இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

என்னதான் செய்வேன் நான் ?


286)
பழத்தோடு காத்திருப்பாள் என்றோடி வந்தேன்;
பழத்தோடு தானிருந்த(து) அங்கு

287)
கல்போன்ற சொல்கொண்டு வீசுவாள்; கல்க்கண்டாய்
பூச்செண்டாய் வீழும்என் மேல்

288)
சொல்லும்ஓர் வார்த்தையையும் வாய்க்குள் முடக்கிவிடும்
வெல்லும்கூர் வேலொத்த கண்

289)
தோள்த்தாங்கும் முன்தொங்கும் ஆல்விழு(து); ஆள்த்தாக்கும்
முந்தும்உன் கண்ணீர் விழுது

290)
மின்னஞ்சல் வேகத்தை மிஞ்சும்உன் கண்ணஞ்சல்
கண்டவுடன் அஞ்சும் மனம்

November 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்




அன்பும்...அமைதியும் :

281)
அன்பென்னும் ஆயுதம் ஆளுமிட அண்மையின்
முன்பென்றும் வாராது வம்பு

282)
மகிழ்ந்த மனமுடையோர் முன்வாசல் தன்னில்
முகிழ்ந்து வரும்நல் உறவு

283)
அமைதியாய் உள்ளம் சமைந்துவிட்டால் சுற்றி
அமைவ(து) அனைத்தும் விருந்து

284)
நினைப்பதை எல்லாம் நிறைவாய் நினை;உந்தன்
எண்ணம்போல் தானமையும் வாழ்வு

285)
ஒத்து வரவில்லை என்றபின் பேசா(து)
ஒதுங்கி விடுவது நன்று

November 14, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

எல்லாம் அவளே:



276)
பிணக்கில் விழவைப்பாள்; நானறிவேன் இன்று
கணக்கில் சிலஇழப்பேன் என்று

277)
கொழுந்துவிட்டாள் என்னுள்; இடம்கொடுத்தேன்; பற்றிக்
கொளுந்துவிட்டால் என்செய்வேன் நான்

278)
கண்ணாடி முன்னாடி நான்நிற்பேன்; உள்ளிருந்து
என்கண்ணுள் பார்ப்பாள் அவள்

279)
ஓர்வார்த்தை சொல்லாள்;கூர்ப் பார்வையால் கொல்வாள்;ஆம்
போரின்றி வெல்வாள் இலக்கு

280)
இதழ்சுழிப்பாள்; ஆழ்சுழலில் சிக்கிய பூவின்
இதழாக மூழ்கும் மனது


November 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்



படி:

271)

விவாதத்தை இன்முகத்தால் வெல்லும் விவேகம்
உனக்குண்டு; கண்டு படி

272)
முன்வந்து காத்திருக்கும் நல்வாய்ப்பை உன்வசம்
ஆக்கும் முறையைப் படி

273)
பிழைக்கவழி காட்டும் நிலைக்கவலி ஊட்டும்
உழைப்பே உயர்வின் படி

274)
சிறுமையைச் சேர்க்கவழி சொல்லும் பொறாமையைக்
கொல்லும் வழியைப் படி

275)
மலரா மலராய் மடிந்தென்ன லாபம்;
மலரும் வழியைப் படி