இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 30, 2015

###### கலாம் ......!!!!!!!!!


546)
அல்லாவின் பிள்ளைஇவர்; இவ்வுலகப் பிள்ளைநம்
எல்லார்க்கும் தந்தை இவர்

547)
வல்லவன் செல்லும் வழியெல்லாம் வாழ்வமையும்;
புல்லும் இவன்கையில் கோல்

548)
விதைத்தவனுக்கு உண்டாம் உறக்கம்; புதைந்தாலும்
தூங்குவது இல்லை விதை

549)
பாவம் புதைக்கப் படும்தீவின் மத்தியில்
நேசம் விதைத்தனர் இன்று

550)
எட்டும் தொலைவிலின்று எட்டாம் அதிசயம்;
எட்டாத் தொலைவிலுண்டு ஏழு

551)
தெற்கில் உதித்து கிழக்கில் மறைந்தது
இரண்டாவது ஆதவன் ஒன்று

552)
கற்பிக்கும் போதேதம் சித்தம்போல் இவ்வுடலை
நீத்தசித்தர் அற்புதத்தைப் பார்

553)
பத்திரிக்கைப் போட்டார்; அவர்பற்றிப் போடாதப்
பத்திரிக்கை ஒன்றில்லை இன்று

554)
உடலொன்றை நீத்தார்; உடன்பல கோடி
உடலுக்குள் பூத்தார் இவர்

555)
தனியொருவன் பின்கூட்டம் கூடுமெனக் காட்ட
இனியொருவன் தேவையில்லை இங்கு


July 20, 2015

கொஞ்ச(சு)ம் கோபக்காரி....!541)
அதிகாரம் மட்டும் அறிவாள்; அதனால்தான்
வள்ளுவனுக்கு என்னவளும் ஒப்பு

542)
கன்னிவந்து சேர்த்தணைப்பாள் என்றோடி வந்தேன்நான்;
கண்ணிவைத்துப் காத்திருந்தாள் பெண்

543)
நொய்நொய்நொய் என்றவள் நைத்தால்தான் பொய்சொல்லும்
நோய்வளரும் என்பதுவும் மெய்

544)
நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளக் கரைவதில்
காக்கையும் காதலியும் ஒன்று

545)
எடுத்தெறிந்து பேசுவாள்; கையில் கிடைப்பது
எடுத்தெறிவாள் பேச்சைத் தொடர்ந்து


July 18, 2015

நீயே எடுத்துக் காட்டு...!


536)
தலைமறையும் முன்வாழ்ந்து காட்டு; தலைமுறையும்
உன்தடத்தைப் பின்தொடரும் வாழ்வு

537)
உன்வரையில் உண்மையைக் கொண்டிருந்தால் இவ்வுலகில்
உள்ளவரை நன்மை தரும்

538)
தவறிழைக்க வாய்ப்பிருந்தும் தள்ளித் தவிர்ப்போரை
தெய்வமெனப் போற்றும் உலகு

539)
வீழ்வதுநீ என்றாலும் அங்(கு)அழுவோர் நால்வர்
எனில்நீ இறைநிலைக்கும் மேல்

540)
தூற்றும் பகையோரின் துன்பம் துடைத்தெறி;
போற்றும் வகையமையும் வாழ்வு

July 11, 2015

பழகப் பழகு !!!531)
மாற்றமெது வந்தாலும் சற்றும் தடுமாற்றம்
இன்றியதை ஏற்கப் பழகு

532)
விருப்பம் நிறைவேற வில்லையெனில் வந்த
வரவை விரும்பப் பழகு

533)
தாழ்ந்து பழகும் குணத்தானின் தோள்தாங்கி
வாழ்த்தி உயர்த்தும் உலகு

534)
எதையும் இலகாய் அணைக்கப் பழகு;
நுழையும்உன் வாழ்வில் அழகு

535)
மாற்றத்தை ஏற்கும் மனமுடையோர்; ஏற்றம்
பெறுவார்தாம் எண்ணும் அளவு

July 7, 2015

முத்தம்...அதுவும் மொத்தம் !!


அவளதிகாரம் : முத்த தினம்
526)
முன்வாயில் முற்றமதில் என்வாயில் வாய்வைத்தான்;
பின்சொன்னான் முத்தமது என்று527)
இதழால் அவன்தீண்டும் அந்நொடியில் பெற்றேன்
முதல்மழையைத் தொட்ட உணர்வு


528)
உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென்று
என்ஆசை கத்தும் தொழுது


529)
தொப்பலாய்த் தான்நனைந்தேன்; என்னவனின் முத்தத்தால்
மொத்தம் உலர்ந்துவிட்டேன் நான்


530)
முத்தம்உண்டு என்றால்தான் என்னுயிர் நீளும்;நான்
முத்த(ம்)உண்டு வாழும் விலங்கு

July 3, 2015

பூவும் ..தலையும்....!


ஏற்றத்தாழ்வு !

521)
நெல்லில் பதரொதுக்கும் ஓர்குழு; அள்ளிஅதில்
நெல்தேடும் இன்னோர் குழு

522)
பட்டுத் துணிதொல்லை என்போரும்; ஒட்டுத்
துணியில்லை என்போரும் வேறு

523)
செல்வரின் சன்னலில் சட்டைகளுண்டு; இல்லாரின்
சட்டையில் சன்னல்கள் உண்டு

524)
இருப்போர்க்குத் தேவையெல்லாம் கைகழுவச் சாறு;
வறியர்க்கோ கையளவுச் சோறு

525)
இல்லார் பசியடக்க ஓடுவார்; செல்வர்
பசியெடுக்க ஓடுவார் பார்

July 1, 2015

பெண்ணை அறிந்தேன்...என்னைத் துறந்தேன்... துறவியானேன் !516)
பெண்வலைக்குள் போய்ப்பாயும் ஆணினம்தான் தன்தலைமேல்
வெண்ணைவைத்துக் காத்திருக்கும் கொக்கு

517)
பெண்மையைக் கண்டுகொண்டேன் இவ்வுலகின் உச்சமென்று;
உண்மையை உண்டகன்றேன் பின்பு

518)
சந்தித்தேன் ஒவ்வோர் நொடியும்தேன்; ஓய்ந்தபின்
சிந்தித்தேன்; எல்லாமும் வீண்

519)
எத்திக்கும் தித்திக்கும் பெண்மானின் மாயையை
புத்திக்குச் சொல்வதுயார் இங்கு

520)
அறிவுரையை எள்ளும்; அறிஞரைக்கீழ் தள்ளும்;
அரிவையின் மேல்கொள்ளும் ஈர்ப்பு