இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

June 18, 2017

அப்பா.. மறைக்கப்பட்ட சில உண்மைகள் !!

அப்பா தினம் !

951)
பெண்சுமப்பாள் மாதம்பத்து, ஆண்சுமப்பான், வாழ்வெல்லாம்,
பெண்அவளின் சுற்றத்தைச் சேர்த்து


952)
’ஒன்றும் தெரியாதுஉன் அப்பாவுக்கு’ என்றே
அறிமுகம் செய்வாள்தாய் சேய்க்கு


953)
சிரிக்கும்பெண் பேரழகு; சூழலின்பின் நிற்கும்
சிரிக்காத ஆணும் அழகு


954)
குலுங்கிஅழும் அம்மாவைக் காட்டிலும்,அப் பாவின்
கலங்கும்கண் காட்டும் தவிப்பு


955)
அம்மா அழகென்று அறிவோம், அவளறிவாள்
அப்பாதான் பேரழகு என்று

April 6, 2016

அப்பா ....!


இன்று அப்பாவின் நாள் .... அந்தநாள் நினைவோடு நான்...............!
631)
எந்தையிடம் கேட்டேன் வரமொன்று; சொன்னான்உன்
தந்தைதான் அந்தவரம் என்று

632)
தந்தைமை என்னவென்று நானறிந்தேன்; என்சொந்தக்
கால்ஊன்றி நிற்கும் பொழுது

633)
திட்டியபின் தாயைவைத்துத் தட்டித் தரும்தகப்பன்
ஆயிரத்து எட்டுத்தாய்க்கு ஒப்பு

634)
என்றும் நடித்ததில்லை என்றாலும் நம்கதையின்
நாயகன் நம்தந்தை தான்

635)
அன்போடு பின்தொடரும் அப்பாவை அம்போடு
அலைபவராய்ப் பார்க்கும் உலகு