இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 31, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


எல்லாம் அவள் :

27)
கொடியவள்; நாள்தோறும் என்மனம் கொல்வாள்;
இடையில்லாப் பூங்கொடிய வள்

28)
உறங்கிக் கிடந்தேன்; உலுக்கி அணைத்தாள்;
கிறக்கத்தில் இப்பொழுது நான்

30)
மின்னஞ்சல் வந்துவிழும் மின்னலவள் பேரோடு;
பொன்னூஞ்சல் ஏறும் மனது

December 28, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....5

உண்மை அறி,உன்னை அறி, நீதான் அரி :


சக்கரம்போல் சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளைக் கண்டுணர்வாய்;
அச்சகற்றி வீழ்த்திடுவாய்; அச்சமின்றி வாழ்ந்திடுவாய்;
உக்கிர வேதாளம் மேலேறித் தொங்கிவரும்
விக்கிர மாதித்தன் நீ

(குறிப்பு : விக்கிரமதித்தன் முதுகிலேறி வேதாளம் இருப்பதுதான் வழக்கம் )

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




அனுபவப் பாடம் :
24)
நாடகம் ஆடுமிந்த பூடக மானுடர்க்கே
ஊடகம் செய்யும் சிறப்பு

25)
பின்தூற்றும் வீணர் வியக்க எழுந்துவிடு;
தன்னால் வியர்க்கும் அவர்க்கு

26)
வாய்க்குள் புகட்டாமல் சோறெடுத்(து) உண்ணுமோர்
வாய்ப்பைத் தருவது சிறப்பு

27)
தூரம் மிக அதிகம் உன்முன்னால்; இப்பொழுதே
பாரம் சுமக்கப் பழகு

December 24, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....4

வீரம் :

எதிரியை வீழ்த்தி எழவிடா மல்சாய்த்(து)
உதிரம் குடிப்பதல்ல வீரம் – உதிர்ந்தவரை
மண்டியிட வைக்காமல் தோள்தாங்கி வீழ்ந்தோரின்
எண்ணத்தை வெல்வ(து) அது

December 18, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

காதல் : ( காதலில் கண் ... கண்ணல்ல அது ..துளைக்கும் 'கன்' )
22)
தன்கண்ணால் என்கண்ணுள் தூண்டிலிட்டுப் பார்த்திருப்பாள்;
தன்னால் வியர்க்கும் எனக்கு

23)
மான்விழியால் என்னுள் வலைவிரித்துக் காத்திருப்பாள்;
மீனாகி வீழ்ந்திருப்பேன் நான்

December 13, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....3

3) வேகம் :
(மித ஆபத்து... காதலிலோ ...மிக ஆபத்து )

சேலைக்குள் சோலையாய்ச் சிட்டவள் ஈர்த்திட

மாலைக்குள் மங்கையவள் மான்முகம் பார்த்திட

சாலைக்குள் சிங்கமாய்ச் சீறிப் பறந்தேன்நான்;

'மாலைக்குள்' என்படம் இன்று



December 12, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....2

2)
உலகின் பேரழிவு ஆயுதம்:

வேல்ஏந்தி காத்திருக்கும் தோளின் வலியோடு

வால்தூக்கி சீறிவரும் தேளின் கொடுக்காக

மீன்கொத்தி வேகத்தில் மின்னல்போல் பாய்ந்தென்னை

ஏன்குத்திப் போகிறதுன் கண்


(வலி = வலிமை)




December 11, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

கூடல்:
19)
கண்டோடி, பின்நின்று, கண்ணசைப்பாள்; கண்டபடிக்
கொண்டாடித் துள்ளும் மனது

குறிப்பை விட்டுச் செல்கிறாள் அவள் :)

ஊடல்:
20)
'மலரேன்'*என்(று) என்மனதைத் தைத்தாள்; 'மலரேன்'**
எனவேண்டும் பைத்தியமாய் நான்

(ஒர் வார்த்தை - இருபொருள் _
*எதிர்ப்பதம் - மலர/பூக்கமாட்டேன் என்று மறுக்கிறாள் மலர் போன்ற அவள்.
** வேண்டுகோள் - மலர்வாயா எனக்காக ? எனறு வேண்டும் பைத்தியமாய் அவன் )

தேடல் :
21)
மார்கழியில் மாருள் குளிரெடுக்க; சாமத்தில்
ஊர்க்கோழி* மட்டும் துணைக்கு

(தனிமையின் வேதனை)
* ஊர்க்கோழி - எங்கோ ஊர்எல்லையில் இரவெல்லாம் விழித்துக் கூவியபடி இருக்கும் )


...இன்னும் வரும் :)

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!


புதுக்கவிதைகள் போலவே ..... படித்தவுடன் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெண்பாக்களைத் தரமுடியும் எனக்காட்ட முற்படும் ஒர் 'அணிலின்' சிறு முயற்சி இது ....... பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள் .... கருத்துக்களைக் கூறி ஆதரவு தாருங்கள்.....

பாரதியின் பிறந்த நாளில் பிறக்கிறது இந்த இழை....
உயரத்தில் பறக்கவைக்கப்போவது நீங்கள் தான்

1. அக்கினிக் குஞ்சு :

வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..

December 8, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நட்பை வெல் :
17)
சொத்திருந்தால் சார்ந்திருக்கும் சுற்றமெல்லாம் சுற்றிவரும்;
செத்தாலும் சேர்ந்துவரும் நட்பு

பகையைக் கொல்:
18)
சிதைத்திடுவோம் என்போர்முன் சீறு; 'விதைநான்,
புதைப்போர்முன் தான்முளைப்பேன்' என்று

December 7, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

கனவு :
15)
கனவில் விழாமல் கவனமாய்க் கண்விழித்தும்
என்கனவில் கண்டேன் கனவு

16)
காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்

December 6, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

உழவு :
13)
பயிர்விதைத்து கண்பூத்துக் காத்திருப்பான்; பூக்கா(து)
உயிர்பறித்துச் சென்றுவிடும் அது

நம்பிக்கை :
14)
மரங்களும் ஓர்நாளில் மண்ணுள் புதையும்;
மரணமில்லை என்றும் விதைக்கு

December 5, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

பாடம் :
11)
படிப்பினைத் தூர்ந்தேன்; எடுப்பினைத் தேர்ந்தேன்;
படிப்பினை ஆனேன் பிறர்க்கு

12)
ஒழிக்க முடியாத(து) ஒன்றுன்முன் வந்தால்
ஒளிந்து விடுவது நன்று

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

உழவு :
9)
ஏரில் சறுக்கும் உழவனை; 'பாரில்'
வரவேற்றுப் போற்றும் அரசு

விளக்கம் :
ஒரு குறள் - இரு பொருள் ....:)

அரசு சீரளிப்பதாகவும் கொள்ளலாம் ...
அரசு சீரழிப்பதாகவும் கொள்ளலாம்.............:))


உறவு :

10)
நெருப்பால் உருகும் மெழுகுபோல்; 'உள்ள'
வெறுப்பால் கருகும் உறவு

..விடாமல் வரும்

December 3, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

முதல் அன்னை / தாய்க்கும் தாய்
7)
முள்ளின் முனையளவு சொல்லித்தா; என்தமிழ்த்தாய்
அள்ளித் தருவாள் உனக்கு

8)
தடம்மாற்றம் இன்றியவள் தாள்தொடர்ந்தால் வாய்க்கும்
தடுமாற்றம் இல்லாத வாழ்வு

...விடாமல் தொடர்வேன் :)

December 2, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

இல்லாள் :

5)
சுழியை அறியா(து) இருந்தேன்நான்; இந்தச்
சுழியத்தின் முன்பானாள் கோடு

6)
வறுமையின் வெம்மையில் வந்தவளின் அண்மை
அருவியைக் காட்டும் எனக்கு


...தொடர்வேன்

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நம்பிக்கை :
3)
ஆற்றல் உனக்குள்உண்(டு) ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை உனக்கு

4)
வலியினைத் தாங்கும் வழியை அறிந்தால்
வலியதாய் ஆகும் மனது

December 1, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

வாழ்க உறவுகள் ...

என்னுள் தோன்றுவதை எளியக் குறள்வடிவில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சின்னச் சின்னத் தலைப்புகளில் வகைப்படுத்த நினைத்திருக்கிறேன் ......

என்றாவது ஒருநாள் நல்லதொரு தொகுப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு

தங்கள் வாழ்த்துகளோடு வளமாய்ப் பெருகும் குறள்என்ற நம்பிக்கையுடனும் தொடர்கிறேன் ..

கடவுள் :

1)

பிறவாமை வந்தாலும் ஈன்றவனே; உன்னை

மறவாமை வாய்த்தால் இனிது

2)

எப்போ(து) அழைத்தாலும் வந்தென்பின் தப்பாது

நிற்பான் எனையாள் பவன்

...........தொடர வாய்ப்பளியுங்கள்

January 16, 2011

அறிவிப்பு : முகவரி மாற்றம்

வருகை தந்திருக்கும் அன்பு உள்ளங்களே....!

எனது பதிவுகள், கருத்துக்கள், படைப்புகளை ஒன்றாகத் தொகுக்கும் பொருட்டு
எனது ‘மரபுக் கனவுகளை’ தொடர்ந்து கனவு மெய்ப்படவேண்டும் - http://duraikavithaikal.blogspot.com என்ற வலையில் பதிவு செய்கிறேன் .. இந்த மாற்றத்தைப் பொறுத்து , புதிய முகவரிக்கு வந்து தங்களின் ஆதரவைத் தந்து , வாழ்த்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..