இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க உறவுகள் .. இந்த இழையில் 300 குறள்கள் என்ற இலக்கை அடைதிருக்கிறேன் ... (+ விளக்கக் குறள்கள் 1500 + கையிறுப்பு 200+ = ஆக மொத்தம் 2000 + குறள்கள் :))

4 ஆண்டுகளுக்குமுன்... ஒன்றுமில்லாமல் வேடிக்கைப் பார்க்க வந்தவனை.... ஊக்குவித்து இன்று 2000+ குறள்களுக்குச் சொந்தக்காரனாக மாற்றி வைத்திருக்கும் என் இணைய உறவுகளுக்கு நன்றிக் கடனாக என் செய்யப்போகிறேன் நான் ?

இதுதான் நாம்வாழும் உலகு :

296)
ஒன்றழித்து இன்னொன்று வாழும் உலகிலின்று

ஒன்றுபட்டால் தானுண்டு வாழ்வு

297)
பாதை வழியெல்லாம் பாறை இறைந்திருந்தால்

பாதவலி ஏற்பதுதான் தீர்வு

298)

திட்டம் தெரிந்தோரைக் காட்டிலும் திட்டத்

தெரிந்தோரே வல்லவராம் இன்று

299)

கூசாது கையேந்தும் கீழோர்நம் முன்வந்தால்

பேசா(து) ஒதுங்குதல் நன்று

300)
பாடுபட்டோர் பாதையில் ஓய்ந்திருப்பார்; கேடுகெட்டோர்

போதையில் ஓய்வெடுப்பார் பார்

December 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்

மழை :

291)

முகில்கண்டு கொட்டும் மழைகண்டு மக்கள்

திகில்கொண்டால் எங்கோப் பிழை



292)

மாறிவரும் காலமிது; சொல்வீரா மண்குளிர

மாரிவரும் காலமெது என்று



293)

கலிகாலம் எல்லாம்ஏன் உன்கண்முன் வீழும்

உழவை ஒதுக்கும் உலகு



294)

ஏரியுள் சேரும் மழைநீர் தரும்சோறு;

கூரையுள் என்றாலோ சேறு



295)

பிழைக்கும் வழியின்றி பள்ளத்துள் வீழும்

மழைநீரைப் பேணா உலகு