன்பாய் இருங்கள்,நான்
உம்மேல் இருப்பதைப் போல்

யோவான் 113:34

உன்மேல்,நீ கொண்டிருக்கும் அன்பைப்போல், கொள்பிறர்மேல்
என்பது அனைத்திற்கும் தீர்வு

கலாத்தியர் 05:14

பிறரிடத்தில் என்னஎதிர் பார்த்தாயோ. செய்வாய்
அதைநீ முதலில் அவர்க்கு

மத்தேயு 07:12

வருத்தமுடன் பாரம் சுமப்போரே, என்னிடத்தில்
வாருங்கள், நான்தருவேன் ஓய்வு

மத்தேயு 11:28

உன்வாசல் தட்டுகிறேன், கேட்டுவந்தால், வாழ்ந்திருப்போம்,
உன்னுடன்நான் என்னுடன் நீ

வெளிப்படுத்தின விஷேசம் 3:20

நபிமொழி - 21 :- நீர் மேலாண்மை..!


என்குறள்:- 986 - 990

தேவைக்கு அதிகமாய் மீந்துள்ள தண்ணீரைத்
தேவையின்றித் தேக்கிவைத்தால் தப்பு
....... புகாரி 2353

வழிந்தோடும் நீரை, வழிப்போக்கர் தீண்டும்
வழியைத் தடுப்பது தீது
.................... புகாரி 2357

வான்மழை மூலம் இறந்த நிலத்துக்கு
நல்லுயிர் தந்தான் அவன்
.................. குர்ஆன் 16:65

சூல்மேகம் கொண்டு;வான் நீரை அவன்தருவான்;
பாழ்செய்வாய் தேக்காமல் நீ
................ குர்ஆன் 15:22

தண்ணீரைக் கொண்டு மனிதரைச் செய்தான்-ஆம்
தன்நிகர் இல்லான் அவன்
................... குர்ஆன் 25:54

July 9, 2017

குறுக்குசால் ஓட்டும் வாழ்வு ...!


981)
வாழ்வில் சிரிப்பதற்குக் கற்றுக்கொள், வாழ்வே
அழுவதற்குக் கற்றுத் தரும்


982)
’மீண்டேன்’ எனத்தெம்பாய்க் கண்விழித்தால், மீண்டும்
சுழியத்தைத் தாண்டவில்லை வாழ்வு


983)
தேர்வுவைத்தப் பின்னர்தான் தேர்வெழுதத் தீர்வுகளைக்
கற்றுத் தருகிறது வாழ்வு


984)
ஒன்றின்றி வாழ்வில்லை என்றிருப்போர் வாழ்விலதை
ஒன்றாமல் செய்துவிடும் வாழ்வு


985)
மிகப்பழையத் தீர்ப்பை, மிகப்புதியத் தீர்வைப்போல்
நாம்நடத்திச் செல்வதுதான் வாழ்வு

July 6, 2017

தேவன்வழி - 1.... மேய்ப்பாளனின் வாக்கு !!


வாழ்க உறவுகள் ....
தேவனின் மொழியும், தேவனின் வழியும் ...எல்லாரையும் சென்றடையும் வகையில், எளிய தமிழில், எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )
என்குறள்:- 975 - 980

நான்இருப்பேன் உன்னுடன், நான்பலம் தந்து
விடுவேன், திகையாது இரு

ஏசாயா 41:10

நல்லவற்றைப் போதிப்பேன், நீநடந்து செல்வதற்கு
நல்வழியைக் காட்டுவேன் நான்

ஏசாயா 48:17

என்சமுகம் உன்முன்னால் தான்செல்லும், உன்னோடு
இருந்துஇளைப் பாறவைப்பேன் நான்

யாத்திராகமம் 33:1

என்கிருபை என்பலம் போதும் உனக்கு,
பலவீனம் ஆகும் பொழுது

2கொரிந்தியர் 12:09

உன்வழியைக் காட்டுவேன் நானுனக்குப் போதிப்பேன்,
உன்மேல்கண் வைத்திருப்பேன் நான்

சங்கீதம் 32:08

முத்தமது....! முத்தம் அது......!!


முத்ததின வாழ்த்துகள் :))
துரைக்குறள் :- 971 - 975

இதழொன்றில் பக்கமிரண் டேதான் எனினும்
எழுதித்தான் தீராது அது

என்னில் அடங்கா உனைமடக்க நான்தருவேன்
எண்ணில் அடங்கா அளவு

செவ்வாயே ஆகாதென் போருமுண்டு; ஆனாலுன்
செவ்வாயே போதும் எனக்கு

வியர்க்காது உதடுக்கு எனினும் வியர்க்கவைக்கும்
என்பதுதான் இங்கு வியப்பு

’வரம்வேண்டும்’ என்பேன் ’தரவேண்டும் என்றால்
தரவேண்டும்’ என்பாள் அவள்