இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இல்லாள் :
(81)

‘தங்க’ மயில்வருமா என்றேங்கிக் காத்திருந்தேன்;
வந்ததோ ‘தங்கமயில்’ ஒன்று

(82)
இனியவள் தேனின் இனியாள்; இனியவள்
இல்லா(து) இனியில்லை வாழ்வு

(83)
விறகாய் இருந்தேன்; பிளந்தே நுழைந்தாள்
சிறகாய் விரிந்த(து) எனக்கு

(84)
போகாப் பொழுதெல்லாம் பாவையின் அண்மையில்
போதாத(து) ஆன(து) எனக்கு

(85)
நிழலையும்மண் தீண்டும்முன் தாங்குவேன்; அன்பே
மழலைநீ என்றும் எனக்கு

(86)
தண்டில் இருந்தாலும் மொட்டுக்கு வண்டின்
வரவுதான் சேர்க்கும் சிறப்பு :)

(87)
நொந்துபோய் நின்றாலும் வந்தவள் தாங்கினால்
சொந்தமாய்த் தோன்றும் உலகு

(88)
உண்மைபோல் பொய்யாய்என் முன்நடிப்பள்; உண்மையில்
மெய்க்குள் துடிக்கும் எனக்கு

(89)
வலியை விரட்டும் வழியை அறிவாள்;
வலியதாம் ‘இல்லாள்’ மனது

(90)
மின்னலைப் போல்இணைந்தாள்; என்னுள் பிணைந்(து)இனி
இன்னலைத் தீர்ப்பாள் துணிந்து

April 7, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
76)
செல்பேசி வண்டியில் நீசென்றால்; சொல்லாமல்
வந்துன்முன் நிற்பான் எமன்

77)
குறிகேட்டால் வேண்டுவ(து) ஆகா(து); இலக்கைக்
குறிவைக்க வேண்டும் அதற்கு

78)
இல்லாமை இல்லாமல் போக்கிட இல்லையென்ற
சொல்லையே இல்லாமல் ஆக்கு

79)
வீழ்ந்தவுடன் முற்றா(து) எதுவும்; எழுந்துநின்று
வாழ்வதற்குத் தானே பிறப்பு

80)
வண்ணமுண்டு; எண்ணமுண்டு; உன்மனத் திண்மையின்றேல்
மண்ணாம் வரையும் படம்

April 2, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவள் :
70)
வாள்புருவம் வில்லாக; கூர்க்கண்கள் வேலாக
ஆளானேன் வேட்டை இலக்கு

71)
விடும்கதையை நம்புவது போலிருப்பாள்; நண்பா;
விடுகதையின் மூலம் அவள்.

72)
சொல்லடி என்றேன்; சுழன்றேதான் நான்வீழ்ந்தேன்;
சொல்லடி பட்ட பிறகு

73)
வைத்ததோ பெண்ணவள் மேல்அன்பு; வந்தென்னைத்
தைத்த்தோ மன்மதன் அம்பு

74)
தீயில்லை; ஆனாலும் தீய்கிறேன்; காதலில்
தீதில்லை என்பது பொய்

75)
மருதாணி நாவசைத்தாள்; நானானேன் இங்கு
திருகாணி இல்லாக் கொலுசு