இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

January 13, 2015

வாழ்வின் சுவை கூட்டச் சில துணுக்குகள் !


பொருள் - சுவைத்துத்தான் பாருங்களேன் !

456)
போகட்டும் விட்டொழி என்றுரைப்போர்; ஆகட்டும்
காத்திருப்போம் என்போர்க்கும் மேல்


457)
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு


458)
எதிர்பார்த்து இருப்பது இழிவு;எதையும் முன்வந்து
எதிர்கொண்டு வாழப் பழகு


459)
மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள் உன்நிலையை;
தோற்றோடும் தோல்வி விரைந்து


460)
வெண்பனியைப் பார்க்க வழியில்லை என்றானால்
முன்பனியை ஏற்கப் பழகு

January 7, 2015

கற்பனைச் சிறகடித்தால்.....


அழகியல் - சும்மா சில வரிகள் :

446)
கரையும் அலையும் உரசும் பொழுது;
கரையும் அலையும் மனது


447)
கரையில் உறங்கும் படகு: கடலுள்
இறங்க விரியும் சிறகு


448)
கடலின் மடியில் இரவின் முடிவில்
நொடியில் விடியும் பொழுது


449)
உதிர்ந்த பிறகே உதிக்கும் சிறகு;
பறக்கத் துவங்கும் சருகு


450)
தாகம் தணிக்க விழுமாம் மழைவிழுது;
மேகமது மோதும் பொழுது