இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

August 31, 2017

நடி(த்)......தேன் ! , விட்டுக்கொடு(த்)..... தேன் !!


1081)
பெண்மகிழ ஆணவனும், ஆண்நெகிழப் பெண்ணவளும்
வாழும் உலகுதான் வீடு


1082)
இல்லாளை வெல்வதைத் தன்இலக்காய்க் கொள்வான்ஆண்
தோற்பதுபோல் காட்டுவாள் பெண்


1083)
ஏமாற்றி விட்டதாய்ப் பெண்நினைத்து, ஏமாந்து
விட்டதாய் நான்நடித்தால், தேன்

1084)
என்முன்னால் தூங்குவது போல்நடிக்கும் உன்னை
எழுப்புவது போல்நடிப்பேன் நான்


1085)
எழுப்புவது போல்நடிக்கும் உன்முன் மெதுவாய்
விழித்தது போல்நடிப்பேன் நான்


July 9, 2017

குறுக்குசால் ஓட்டும் வாழ்வு ...!


981)
வாழ்வில் சிரிப்பதற்குக் கற்றுக்கொள், வாழ்வே
அழுவதற்குக் கற்றுத் தரும்


982)
’மீண்டேன்’ எனத்தெம்பாய்க் கண்விழித்தால், மீண்டும்
சுழியத்தைத் தாண்டவில்லை வாழ்வு


983)
தேர்வுவைத்தப் பின்னர்தான் தேர்வெழுதத் தீர்வுகளைக்
கற்றுத் தருகிறது வாழ்வு


984)
ஒன்றின்றி வாழ்வில்லை என்றிருப்போர் வாழ்விலதை
ஒன்றாமல் செய்துவிடும் வாழ்வு


985)
மிகப்பழையத் தீர்ப்பை, மிகப்புதியத் தீர்வைப்போல்
நாம்நடத்திச் செல்வதுதான் வாழ்வு

August 9, 2015

இதுதான் வாழ்க்கை !



571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில் யார்யாரோ
வந்தமர்வார் என்பதுதான் வாழ்வு

572)
எதிர்பார்த்து இருந்தது எதிர்பாராப் போதுன்
எதிர்வந்து நிற்பதுதான் வாழ்வு

573)
விரும்பாத போதும் விரும்பியதை விட்டுத்
தரவேண்டும் என்பதுதான் வாழ்வு

574)
நான்நான்தான் நீநீதான் என்றால் அதுதாழ்வு;
நான்நீநாம் என்பதுதான் வாழ்வு

575)
யாருமில்லை என்றால் அதுதாழ்வு; யாருக்கும்
பாரமில்லை என்பதுதான் வாழ்வு

July 18, 2015

நீயே எடுத்துக் காட்டு...!


536)
தலைமறையும் முன்வாழ்ந்து காட்டு; தலைமுறையும்
உன்தடத்தைப் பின்தொடரும் வாழ்வு

537)
உன்வரையில் உண்மையைக் கொண்டிருந்தால் இவ்வுலகில்
உள்ளவரை நன்மை தரும்

538)
தவறிழைக்க வாய்ப்பிருந்தும் தள்ளித் தவிர்ப்போரை
தெய்வமெனப் போற்றும் உலகு

539)
வீழ்வதுநீ என்றாலும் அங்(கு)அழுவோர் நால்வர்
எனில்நீ இறைநிலைக்கும் மேல்

540)
தூற்றும் பகையோரின் துன்பம் துடைத்தெறி;
போற்றும் வகையமையும் வாழ்வு

July 11, 2015

பழகப் பழகு !!!



531)
மாற்றமெது வந்தாலும் சற்றும் தடுமாற்றம்
இன்றியதை ஏற்கப் பழகு

532)
விருப்பம் நிறைவேற வில்லையெனில் வந்த
வரவை விரும்பப் பழகு

533)
தாழ்ந்து பழகும் குணத்தானின் தோள்தாங்கி
வாழ்த்தி உயர்த்தும் உலகு

534)
எதையும் இலகாய் அணைக்கப் பழகு;
நுழையும்உன் வாழ்வில் அழகு

535)
மாற்றத்தை ஏற்கும் மனமுடையோர்; ஏற்றம்
பெறுவார்தாம் எண்ணும் அளவு

June 13, 2015

வாழ்க்கை ஒரு வட்டம் !


481)
எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு


482)
மயிர்நீத்தால் வீழும் கவரிமான்; அந்த
மயிர்சார்ந்து தான்வாழும் பேன்


483)
இளமைக்கு உணவாம் கனவு; கனவும்
வளரும் இளமையைத் தின்று


484)
ஆடால் அழியும் செடி;மரமாய் மாறிவிட்டால்
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு


485)
புழுஉண்டு மீனாகும்; மீனுண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு

March 31, 2015

உனக்குள்ளும் ஒளிந்திருப்பார் இவர் :




471)
வேலையின்றி நின்றிருப்பார்; ஆனாலும் வெட்கமின்றி
நேரமில்லை என்றுரைப்பார் பார்

472)
இல்லாத ஒன்றை இருப்பதாய்ச் சொல்லியே
பொல்லாங்கு செய்வார் இவர்

473)
ஆசை மலையளவு உள்ளிருந்தும் வீசை
விலையென்ன என்பார் இவர்

474)
குறைவில் நிறைபொருள் சொல்வார்; நிறைய
நிறைவின்றி பேசிடுவார் நின்று

475)
பூசணியைச் சோற்றில் மறைத்திடுவார் அன்(று);அதையே
காற்றில் கரைத்திடுவார் இன்று


பொருள் /வாழ்க்கை

January 13, 2015

வாழ்வின் சுவை கூட்டச் சில துணுக்குகள் !


பொருள் - சுவைத்துத்தான் பாருங்களேன் !

456)
போகட்டும் விட்டொழி என்றுரைப்போர்; ஆகட்டும்
காத்திருப்போம் என்போர்க்கும் மேல்


457)
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு


458)
எதிர்பார்த்து இருப்பது இழிவு;எதையும் முன்வந்து
எதிர்கொண்டு வாழப் பழகு


459)
மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள் உன்நிலையை;
தோற்றோடும் தோல்வி விரைந்து


460)
வெண்பனியைப் பார்க்க வழியில்லை என்றானால்
முன்பனியை ஏற்கப் பழகு

June 12, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க்கை :
331)
பறக்க முடிந்தும் கிறங்கிக் கிடந்தால்
பரணில் கிடைக்கும் இடம்

332)
புறம்பேசான் வந்தால் தழுவும்; பிறனென்றால்
எள்ளி நழுவும் உலகு

333)
இறுக்கும் இடத்தில் இருக்கும் நிலையைத்
துறந்தால் சிறக்குமுன் வாழ்வு

334)
வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி
முடியும் கணிதமில்லை வாழ்வு

335)
தேங்கிக் கிடந்தால் நதியில்லை; தூங்கிக்
கிடந்தால் கடலில்லை போ