இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 24, 2017

நபிமொழி - 20 :- இறையின் கணக்கு...!


உறவுகளுக்கு.... ரமலான் வாழ்த்துகள்
துரைக்குறள் :- 966 - 970

நன்றொன்றைச் செய்ய நினைத்தவுடன் உன்கணக்கில்
சேர்ந்துவிடும் நன்றின் பலன்
................... புகாரி 6491

அந்நன்றைச் செய்து முடித்தவுடன் உன்கணக்கில்
கூடிவிடும் நன்றுபல நூறு
..................... புகாரி 6491

பலனெதிர் பாராமல் நன்மையைச் செய்தால்
பலனுண்டு பத்து மடங்கு
...................... முஸ்லிம் 5215

நன்மை புரிவோர்க்குக் கண்மறைந்து காத்திருக்கும்
கண்குளிர வைக்கும் பரிசு
..................... குர்ஆன் 32:17

நன்மையைக் கொண்டு வருவோர்க்கு, அதைவிட
நன்மை அமைந்து விடும்
..................... குர்ஆன் 28:84

June 23, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 3


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் மூன்றாம்படி இது ...

961)
வந்தான் அரக்கன் மயில்உருவில். கந்தன்
கவனம் கவண்அரு கில்

(கவண் – கவட்டை, ஆயுதம்)
[பழிமொழி - கந்தன் கவனம் கவட்டையில்..]

962)
வாழ்நாளில் ஆநெய்க்கு முன்காலம், பூநெய்க்குப்
பின்காலம்
தந்தோர்க்கு வாழ்வு
(ஆநெய்=பசுநெய், பூநெய்=தேன்)
[பழிமொழி - ஆனைக்கொரு காலம், பூனைக்கொரு காலம்..]

963)
தேர்ந்தெடுத்துப் பந்திக்க முந்து, சேர்ந்தபின்
படைக்கச் சிலகாலம் பிந்து,
(பந்திக்க – இணைபார்க்க, படைக்க – குழந்தைபெற)
[பழிமொழி - பந்திக்கு முந்து..... ]

964)
களவும் கவறு(ம்) அற,அதற்குக் கற்றக்
களவோடு கத்து மற
(கவறு – சூது, அற - தவிர், கத்து – பொய், கயமை )
[பழிமொழி - களவும் கற்று மற ..]

965)
ஆடியில் வீசும் அடர்காற்று பட்டவுடன்
அம்மை* பறந்து விடும்
(*நோய்)
[>பழிமொழி - ஆடிக்காற்றில் அம்மி பறக்கும்..]

June 22, 2017

உன்னால் முடியும்...!


956)
எட்டு திசையும் வழிபிறக்கும், தட்டும்
கதவு திறக்காத போது


957)
விடியுமென நம்பா விடினும் விடியும்;
முடியும் எனமுதலில் நம்பு


958)
தொடங்கும் எதற்கும் இருக்கும் முடிவு,
முதலில் துணிந்து தொடங்கு


959)
உன்னால் எதுவும் முடியும் எனநம்பு,
தன்னால் நடக்கும் அது


960)
எதுவந்த போதும் எதிர்கொள்வாய் என்றால்
இதுவும் கடந்து விடும்

June 18, 2017

அப்பா.. மறைக்கப்பட்ட சில உண்மைகள் !!

அப்பா தினம் !

951)
பெண்சுமப்பாள் மாதம்பத்து, ஆண்சுமப்பான், வாழ்வெல்லாம்,
பெண்அவளின் சுற்றத்தைச் சேர்த்து


952)
’ஒன்றும் தெரியாதுஉன் அப்பாவுக்கு’ என்றே
அறிமுகம் செய்வாள்தாய் சேய்க்கு


953)
சிரிக்கும்பெண் பேரழகு; சூழலின்பின் நிற்கும்
சிரிக்காத ஆணும் அழகு


954)
குலுங்கிஅழும் அம்மாவைக் காட்டிலும்,அப் பாவின்
கலங்கும்கண் காட்டும் தவிப்பு


955)
அம்மா அழகென்று அறிவோம், அவளறிவாள்
அப்பாதான் பேரழகு என்று

கருப்பு .. ஆம் ... நான் கறுப்பு ...!


946)
கருப்பென்னும் காரணத்தால் யாரும் நிழலில்
ஒதுங்க மறுப்பதில்லை ஆம்


947)
சிகப்பை அழகாய், கருப்பை இழுக்காய்,
வகுப்போர் உறவை விலக்கு


948)
குயிலை, நிறத்தால் குறிப்போர் இயல்பை
அறிந்து,அவரை மொத்தம் ஒதுக்கு


949)
கருப்பை இழிவென்று உரைப்போர், கரும்பலகை
மேல்எழுதிக் கற்றவர்தாம் பார்


950)
மணக்கும் மலரிலும் இல்லை கருப்பு,
மனிதர்க்கு அதுதான் சிறப்பு

June 16, 2017

எமன்.... நெகிழி.... ! (ப்ளாஸ்ட்டிக் )



936)
நெகிழியில் சூடாய்த் தரும்உணவு ஆகும்,
தகழியின் மத்தியில் நஞ்சு

(தகழி = தட்டு)

937)
இளநீர் குடிக்க, நெகிழிக் குழாய்நட்ட
அன்றே விதைத்துவிட்டோம் நஞ்சு


938)
நெகிழியை ஊரில் விதைத்தாய், அரிசிக்குள்
வந்து விளைகிறது பார்


939)
வெண்கொக்கு அலைந்த வயல்வெளி எங்கிலும்
நுண்நெகிழிப் பைபறக்கும் இன்று


940)
மண்பானை வாழையிலை மஞ்சள்ப்பை கொன்று,
நெகிழிக்குத் தந்துவிட்டோம் வாழ்வு


941)
பாழ்மதுவோ பாட்டிலில் பாதுகாப் போடுவரும்,
பாழ்நெகிழிப் பாக்கெட்டில் பால்.


942)
நெகிழியில் உண்போர் அறியார், மெழுகையும்
சேர்த்துத்தான் உண்கிறோம் என்று


943)
நெகிழிக்கு உரம்சேர்க்கப் பூசும் மெழுகு,உள்
சேர்ந்தால் அழுகும் குடல்


944)
மகிழ்வில் நெகிழியில் உண்டால், அழிவுள்
அமிழ்ந்து விடும்வரும் வாழ்வு


945)
நிகழாமல் நின்றுவிடும் வாழ்வு, நெகிழியாய்
மூளையும் மாறிய பின்பு