இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

March 31, 2017

பாட்டி வைத்தியம் - 4 _காய்கனியின் நிறத்தில் மறைந்திருக்கும் குறிப்பு ...!
852)
பாயும் அழுத்தத்தை புற்றைக் குறைப்பதுடன்
நோய்எதிர்ப்பைக் கூட்டும் சிவப்பு

853)
கொழுப்பைக் குறைத்துத் தசையை எலும்பை
வளர்க்கும் பச்சை இனம்

854)
நீலம் உயர்த்தும் செரிமானம், நீளும்
உடல்உள் உறுப்பின் பலம்

855)
திசுக்குறைவை புற்றைத் தவிர்க்கும் இதய
நலனுயர்த்தும் மஞ்சள் பழம்

பாட்டி வைத்தியம் - 3 _ அறுசுவையும் மருந்து ...!
846)
கரும்புஅரிசி கோதுமை மூலம் இரும்பாய்
தசையை வளர்க்கும் இனிப்பு

847)
எலுமிச்சை தக்காளி மாங்காய் புளியால்
கொழுப்பைப் பெருக்கும் புளிப்பு

848)
சுரைக்காய் பூசணி முள்ளங்கி மூலம்
உமிழ்நீர் சுரக்க உவர்ப்பு

849)
மிளகு கடுகு மிளகாய் உருவில்
எலும்பைத் திடமாக்கும் கார்ப்பு

850)
பாகல்எள் கத்திரி வெந்தயம் வேம்பால்
நரம்பைவலு வாக்கும் கசப்பு

851)
அருகம்புல் வாழை அவரைநெல்லி கொண்டு
குருதிசுத்தம் செய்யும் துவர்ப்பு

March 20, 2017

குருவியையும் குருவெனக் கொள்...!

சிட்டுக்குருவி தினம் இன்று !

841)
கோபுரம் கட்ட முடியாது எனினும்
குருவிகட்டும் கோபுரத்தில் கூடு


842)
அருவியை அள்ளிப் பருக குருவி
விரும்பினால் என்ன தவறு


843)
சிறிய குருவி சிறகை விரித்தால்
சுருங்கி அடங்கும் உலகு


844)
சிறகில் இருந்து விலகும் இறகால்
குருவிக்கு வாராது இழப்பு


845)
பிறப்பிடம் விட்டுப் பறக்கும் குருவி
இறக்கை முளைத்த பிறகு

March 13, 2017

இரோம் சர்மிளா ...! .. நல்லதோர் வீணை ..... !!


---பதினாறாண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் - கிடைத்ததோ தொண்ணூறு ஓட்டுகள்----

831)
போராளி என்போர் பெரும்பாலும் ஏமாளி
என்றுதான் பேர்பெறுவார் இன்று

832)
போராளி போராடித் தோற்றுவிட்டால் கோமாளி
யாகத்தான் பார்க்கும் உலகு


833)
நன்றிகெட்ட நாய்களுக்கு நம்பிக்கை ஊட்டவா
தும்பிக்கை யோடலைந்தாய் நீ

834)
ஒருவரிடம் ஏமாந்தாய் என்றால் அவரைமிக
நம்பினாய் என்றே பொருள்


835)
இருக்கும் வரைத்தள்ளி நிற்பது; இறந்தபின்
போற்றுவது தான்நம் இயல்பு

836)
வழிதெரிய வைத்தோரை நன்றி மறந்து
வழித்தெறிவோர் வீழ்ந்தாலும் நன்று


837)
ஊர்வாழ வேண்டுமென ஈரெட்டாண்டு அன்னத்தை
விட்டவளைக் கைவிட்டது ஊர்

838)
நம்நலம் காப்பதற்குத் தன்சோற்றை விட்டதற்கு
தந்தோம்நாம் தொண்ண்ண்ணூறு ஓட்டு


839)
அறியற்கு அரியது அறியானைச் சேர்ந்தால்
பெரிதாய் அடையும் இழிவு


840)
தனைநம்பி வந்தவரை வீழ்த்த நினைப்பவரின்
வாழ்வுதனை வீழ்த்தும் வினை