இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 20, 2016

ஐயன்மேல் ஐயம் கொள்வோர் தன்னால் வீழ்வார் ... !!!!!!!


குறளோனுக்கு ஆதரவாய் ’என்குரல்’ அதிகாரம் ஒன்று :


796)
பொதுமறையைத் தந்தவர்க்குச் செய்வோம் சிறப்பு;
பதுக்கி மறைப்பது எதற்கு


797)
எம்ஐயன் மேல்ஐயம் கொள்பவர்தாம் தன்னைத்தான்
நம்பா தவருக்குச் சான்று


798)
போற்றுவோர் ஏற்றம் பெறுவார்; தூற்றுவோர்
மாற்றம் அடைவார் பிறகு


799)
போற்றி இருந்திருக்க வேண்டியதை சாக்குக்குள்
போர்த்தியவர் சாக்கடைக்கு ஒப்பு


800)
சாதியில்லாப் பார்க்காணப் போதித்த ஐயனுக்குள்
சாதிகண்டார் நாதியில்லாச் சாது


801)
’மடச்சாமி யார்’சொல்லை மந்திரி ஏற்றால்
’மடச்சாமி’ யார்என்று கூறு


802)
நம்பி வருவோரின் சங்கை அறுப்போரா
கங்கைக் கரையிருக்கும் சாது


803)
பாக்களால் பாருக்கு உரைத்தவரைப் சாக்குக்குள்
சாத்திவிட்டுச் சொல்வார்பார் சாக்கு


804)
பாக்கொண்டு பாரை வடித்தவரின் நோக்கம்
உடைப்பவர் பாறைக்கும் கீழ்


805)
ஈரடிக்குள் வாழ்வை அடைத்தவரை ஓரடியில்
வீழ்த்த நினைத்தால் தவறு


July 16, 2016

நபிமொழி - 14 .... தவறு !


தவறியல் :

791)
அவசியம் இல்லாமல் ஆட்சியை ஏற்பது
அதிசயம் என்றால் தவறு
................... முஸ்லிம்3729

792)
சரியான ஒன்றைத் தவறாய்ப் புரிந்தால்
பிழையாய் முடிந்து விடும்
.................. புகாரி 126

793)
தெரிந்த பிறகும் சரியான ஒன்றைத்
தவறோடு சேர்த்தால் தவறு
................. குர்ஆன் 02:42

794)
ஒரேவாசல் தேர்ந்து நுழைந்தால் தவறு;
பலவாசல் முன்னிருக்கும் போது
............. குர்ஆன் 12:67

795)
தேவையில்லா வேளையில்முன் வந்து தரும்உறுதி
தேவையில்லா ஒன்றாகும் ஆம்
.............. முஸ்லிம்3283


July 13, 2016

அயலகவியல் !


786)
விடுதிக்கும் வீட்டிற்கும் மாற்றுண்டு அறிவாய்;
சடுதியில் வந்தடை வாய்


787)
ஒளிதர தன்னை இழக்கும் மெழுகுவர்த்திக்கு
ஒப்பு வெளிநாட்டு உழைப்பு


788)
புலம்பெயர என்னவழி என்போர் அறியார்
புலம்பெயர்ந்தோர் கொண்ட வலி


789)
இரைதேடி அன்று பறந்தவன் ஆனான்
கரைநாடாக் கப்பலைப் போன்று


790)
அயல்நாட்டில் எல்லாம் கிடைத்தாலும்; வாழ்ந்த
வயல்வீட்டை நாடும் மனது

July 6, 2016

நபிமொழி - 13 ...உணவு ! உதவு !!

உறவுகளுக்கு ரமலான் வாழ்த்துகள் !
என்குறள் 781 -785 :

குர்ஆன் 11:06
உலகஉயிர் ஒவ்வொன்றின் தேவைக்கு உணவை
அளிப்பது இறையின் பொறுப்பு


புகாரி 2081
உன்முன் பசியென்று வந்தோர்க்கு உணவளிக்கும்
உன்பின் வருமாம் இறை


முஸ்லிம் 4758
அருகில் இருப்போர்க்கு உணவு தரும்பொருட்டு
உன்குழம்பில் நீர்சேர்த்துக் கொள்


புகாரி 2259
ஒருவர்க்கு உதவ நினைத்தால்; அருகில்
இருப்பவர்க்கு முன்னுரிமை தா


புகாரி 2351,52
பொருளைத் தரும்பொழுது உன்வலப் பக்கம்
இருப்பவர்க்கு முன்னுரிமை தா

July 3, 2016

நபிமொழி - 12 ... மார்க்கம் !


என்குறள் : 776 - 780
சந்தேகம் ஏதுமிங்கு இல்லை; இறையச்சம்
கொண்டோர்க்கு இதுதான் மறை
............... குர்ஆன் 02:02

மார்க்கத்தில் காட்டப் படுவதெல்லாம் நேர்வழிதான்;
வற்புறுத்தல் ஏதுமில்லை இங்கு
............... குர்ஆன் 02:256

இணையில்லான் சொல்லும் மறைஏற்போர் செல்லும்
வழியின்முன் சொர்க்கம் வரும்
............... முஸ்லிம் 16

இறையின் மறையை முழுமையாய் ஏற்போர்
முறையற்ற வற்றைச்செய் யார்
.............. முஸ்லிம் 104

தேவையிவன் என்றால்உன் பாதையை, சேவையை
மார்க்கத்தில் ஏற்றும் இறை
.................. புகாரி 71

’மிஸ்டர்’க்குறள் = ’திரு’க்குறள்

இன்றையச் சூழலில் ... தமிழோடு கலந்து தமிழாகவே மாறிவிட்டன சி(ப)ல ஆங்கிலச் சொற்கள் என்பதை மறுக்க இயலாது.. (தங்கிலீஷ் / தமிங்கிலம்) இதன்விளைவாகவே இந்தப் பதிவு ... ஒரு விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவும் ... டேக் இட் ஈசி :))

771)
சரியென்றும் சாரியென்றும் சொல்லத் தெரிந்தோரின்
வாழ்வும் சரியாதாம் ஆம்

772)
அமிர்தாஞ்சன் அல்லது அமிர்தம்தான் என்றாலும்
மிஞ்சும் பொழுதாகும் நஞ்சு

773)
காப்பியின்பின் பேஸ்ட்என்றால் மின்அறிவு; பேஸ்ட்டின்பின்
காப்பி
என்றால் தான்இனிக்கும் வாழ்வு

774)
சர்வர் சரியாய் அமையாது போகுமிடம்
சர்வம் சரிந்துவிடும் ஆம்

775)
காக்காவின் கூட்டுக்குள் குக்கூ இயல்பு;அதுவே
ஓட்டுக்குள் என்றானால் பல்பு