இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

March 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...! ஈழம் : (60 - 69)

ஈராண்டுகளுக்கு முன்னர்
'எனதுயிர் அக்கா'வின்
மனத்துயர்த் துடைக்க
வடித்து அனுப்பிய தம்பியின் ஓலை இது
மடித்து அனுப்பிய தாயின் துண்டுச் சீலை இது..

ஜெனீவாவின் இன்றைய நிலைகண்ட தாக்கத்தோடு ..
இனியாவது நடப்பது நல்லதாகட்டும் என்ற ஏக்கத்தோடு
இதை இங்கே உங்கள்முன் பகிர்ந்துகொள்ள நினைத்தவுடன் ....
விதைத்து விட்டேன் ..உங்கள்முன் படைத்துவிட்டேன்.....

எழுதியதில் இன்று ஒருபகுதி உண்மையாகி இருக்கிறது
பழுதெதுவும் இன்றி மறுமீதியும் நன்மையாக வாழ்த்துங்கள்

வாழ்க உறவுகள் >>.ஒர் அதிகாரத்திற்கான சாட்சியாய் .......!
1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு, வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு, வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் ’வெட்டி’வீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம்

ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை
ஈழம் உணர்த்தும் உமக்கு [01]

யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த (சிங்கள)யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ’ஈழம்’.

பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே
புதருள் இருக்கும் புலி [02]

எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒருபுலி

அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி
உண்டாம் எதற்கும் அறி [03]

தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று’ எந்த விசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு ‘

புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்
விதையென்(று) அறிவீரா நீர் [04]

சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் ’வீரிய’விதைகள் என்பதை.


ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]

போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது ’வ(வெ)ல்லரசுத்தோற்றம்’ வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்

2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும், கூட்டம் கூட்டமாய் ’கூட்டை’ இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்கு…தொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :
வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;
வலியதாய் ஆகும் மனது [06]

தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்
பழுத்துவிடும் தங்கமடா நாம் [07]

எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்
எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]

ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை நமக்கு [09]

திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்
உலகும் அணிதிரளும் அன்று [10]


மேலுள்ள எதற்கும்….
விளக்கம் என்றெதுவும்
தேவையில்லை உனக்கு .

காலமும் கனியும் நமக்கு..
கலக்கம் தராதிரு மனதுக்கு....

உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்’
கலங்கும்நாள் ’வெகுவிரைவில் இருக்கு’ .......