இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 28, 2015

உதவு....!


511)
இல்லாரின் அல்லலினை நீக்கநினை; நல்லாரின்
சொல்உனை வாழ்த்தும் நனை

512)
இல்லாரைக் காக்கும் செயலிலுன் பாதி
இழந்தாலும் இல்லை தவறு


513)
குறையை அணைக்கும் குணம்கொண்டோர்; அந்த
இறையின் அணைப்பிலிருப் பார்

514)
குறையும் இடமெல்லாம் அள்ளிஇறை; தானே
குறைவை நிறைக்கும் இறை

515)
தினம்தானம் செய்துவரும் நல்லோர் கணக்கில்
தனம்தானே சேர்ந்து விடும்

June 25, 2015

குழந்தை உலகும் .....வளர்ப்பு முறையும்....!


506)
ஊக்கம் கிடைத்து வளரும் குழந்தையின்
நோக்கம் அடையும் சிறப்பு


507)
கற்பதிலும் கற்றுத் தருவதிலும் குட்டிக்
குழந்தைக்கு நாமில்லை ஈடு


508)
புகழ்மொழி கேட்டு வளரும் குழந்தை
பழகும் வழியறி யும்


509)
கேலியால் வேகும் குழந்தை; அறிவில்லாக்
கோழிபோல் ஆகும் வளர்ந்து


510)
அடக்கி வளர்க்கும் குழந்தை; அடங்க
மறுக்கும் வளர்ந்த பிறகு


June 24, 2015

பெண்ணினம் மட்டுமே அறிந்த மொழி!


மெளனமொழி :
501)
உம்மென்று எழுப்புவாள் ஓரொலி; கும்மென்று
எழும்பும் எனக்குள் கிலி

502)
இனிநீஉம் என்றால் கணினியெல்லாம் ஏனாம்;
கனிநீயே போதும் எனக்கு

503)
நச்சரித்துக் கொண்டே இருக்கும் - அவள்உதிர்த்த
உச்சென்னும் உச்சரிப்பு ஒன்று

504)
எழுத்துசொல் இல்லா மொழிமெளனம்; என்றாலும்
உணர்த்தாத(து) என்றொன்றும் ஏது

505)
சொல்லா(து) உணர்த்துவதற்கு இல்லாள் அறிவாள்,சொல்
இல்லாத மெளன மொழி

June 22, 2015

இறையே....இறையே....!


496)
இறைஇருப்பைப் பற்றி இருப்போரைச் சுற்றி
இருப்பது இறையின் முறை

497)
கோடியினுள் உன்னைத்தேர்ந் தானெனில் உள்மறைந்த
சேதியுண்டு என்பது அறி

498)
தனியன்நான் என்று நினைப்பாய் எனில்நீ
இறைமறுப்போன் என்று பொருள்

499)
பரம்பொருளைப் போற்றி பெரும்பொருளைச் சாற்றி
பெறும்பொருளும் பாழாகும் நம்பு

500)
பெரும்பொருளைக் காட்டி வரம்பதிலாய்க் கேட்பாய்;
பரம்பொருளும் வைத்திருப்பார் ஆப்பு

June 19, 2015

கற்றதும்...பெற்றதும்.... !


491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட
பிறகே வருமாம் அது


492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது
பெற்றுத் தரும்நற் சிறப்பு

494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு

495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து

June 15, 2015

காதலின் கிர(க்)கத்தில் !


486)
சொல்லும் மொழியாலும் கொல்லும் விழியாலும்
வெல்லும் வழியறிவாள் பெண்


487)
பதுமையைப் போலிருப்பாள்; ஆற்றும் செயலால்
புதுமையின் எல்லை அவள்


488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு


489)
மான்குட்டி தானிவள்; பூந்தொட்டித் தேனிவள்;
தேன்சிட்டென் வானவள் தான்


490)
வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சும் கொலுசு

June 13, 2015

வாழ்க்கை ஒரு வட்டம் !


481)
எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு


482)
மயிர்நீத்தால் வீழும் கவரிமான்; அந்த
மயிர்சார்ந்து தான்வாழும் பேன்


483)
இளமைக்கு உணவாம் கனவு; கனவும்
வளரும் இளமையைத் தின்று


484)
ஆடால் அழியும் செடி;மரமாய் மாறிவிட்டால்
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு


485)
புழுஉண்டு மீனாகும்; மீனுண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு