இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 29, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 003: நீத்தார் பெருமை] குறளுக்குக் குறளால் விளக்கம்

21)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
விளக்கக் குறள் :
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்


22)
துறந்தார் பெருமை துணைக்கூறி வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
விளக்கக் குறள் :
அ)
துறந்தோரின் நற்பெருமை கூறல்; உலகில்
இறந்தோரை எண்ணுதல் போல்
ஆ)
துறவியர் நற்பெருமை கூறுதலின் ஞாலத்(து)
இறந்தோரை எண்ணுவ(து) எளிது


23)
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு
விளக்கக் குறள் :
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்


24)
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
விளக்கக் குறள் :
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து


25)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி
விளக்கக் குறள் :
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று


26)
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
விளக்கக் குறள் :
அ)
பெரியோர் பெரும்செயல் செய்வார்; சிறியோர்
பெருமைச் செயல்செய்யா தோர்
ஆ)
அருஞ்செயல் செய்வோரே சான்றோர் ; சிறியோர்
எனப்படுவோர் ஒன்றும்செய் யார்


27)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
விளக்கக் குறள் :
அ)
புலம்ஐந்தும் ஆள்பவனைத் தேடிவந்து சேரும்
உலகினை ஆளும் பலம்
ஆ)
ஐம்புலன் ஆட்க்கொள்ளும் ஆற்றல் உடையோரை
என்றும் போற்றும் உலகு


28)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
விளக்கக் குறள் :
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்


29)
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
விளக்கக் குறள் :
அ)
நற்பண்புச் சான்றோர் பெருங்கோபம் கொண்டால்
சிறுகணம் கூடநிலைக் காது
ஆ)
நற்பண்புச் சான்றோரின் கோபம் எதிர்த்து
ஒருகணம் நிற்கஇய லாது

[இங்கே காத்தல் = இரண்டு பொருளும் தருவதாய் உணர்கிறேன்]
30)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
விளக்கக் குறள் :
அ)
அனைத்துயிர் அன்புகொண்(டு) அருள்புரிவார் அந்தணர்
என்ற அறஞ்செய் பவர்
ஆ)
அனைத்துயிர் அன்பால் அருளால் அறமாய்
அணைப்பார் அந்தணர்என் போர்

November 21, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 002: வான் சிறப்பு] குறளும், குறளால் விளக்கமும்

அதிகாரம் 002 : வான் சிறப்பு
11)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

விளக்கக் குறள் :
அ)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்
நல்அமுதம் என்றும் மழை

ஆ)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து காலமெல்லாம்
மண்புகும்அ மிழ்தாம் மழை12)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

விளக்கக் குறள் :
உணவாக்க உற்ற துணையாகும்; உலகுக்(கு)
உணவாய் இருக்கும் மழை13)
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி

விளக்கக் குறள் :
பருவமழை பொய்த்தால் கடும்பசியில் உய்யும்
பெரும்கடல் சூழ்இவ் உலகு
14)
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்


விளக்கக் குறள் :
அ)
புயல்போல் வழங்கும் மழைவளம் குன்றின்
வயலில் உழவும்குன் றும்

ஆ)
வாரி வழங்காது மாரி குறைந்துவிடின்
ஏரின்றி வாடும் நிலம்15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


விளக்கக் குறள் :
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்யவல்ல(து) இங்கு மழை
16)
விசும்பின் துளிவீழின் அல்லாமல்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

விளக்கக் குறள் :
மழைத்துளி வீழாது போய்விடின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிது
17)
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

விளக்கக் குறள் :
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்18)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விளக்கக் குறள் :
அ)
வான்மழை பொய்த்தால் உலகில் தடைபடும்
வானவரை வாழ்த்தும் விழா

ஆ)
வானவர்க்குப் பூசை நடக்காது போய்விடும்
வான்மழை பொய்த்தபின் இங்கு19)
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விளக்கக் குறள் :
செய்தானம் நற்தவம் நின்றுவிடும் வான்மழை
பெய்யா உலகம் தனில்


20)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கு
வான்இன்று அமையாது ஒழுக்கு

விளக்கக் குறள் :
நீர்இன்றி வாழ்க்கை நகரா(து) உலகினில்;
யார்க்கும் அதுபோல் மழை

November 20, 2009

இணைக்குறள் 1330 : (திருக்குறளும் விளக்கக் குறளும்) :

அன்பின் உள்ளங்களுக்கு .,

திருக்குறளுக்கு விளக்கவுரையை குறளிலேயே அமைக்கலாம் என்ற முயற்சி இது .
. நான் செய்யக்கூடியது , செய்யக் கூடாதது பற்றிய தங்களின் அறிவரைக்காக வேண்டி நிற்கிறேன்

இதனப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை அறியக் காத்திருக்கிறேன்.


அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
================================


01)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகுவிளக்கக் குறள் :
அ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றும் இறை

ஆ)
எழுத்துக்கு மூலம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு

இ)
அகரமே மூலம் மொழிக்கு; இறைவன்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு

ஈ)
அகரம் மொழிக்கெல்லாம் மூலம்; பகலவன்கீழ்
வாழும் உயிர்க்கு அவன்02)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கக் குறள் :
கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர்
03)
மலர்மிசை ஏகியான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவா வார்

விளக்கக் குறள் :
மலர்மனம் வாழும்இறைத் தாளடி சேர்ந்தோர்
உலகில் நிலைத்துவாழ் வார்04)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல்
05)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கக் குறள் :
அ)
பொருளாசை காரிருள் அண்டாது நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம்

ஆ)
அறியாமை ஆசையும் அண்டாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தோர் வசம்
06)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

விளக்கக் குறள் :
ஐம்புலம் ஆட்கொண்ட ஆண்டவன் பாதைசெல்வோர்
என்றும் நிலைத்துவாழ் வார்
07)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

விளக்கக் குறள் :
அ)
ஒப்பில்லா ஆண்டவன் தாள்சேர்ந்தார் அல்லாதோர்
துக்கம் களைதல் அரிது


ஆ)
தனக்கு இணையில்லா அவன்தாள்ப் பணியாதோர்
துன்பம் தவிர்த்தல் அரிது


08)
அறவழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீத்தல் அரிது

விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது
09)
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலமாம்; அவன்தாள்
விரும்பி வணங்காத் தலை
10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்
இறைவன் அடித்தொடரா தார்

November 13, 2009

திருக்குறளும் , என்குரலும்...

அதிகாரம் :3 நீத்தார் பெருமை
(ஆசிடைவெண்பாவாய் என்குறளும் , திருக்குறளும் )

21)
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்கள் - உலகில்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு[முதல்குறள் ஈற்று = நூல் ; ஆசு = கள் ]

23)
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்காண் - பிறப்பில்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு


[முதல்குறள் ஈற்று = கில் ; ஆசு = காண்]


24)
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் பூமிக்கு வித்து - சிறந்த
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


[முதல்குறள் ஈற்று = வித்து ; ஆசு = - ]


25)
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று - மனமென்னும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி


[முதல்குறள் ஈற்று = சான்று ; ஆசு = - ]


28)
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்பார் - சிறந்த
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]

November 10, 2009

திருக்குறளும் , என்குரலும்...!

அதிகாரம் 2 : வான் சிறப்பு
12)
உணவாக்க உற்ற துணையாகும்; உலகுக்(கு)
உணவாய் இருக்கும் மழைஇங்கு - மண்ணிலே
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


[முதல்குறள் ஈற்று = மழை ; ஆசு = இங்கு]

13)
பருவமழை பொய்த்தால் கடும்பசியில் உய்யும்
பெரும்கடல் சூழ்இவ் உலகு - விரிநீல
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி


(முதல்குறள் ஈற்று = உலகு ; ஆசு = - ]

15)
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்யவல்ல(து) இங்கு மழைமட்டும் - பெய்யாக்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


[முதல்குறள் ஈற்று = மழை ; ஆசு = மட்டும் ]

16)
மழைத்துளி வீழாது போய்விடின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிதாகும் - விண்ணின்
விசும்பின் துளிவீழின் அல்லாமல்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது


[முதல்குறள் ஈற்று = அரிது ; ஆசு = ஆகும் ]

17)
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்தான் - விரிந்த
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்


[முதல்குறள் ஈற்று = னால் ; ஆசு = தான் ]

November 7, 2009

திருக்குறளும் , என் குரலும் ....!

அதிகாரம் :13 அடக்கம் உடைமை

121)
அடக்கமே சொர்க்கம் அளிக்கும்; தவறின்
கடும்நரகம் தள்ளி விடுமுணர் - சுட்டும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
----------------(16)

[முதல்குறள் ஈற்று = விடும் ; ஆசு = உணர்]

124)
நிலையில் வழுவா(து) அடங்கிவாழ் பவன்பிம்பம்
கல்மலையைக் காட்டிலும் மேலிங்கு - நிலைத்து
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
-----------(17)

[முதல்குறள் ஈற்று = மேல் ; ஆசு = இங்கு]

November 5, 2009

திருக்குறளும் , என் குரலும்...!

அதிகாரம் 12 : நடுவு நிலைமை

112)
நேர்நிலையில் சேர்த்தோரின் செல்வம்; நிலைத்தவர்
வாரிசுக்கும் நன்மை தருமென்றும் - பாரினில்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
--------------(14)

[முதல்குறள் ஈற்று = தரும் ; ஆசு = என்றும்]

114)
நல்லார் நடுவிலார் என்பதை அவரவர்
மக்கள் குணமுணர்த் தும்பார் - தலைவர்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
-----------------(15)

[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]

November 3, 2009

திருக்குறளும் , என் குரலும் .....!

அதிகாரம் 11 : செய்நன்றி அறிதல்

101)
ஓருதவி செய்யா ஒருவனுக்குச் செய்யுதவிக்(கு)
ஈருலகும் ஈடாகா திங்குணர் - பாரினில்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
---------------------(11)

[முதல்குறள் ஈற்று = து ; ஆசு = இங்குணர்]


104)
கடுகளவு சிற்றுதவி; போற்றுவார் பெற்றோர்
பெரும்பனை யின்அள வுக்கு - வெறுமோர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
-----------------------(12)

[முதல்குறள் ஈற்று = வுக்கு ; ஆசு = - ]


107)
துன்பம் துடைத்தநல் நட்பையே ஏழ்பிறப்பும்
நெஞ்சினில் கொள்வார்சான் றோர்பாரில் - என்றும்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு
-----------------(13)

[முதல்குறள் ஈற்று = றோர் ; ஆசு = பாரில் ]