இயன்ற வரையில் எளிய தமிழில் வெண்பாக்கள் / மரபுக் கவிதைகளைத் தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

March 20, 2017

குருவியையும் குருவெனக் கொள்...!

சிட்டுக்குருவி தினம் இன்று !

841)
கோபுரம்தான் கட்ட முடியாது எனினும்
குருவிகட்டும் கோபுரத்தில் கூடு


842)
அருவியை அள்ளிப் பருக குருவி
விரும்பினால் என்ன தவறு


843)
சிறிய குருவி சிறகை விரித்தால்
சுருங்கி அடங்கும் உலகு


844)
சிறகில் இருந்து விலகும் இறகால்
குருவிக்கு வாராது இழப்பு


845)
பிறப்பிடம் விட்டுப் பறக்கும் குருவி
இறக்கை முளைத்த பிறகு

March 13, 2017

இரோம் சர்மிளா ...! .. நல்லதோர் வீணை ..... !!


---பதினாறாண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் - கிடைத்ததோ தொண்ணூறு ஓட்டுகள்----

831)
போராளி என்போர் பெரும்பாலும் ஏமாளி
என்றுதான் பேர்பெறுவார் இன்று

832)
போராளி போராடித் தோற்றுவிட்டால் கோமாளி
யாகத்தான் பார்க்கும் உலகு


833)
நன்றிகெட்ட நாய்களுக்கு நம்பிக்கை ஊட்டவா
தும்பிக்கை யோடலைந்தாய் நீ

834)
ஒருவரிடம் ஏமாந்தாய் என்றால் அவரைமிக
நம்பினாய் என்றே பொருள்


835)
இருக்கும் வரைத்தள்ளி நிற்பது; இறந்தபின்
போற்றுவது தான்நம் இயல்பு

836)
வழிதெரிய வைத்தோரை நன்றி மறந்து
வழித்தெறிவோர் வீழ்ந்தாலும் நன்று


837)
ஊர்வாழ வேண்டுமென ஈரெட்டாண்டு அன்னத்தை
விட்டவளைக் கைவிட்டது ஊர்

838)
நம்நலம் காப்பதற்குத் தன்சோற்றை விட்டதற்கு
தந்தோம்நாம் தொண்ண்ண்ணூறு ஓட்டு


839)
அறியற்கு அரியது அறியானைச் சேர்ந்தால்
பெரிதாய் அடையும் இழிவு


840)
தனைநம்பி வந்தவரை வீழ்த்த நினைப்பவரின்
வாழ்வுதனை வீழ்த்தும் வினை

January 20, 2017

ஏறுதழுவு ... சல்லிக்கட்டு ... ( ஜல்லிக் கட்டு) ...!
821)
வீட்டுக்குள் மெல்லவந்து சோற்றுக்குள் கால்நீட்டும்
பீட்டாவின் பொட்டியைக் கட்டு

822)
நாட்டை அபகரிக்க மாட்டைக் குறிவைத்தோர்
ஆட்டைக்கு வைப்போம்வா வேட்டு

823)
பேட்டாவைக் கூட்டினால் பீட்டாவின் பேட்டாவாய்க்
கூவிவரும் கூட்டத்தை ஓட்டு

824)
நாட்டை ஒழிக்கும் சதியின் முதல்படிதான்
மாட்டை அழிக்கும் விதி825)
கதைமுடிக்கும் திட்டமிட்டு வந்தோர் திகைக்க
சதையாடும் என்பது உணர்த்து

826)
நம்நாட்டைக் காக்கும் முயற்சியை நம்வீட்டில்
நம்நாட்டு மாட்டில் தொடங்கு827)
மாடென்ன செய்யுமெனக் கைவைத்து நாடொன்றாய்
ஆகவழி செய்தார்க்கு வாழ்த்து

828)
இவரெல்லாம் என்செய்வார் என்பவர் எண்ணம்
தவறென்று காட்டுவோம் வா

829)
சல்லிக்கட்டு ஏனென்று கொள்ளிவைக்க வந்தவரைச்
சல்லிசல்லி யாக்குவோம் வா830)
வாடிவா சல்திறக்க வீடுவா சல்துறந்து
வாடிவா செல்வோம் விரைந்துAugust 7, 2016

நட்பதிகாரம்..!


நண்பர்கள் தின வாழ்த்துகள் !

816)
தன்தவறைக் கல்போன்றும் உன்தவறை எள்போன்றும்
காண்பவனின் நட்பே வரம்


817)
ஆவேசம் நட்பினுள் கொண்டாலும் நட்பாகும்;
வேசமிட்டால தான்தப்பா கும்


818)
சிந்திக்கும் நட்பின் துணைமட்டும் தான்எதையும்
சந்திக்க வைக்கும் உனை


819)
உன்தவறை உன்முன்நின்று சொல்பவன்தான் நண்பன்;உன்
பின்நின்று சொல்பவன் வேறு


820)
சிந்திக்கும் நண்பரை விட்டு விலகியதால்
சந்திக்கு வந்தோர் பலர்

August 6, 2016

நபிமொழி - 15 .... குடும்பவியல் !


என்குறள் 806 - 815 :
உறவியல்:
தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.............................. புகாரி 5971

கணவனின் செல்வத்தை செய்யும் செலவைக்
கணித்திருப்பது இல்லாள் பொறுப்பு
.................... புகாரி 5365

நல்லறம் தானே இறைவிருப்பு; பிள்ளைகளும்
செல்வமும் இவ்வாழ்வின் ஈர்ப்பு
....................... குர்ஆன் 18:46

சிந்தைத் தெளிவும் ஒழுக்கப் பயிற்சியும்
தந்தை வழங்கும் பரிசு


உணவளிக்க ஆளில்லா வேளையில் நானுண்டு
எனும்மகள்தான் உன்தர்மம் ஆம்

(மேலுள்ள இரு மொழிகளுக்கும் .. (கவனக் குறைவால்)குறிப்பெண்ணைக் பதியத் தவறிவிட்டேன். அறிந்தோர் சுட்டினால் மிக நன்றியுடனிருப்பேன்

இல்லறவியல்:
சமஉரிமை கொண்டோர் எனினும் தமக்கிடையில்
விட்டுக் கொடுத்தால் சிறப்பு
........................ புகாரி 2455

இல்லறத்தில் விட்டுக் கொடுத்தொத்துப் போவதில்
இல்லை ஒருபோதும் தப்பு
......................... புகாரி 2694

இல்லற வாழ்வை இறைவழியில் வாழ்வது;
நல்லறம் செய்வதற்கு ஒப்பு
........................ முஸ்லிம் 1674

உறவுநலம் காக்கச் செலவிடல் என்பது
உரியோர்க் கடமையா கும்
......................... புகாரி 5355

உறவின் நலம்காத்து வாழ்ந்து வருவோர்
உறவை விரும்பும் இறை
......................... புகாரி 5987

July 20, 2016

ஐயன்மேல் ஐயம் கொள்வோர் தன்னால் வீழ்வார் ... !!!!!!!


குறளோனுக்கு ஆதரவாய் ’என்குரல்’ அதிகாரம் ஒன்று :


796)
பொதுமறையைத் தந்தவர்க்குச் செய்வோம் சிறப்பு;
பதுக்கி மறைப்பது எதற்கு


797)
எம்ஐயன் மேல்ஐயம் கொள்பவர்தாம் தன்னைத்தான்
நம்பா தவருக்குச் சான்று


798)
போற்றுவோர் ஏற்றம் பெறுவார்; தூற்றுவோர்
மாற்றம் அடைவார் பிறகு


799)
போற்றி இருந்திருக்க வேண்டியதை சாக்குக்குள்
போர்த்தியவர் சாக்கடைக்கு ஒப்பு


800)
சாதியில்லாப் பார்க்காணப் போதித்த ஐயனுக்குள்
சாதிகண்டார் நாதியில்லாச் சாது


801)
’மடச்சாமி யார்’சொல்லை மந்திரி ஏற்றால்
’மடச்சாமி’ யார்என்று கூறு


802)
நம்பி வருவோரின் சங்கை அறுப்போரா
கங்கைக் கரையிருக்கும் சாது


803)
பாக்களால் பாருக்கு உரைத்தவரைப் சாக்குக்குள்
சாத்திவிட்டுச் சொல்வார்பார் சாக்கு


804)
பாக்கொண்டு பாரை வடித்தவரின் நோக்கம்
உடைப்பவர் பாறைக்கும் கீழ்


805)
ஈரடிக்குள் வாழ்வை அடைத்தவரை ஓரடியில்
வீழ்த்த நினைத்தால் தவறு


July 16, 2016

நபிமொழி - 14 .... தவறு !


தவறியல் :

791)
அவசியம் இல்லாமல் ஆட்சியை ஏற்பது
அதிசயம் என்றால் தவறு
................... முஸ்லிம்3729

792)
சரியான ஒன்றைத் தவறாய்ப் புரிந்தால்
பிழையாய் முடிந்து விடும்
.................. புகாரி 126

793)
தெரிந்த பிறகும் சரியான ஒன்றைத்
தவறோடு சேர்த்தால் தவறு
................. குர்ஆன் 02:42

794)
ஒரேவாசல் தேர்ந்து நுழைந்தால் தவறு;
பலவாசல் முன்னிருக்கும் போது
............. குர்ஆன் 12:67

795)
தேவையில்லா வேளையில்முன் வந்து தரும்உறுதி
தேவையில்லா ஒன்றாகும் ஆம்
.............. முஸ்லிம்3283