இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 21, 2015

இரட்டை நாக்கர்...!581)
உன்னால் முடியும் திமிறென்பார்; பின்அவரே
ஏன்உனக்கு இத்திமிரென் பார்

582)
தப்பெதுவும் தண்டனைக்கு தப்பாது எனக்கொதிப்பார்;
தப்பேது எனக்குதிப்பார் பின்பு

583)
இப்படித்தான் நீயிருக்க வேண்டுமென்பார்; எப்படியும்
நானிருப்பேன் என்பார் பிறகு

584)
நல்லரைக் கெட்டவர் என்பார்;பின் கெட்டவரை
நல்லவர் என்பார் இவர்

585)
உப்பில்லா ஒன்றினை ஒப்பில்லை என்றுரைத்தால்
தப்பில்லை என்பார் இவர்


August 19, 2015

வந்து....எனக்கென வாய்த்தாளே...!


576)
அதுவேண்டும் என்பாள்; அதுவேண்டாம் என்பேன்;
அதுதான் நடக்கும் பிறகு

577)
புள்ளியிங்கு வேண்டாமே என்றுவைத்தேன் வேண்டுதலை;
துள்ளிவந்து வைத்தாள் அதை

578)
தலையாட்டச் சொன்னாள்; விளையாட்டாய்ச் செய்தேன்;
வினையாகிப் போனது அது

579)
நான்வேண்டும் என்பதை நீவேண்டாம் என்பாய்;
அதுதானே வேண்டும் எனக்கு

580)
முன்நின்று கூறுவாள் பெண்எதையோ; கண்ணில்
தெரிவதோ வேறு கதை

August 9, 2015

இதுதான் வாழ்க்கை !571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில் யார்யாரோ
வந்தமர்வார் என்பதுதான் வாழ்வு

572)
எதிர்பார்த்து இருந்தது எதிர்பாராப் போதுன்
எதிர்வந்து நிற்பதுதான் வாழ்வு

573)
விரும்பாத போதும் விரும்பியதை விட்டுத்
தரவேண்டும் என்பதுதான் வாழ்வு

574)
நான்நான்தான் நீநீதான் என்றால் அதுதாழ்வு;
நான்நீநாம் என்பதுதான் வாழ்வு

575)
யாருமில்லை என்றால் அதுதாழ்வு; யாருக்கும்
பாரமில்லை என்பதுதான் வாழ்வு

August 6, 2015

என்னவளே.....அடி என்னவளே .!!


566)
உன்னில்தான் என்னைநான் கண்டுகொண்டேன்; இன்றுவரை
தன்னைத்தான் கண்டதில்லை கண்

567)
விடையில்லை என்றால் விதியில்லை; நீயில்லை
என்றால் இனியில்லை வாழ்வு

568)
விழலெனக்கு நீரிறைக்க வந்தவளின் பாத
நிழலுக்கு நானே நிழல்

569)
விதையின்றி வேரில்லை உந்தன் நினைவன்றி
வேறில்லை என்னுலகில் பார்

570)
நாணவில்லை சொல்வதற்கு; வாய்ப்புவந்தால் வானவில்லைப்
போல்வளைவேன் நானவளின் முன்பு

August 2, 2015

நட்பு....ட்பு.....பு........பூ ...!!!!!!!!!!

--- நட்பு தின வாழ்த்துகள் ---
561)
ஆகாயம் கீழிறங்கும் நீநம்பு; உறவுக்குள்
ஆதாயம் தேடாது நட்பு

562)
தாளும்தோள் தாங்குவான் தோழன்; அவனால்தான்
வாழுமிந்தப் பாழும் உலகு

563)
வழிமொழிய மட்டுமல்ல; தப்பென்றால் உன்முன்
வழிமறித்தும் நிற்பதுதான் நட்பு

564)
உரிமை தரும்உறவைக் காட்டிலும் நன்றாம்
உறவை உருவாக்கும் நட்பு

565)
ஒருவர் பிரிந்தால் இறப்பது உறவாம்;
இறந்தால் பிரிவதுதான் நட்பு

August 1, 2015

மது.....து........த்து...........த்தூ...!!!!!!!!!!!!!!!


--- ஐயா . சசிபெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ---

556)
பார்’என்று பாடிவைத்தார் பாரதி; பாருக்கு
அவர்பேரே வைப்போம் அதற்கு
(அல்லது)
பாருக்குள் நல்லநாடு என்றதனால்; பாருக்கு
அவர்பேரே வைக்கும் அரசு


557)
தண்ணி அஅடிப்பார்அபார் தன்னை அழிப்பார்பார்
இம்மண்ணில் எங்கும்பார் பார்

558)
பழமாக உண்போரைப் போற்றும்; ரசமாக
வேண்டுவோர்க்கு ஊற்றும் அரசு

559)
பாருக்குள் நோக்கும்நம் பிள்ளைகள்; பாருக்குள்
விக்கும்நாள் பார்க்கும் அரசு

560)
மதுமீறிப் போகுமிடம் பேயாய் முதுகேறிப்
பாயும் அகத்திருக்கும் பாம்பு