இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 25, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




உனக்குள் இருப்பவனை உணர் :
/பொருள்
236)
எதிரியாய்த் துள்ளும் எவனையும் வீழ்த்(து);உன்
எதிர்வந்(த) எமனையும் சேர்த்து

237)
தருணம் எதிர்பார்த்தென் தோள்தொங்கும் அந்த
மரணத்தைக் கொல்வேன்ஓர் நாள்

238)
அறிவோம் எதிர்தளை; வந்துவிடும் வேளை;
அரிவோம் எதிரின் தலை

239)
எவனென்றால் என்ன; எமன்வந்தான் என்றால்தான்
என்ன; எதிர்கொண்(டு) எழு

240)
அறியாதென் முன்வந்து தோற்றோடும் யாரும்
அறியார்நான் தான்வாலி என்று

September 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




காதல் :
/ இன்பம்


231)
படித்தாள் தெளிந்தேன்; கொடுத்தாள் இழந்தேன்;
அடித்தால் அலையாவேன் நான்

232)
காது வழிகேட்டு காதலின் மேல்ஐயம்
கொள்வதெல்லாம் காதலா காது

233)
ஆதலால் காதல்செய்; சாதலில் வீழாது
காதலால் வாழும் உலகு

234)
காதலில் தோல்வியில்லை; வீழ்தல்தான் வெற்றியிங்கு;
ஆதலால் காதலில் வீழ்

235)
உலக அழகியைப் போல்காட்டும் உள்ளூர்க்
கிழவியையும்; காதலிக்கும் கண்





September 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



ஏன் ...?!/ பொருள்

226)
கையூட்(டு) எனும்கள்ளம் அன்பளிப்பாய் மாறியின்று
கட்டணம் என்றானது ஏன்

227)
மரம்விதைத்து சாலைசென்ற(து) அன்றுதான்; இன்று
மரம்புதைத்த சாலைகள் ஏன்

228)
பெருக்கியள்ளும் குப்பையை வீதியில் வீசிவரும்
குற்றமற்றத் தன்மைவந்த(து) ஏன்

229)
தனித்தனியாய் வாழும் முறைதான் இனிதென்னும்
எண்ணம் உருவான(து) ஏன்

230)
கோடிகள் மொத்தமும் நாட்டிலுள்ள கேடிகளை
மட்டுமே நாடுவ(து) ஏன்

September 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்


வில்லி:/இன்பம்
221)
கசக்கி எறிந்தாள்; எரிந்தாலும் என்னுள்
கசக்கா(து) அவளின் நினைவு

222)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நானிருப்பேன்; எப்படியும்
வீழ்த்திவிடும் நோக்கில் அவள்

223)
நாசுக்காய் உள்ளம் நசுக்குவாள்; சொல்லாமல்
நாசம் விதைப்பாள் அவள்

224)
விடைத்தாள் எனக்குள்; விதிகள் மறந்தேன்;
விடைத்தாள் முழுதும் அவள்

225)
என்னவென்ற கேள்வியுடன் நின்றிருப்பேன்; ஓர்நொடிக்குள்
என்னைவென்று சென்றிருப்பாள் பெண்

September 15, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



படி, அதுதான் படி :/பொருட்பால்
216)
வேதமோ வாதமோ எண்ணத்தைச் சேதமின்றி
சொல்லும் வழியைப் படி


217)
புனிதராய் மாற முயலா(து) உலகில்
மனிதராய் வாழப் படி


218)
காடுசொல்லும் வாழ்க்கை முறைபடி; வீட்டுக்குள்
வாழும் உணர்வைப் படி


219)
உழைப்பைச் சுரண்டும் பிழைப்பை, மிரட்டி
அழிக்கும் வழியைப் படி


220)
பெரியோரின் சொற்படி நன்குபடி; ஆகுமடி
சொர்க்கத்தின் வாசற் படி

September 13, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்


வாக்கும் நாக்கும் : / பொருள்

211)
பானம் பருகிய பின்சொல்லால் பாணம்
தொடுக்கும்வில் ஆகிவிடும் நாக்கு

212)
இதயத்தில் தொக்கிக் கிடப்பதுதான் நாக்கில்
உதித்து வெளியே வரும்

213)
சொல்வாக்கு சுத்தம் இருக்கும் இடம்தேடி
செல்வாக்கும் ஓடி வரும்

214)
வாக்கால் உயர்வடைய வேண்டுமெனில் முன்துள்ளும்
நாக்கிற்குப் போடு தடுப்பு

215)
வாக்கால் இணைந்துவிட்டால் நம்முள் வருமாமோ
வாய்க்கால் தகராறு கூறு

September 8, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



எல்லாமும் ஆவாளே இல்லாள் :/இன்பம்
( நாளை எங்கள் மணநாள் : அவளுக்கு என்குறளைப் பரிசாகக் கொடுத்துப் பதிலுக்கு அவள்குரலைப் பெறுவேன் .... வாழ்த்துங்கள் எங்களை :)

206)
தாய்பத்துத் திங்கள்தான்; தன்னாயுள் தாண்டியும்
என்னைச் சுமப்பாள் இவள்


207)
நான்வந்து தோள்சாய்க்கும் ஏணியவள்; தான்வந்தென்
தோள்சாயும் தோழி அவள்


208)
நெடும்தூரம் எல்லாம் நொடியில் தொடும்தூரம்
ஆகுமவள் வந்த பிறகு


209)
துயில்கிறது கண்ணிரண்டு; நாணும் மயிலிறகு;
தானும் அழகில்லை என்று


210)
சிறுவெள்ளை வானில் இருநிலவு; வட்டக்
கருநிலவு என்னவளின் கண்

September 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



கடவுள் வாழ்த்து :அறம்
201)
நேற்றாகி இன்றாகி என்றும்தான் என்றாகி
நிற்பானின் தாள்வணங்கிப் போற்று

202)
இடத்தைத் திறப்பார் வலத்தை அடைப்பார்;
தடத்தை அறிந்துகொள் நீ

203)
காட்டுவார் என்றெதிர் பார்த்தால் அதுஇயல்பு;
ஊட்டுவார் என்றிருந்தால் தீது

204)
எண்ணம் நிறைவேற வில்லை யெனில(து)
இறைவனின் எண்ணமென்று கொள்

205)
அர்ச்சனை இல்லாத ஆலயம் காட்டும்
பிரச்சனை இல்லா உலகு

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



வாழ்க உறவுகள்

எனது சகோதரர்கள் பாஸ் என்னும் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் தூண்டிவிட,ப்ரசாத் வேணுகோபால் தலையில் தட்டி தளைத் திருத்தம் சொல்ல
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன் ... இதோ ...இன்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்....10 மாதங்கள்..உங்களின் உற்சாக உந்துதலினால் ...200 குறள்கள் முடித்திருக்கிறேன்... :))
மாதம் 20 :))
(# இதில் எத்தனைதான் தேறும் என்பது வேறு கணக்கு )

”குறள் அமைப்பை ஒத்துத்தானே இருக்கிறது ?
ஏன் குறள் போல என்று ஐயத்தோடு தலைப்பு? மாற்றுங்கள்! ”
- என்ற பெரியவர்களின் அறிவுரையின்படி தலைப்பை மாற்றி இருக்கிறேன் ..
( முதலில் என்மேல் எனக்கில்லாத் நம்பிக்கையின் வெளிப்பாடு அது ... யாராவது ‘என்னய்யா இது ?’ என்று கேட்டால் அந்த ‘போல’வைக் காட்டித் தப்பித்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருந்தேன் :இன்னும் பலருக்கு இந்த ஐயம் உள்ளது என்றே நினைக்கிறேன்.. கேட்காமல் இருக்கிறார்கள்..அவ்வளவுதான் : ))

தொடர்ந்து வழிகாட்டுங்கள் ... பயணிக்கக் காத்திருக்கிறேன்

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!

September 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்ததைச் சொல்லவா ?

196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்


197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு


198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு


199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி


200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.