இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / இன்பம்


அவளைப் பற்றி(ய) நான் :
346)​
​​கண்ணில் வெடிவைத்துக் காத்திருப்பாள்; கண்ணிவெடி
தோற்றணையும் கன்னியிவள் முன்பு

​347)​
​​கதிர்அரிவாள்க் கூர்கண் அவளுக்கு; எதிர்வருவாள்
என்செய்யப் போகிறேன் நான்

​348)​
​​வாழப் பிடிக்கும் இடமெது வென்பேன்;உன்
தோள்தான(து) என்பாள் பிடித்து

​349)​
​​முப்பொழுதும் உன்நினைவே தானென்றேன்; மூச்செறிந்தாள்
எப்பொழுதும் ஏனில்லை என்று

​350)​
​​மீனானால் வீழ்ந்திருப்பேன்; மானானால் வாழ்ந்திருப்பேன்
தானாக உன்வலைக்குள் நான்

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


அறிவு :


341
கொடுக்கும் மனத்தை கெடுக்கும் குணத்தை
விடுக்கும் துணிவே அறிவு

342
குறையை மறைக்க முனையா(து) அளவைக்
குறைக்க முயல்வ(து) அறிவு

343
துளையைச்சீர் செய்யாது நீர்சேர்க்கப் பாயும்
நிலையைத் தவிர்த்தல் அறிவு

344
தங்கத் திடம்சேரும் செம்பு நகையாகும்;
தங்குமிடம் தேர்வ(து) அறிவு

345
முயல்பிடிக்கும் கூரை முகம்பார்த்துக் கூறும்
இயல்பை அடைதல் அறிவு