இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / இன்பம்


அவளைப் பற்றி(ய) நான் :
346)​
​​கண்ணில் வெடிவைத்துக் காத்திருப்பாள்; கண்ணிவெடி
தோற்றணையும் கன்னியிவள் முன்பு

​347)​
​​கதிர்அரிவாள்க் கூர்கண் அவளுக்கு; எதிர்வருவாள்
என்செய்யப் போகிறேன் நான்

​348)​
​​வாழப் பிடிக்கும் இடமெது வென்பேன்;உன்
தோள்தான(து) என்பாள் பிடித்து

​349)​
​​முப்பொழுதும் உன்நினைவே தானென்றேன்; மூச்செறிந்தாள்
எப்பொழுதும் ஏனில்லை என்று

​350)​
​​மீனானால் வீழ்ந்திருப்பேன்; மானானால் வாழ்ந்திருப்பேன்
தானாக உன்வலைக்குள் நான்

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


அறிவு :


341
கொடுக்கும் மனத்தை கெடுக்கும் குணத்தை
விடுக்கும் துணிவே அறிவு

342
குறையை மறைக்க முனையா(து) அளவைக்
குறைக்க முயல்வ(து) அறிவு

343
துளையைச்சீர் செய்யாது நீர்சேர்க்கப் பாயும்
நிலையைத் தவிர்த்தல் அறிவு

344
தங்கத் திடம்சேரும் செம்பு நகையாகும்;
தங்குமிடம் தேர்வ(து) அறிவு

345
முயல்பிடிக்கும் கூரை முகம்பார்த்துக் கூறும்
இயல்பை அடைதல் அறிவு

June 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம்


விதைகள் :
அவன்
முறைவைத்(து) உதவிக்(கு) அழைக்கும் வரையில்
மறைந்திருக்க மாட்டான் இறை [336]

கடவுளைக் காண கடஉள்; கடந்துவிட்டால்
நீயே கிடைக்கலாம் அங்கு
[337]
அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது [338]

அப்பா
சிந்தை சிதறாமல் முன்னேRuRறு; தந்தையின்
பாதையிலுன் எண்ணம் செலுத்து [339]

ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது [340]

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க்கை :
331)
பறக்க முடிந்தும் கிறங்கிக் கிடந்தால்
பரணில் கிடைக்கும் இடம்

332)
புறம்பேசான் வந்தால் தழுவும்; பிறனென்றால்
எள்ளி நழுவும் உலகு

333)
இறுக்கும் இடத்தில் இருக்கும் நிலையைத்
துறந்தால் சிறக்குமுன் வாழ்வு

334)
வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி
முடியும் கணிதமில்லை வாழ்வு

335)
தேங்கிக் கிடந்தால் நதியில்லை; தூங்கிக்
கிடந்தால் கடலில்லை போ

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


வாழ்வின் அச்சு :

326)
கண்ணோடு கண்நோக்கி கன்னம் உருவாக்கும்
உன்நோக்கம் தானென்ன கூறு

327)
நோக்கும்உன் கண்செய்யும் தாக்கம் மிகப்பெரிது;
நோக்கும்முன் தோற்பேன் இனி

328)
தேவையைத் தானுணர்ந்து முன்வந்து தீர்த்துவைக்கும்
தேவதையைக் கொண்டவனாம் நான்

329)
சுற்றுமுற்றும் யாருமின்றிப் போனாலும் சுற்றி
வருமவளே என்வாழ்வின் அச்சு

330)
மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ

April 22, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


சிலவரிகள் உனக்காக :



321)
நீரோடும் பாதையில் தேரோட்ட வேண்டுமெனில்
போராட வேண்டும் உணர்

322)
தன்திறன்மேல் பற்றுக் குறைந்தால் அதுகேடு;
தண்ணீரின் மேல்வரையும் கோடு

323)
விழுந்தெழுந்தால் முன்வந்து தான்நிற்கும் வெற்றி;
விழித்தெழுந்தால் வாரா(து) அது

324)
கிட்டும் நிலையில் இருப்ப(து) எதற்குனக்கு;
எட்டாத் தொலைவே இலக்கு

325)
வான்கடக்கும் நீள்சிறகு உண்டுனக்கு; ஏறிவர
ஏணிஎதிர் பார்த்தால் இழுக்கு

April 5, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


பிறந்த நாள் பரிசு :)


316)
நிலவோ உலகிலோர் அங்கம்; உலவும்
இவளோ உலகம் எனக்கு

317)
தலையணையா வேன்;தழுவிக் கொண்டே துயில்வாள்;
நிலையிணை உண்டோ இதற்கு

318)
நகம்கடித்துத் துப்புவாள்; குட்டி நிலவாய்
முகம்காட்டும் என்னுள் அது

319)
பூவிரல் கொண்டு சொடுக்கெடுப்பாள்; பூவுலகில்
ஈடில்லை ஏதும் இதற்கு

320)
இசைக்குத் தலையசைப்பாள்; என்னுள் திசைகள்
கலங்கும் இசைவெனக் கொண்டு

February 13, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


காதலோ,,காதல்


311)
யுத்தமொன்று சத்தமின்றி முற்றுமின்றி நீண்டிருக்க
முத்தமிட்டுத் தந்தாள் குறிப்பு

312)
நாணாமல் போய்நீ வழங்கு சிறுநகை;
காணாமல் போகும் பகை

313)
நீவருவாய் என்றிருந்தேன்; வந்தாய் நகையோடு;
நீவருவாய் என்றானாய் இன்று

314)
மானாக ஆண்மருக; ஆணாக பெண்உருக
தேனாகும் காதல் உறவு

315)
நானென்(று) அவன்விஞ்ச ஏனென்(று) இவள்கொஞ்ச
வீணாகிப் போனான் அவன்

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


இயல்பு!!!!!!!


306)
அரவமின்றி வந்தமைதி கொன்று விரைந்து
மறைவ(து) அரவம் இயல்பு

307)
வேகமாய் வந்து பயம்தந்து வந்தவழிப்
போவ(து) அலையின் இயல்பு

308)
தண்டின்மேல் தங்கி இருந்தாலும் வண்டினைத்
தேடுவது மொட்டின் இயல்பு

இயல்பு?!?

309)
ஆளில்லா ஊரில் அடுத்தடுத்துத் தேரிழுக்க
நாட்குறித்தல் மூடர் இயல்பு

310)
தோள்வலிமை தானழகு; பாழும்தோல் பின்சென்று
வீழ்வ(து) உலகின் இயல்பு

February 8, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



காதலா..என் காதலா........

301)
என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
வந்தின்றும் சிக்கவில்லை நீர்

302)
நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
நானென்ன ஆவேனாம் கூறு

303)
உம்வாசம் நானுணர்ந்தேன்; தன்வேசம் தானுதறி
முன்வாசல் ஓடும் மனது

304)
ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்

305)
சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
சொல்லடா என்செய்ய வென்று