இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 30, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உழவும் , உலகும் :

116)
சாகும் படித்தூண்டும்; நீரின்றிக் காய்ந்திருக்கும்
சாகுபடி இல்லா நிலம்

117)
விருந்து சிறக்கும்; விதைப்பை சிறுக்கும்,
விதைப்பை நிறுத்தும் அளவு

118)
"கதுரடிச்ச காடெல்லாம் வீடாச்சு; போகும்
சதுரடிக்கு நல்ல விலை"

119)
விதையுண்டு நீருண்டு; நல்விலை இன்றேல்
புதையுண்டு போகும் உழவு

120)
முன்னோரும் மூவேந்தும் போற்றிவைத்த மண்மரபைக்
காக்கும் முறையை அறி


....தொடர்வேன் ... ;>)

June 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவல்..அவள். .அவல்:)

106)
நினைவிலவள் வந்தவுடன் பெய்து நனைக்கிறதென்
தோட்டத்தை மட்டும் மழை

107)
விழியென்னும் வேலெய்து வீழ்த்தினாள்; வீழ்ந்தும்
வலியில் உணர்ந்தேன் இதம்

108)
வருவாய் வடிவெனக் காத்திருந்தேன்; வந்த
விடிவோ வருவாய் இழப்பு

109)
கொல்லையில் பூத்திருக்கும் முல்லைக்கும் உண்டு;உள்ளம்
கொள்ளை அடிக்கும் திறம்

110)
மங்கைக்கென் மீதேதோ கோபம்: நிகழ்வெண்ணி
மங்கத் தொடங்கியதென் கண்


..விடாது வருவேன்..:)

June 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தமிழ் வாழ்த்து :
101)
புகழ்வோர்க்கும் நின்றே இகழ்வோர்க்கும் நன்றே
நிகழ்த்திடுவாள் என்தமிழ்த் தாய்

102)
கொன்றாலும் மென்றுநீ தின்றாலும் நின்று
நிலைத்திடுவாள் என்தமிழ்த் தாய்

103)
கழுத்துக்கும் கொண்ட எழுத்துக்கும் ஆயுதம்
கண்ட(து) எமது தமிழ்


குறள் வாழ்த்து :
104)
திருமால் திருவடிக்கும் அய்யன் இருஅடிக்கும்
மிஞ்சிய(து) ஏதுமுண்டோ இங்கு

105)
சித்தரும் ஈசனும் நேசனும் புத்தரோ(டு)’
அல்லாவும் ஏற்பார் குறள்

June 16, 2012

இருவரியில் சொல்வேன்...குறள் போல சில.....!நம்பிக்கை :

96)
எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு


97)
முயலா முயலுக்கு முன்செல்லும் ஆமை;
இயலும் வரையில் முயல்


98)
முயல்பவரின் முன்நிற்கும் வெற்றி; தயங்குபவர்
பின்சென்(று) ஒளியும் அது


99)

தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; தேவையில்லை
அங்குகுளிர் காயும் அடுப்பு


100)
எளிதன்(று) எனமலைத்(து) ஏங்குகிறேன்; எல்லாம்
எளிதென்று சொல்வீரா வாழ்த்து


(# சதமடிதிருக்கிறேன் ...எத்தனை கணக்கில் வருமோ தெரியவில்லை :))