இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2015

இளையோரே ... சோதிப்பீரா ஏற்பீரா !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- சுயபரிசோதனை ---
1)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்

2)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்

3)
வழித்தெறியும் முன்புஅறி; உள்ளிருக்க்க் கூடும்
வழிதெரிய வைக்கும் குறிப்பு

4)
கற்றதைக் கற்றுத் தரமறுக்கும் குற்றமனம்
கொண்டோரை விட்டு விலகு

5)
பாதி தெரிந்துகொண்டும் மீதி புரிந்துகொண்டும்
சேதிபுனை வோரை ஒதுக்கு


--- பொதுவாய் சில ---
6)
தரத்தினை உன்திறம் என்று கொண்டால்
வரும்உன்னைத் தேடி வரம்

7)
ஒளியூட்டும் உன்செயல் ஒன்றால் ஒளியட்டும்
மன்றத்தார் உள்ளத்து இருள்

8)
யாரெவர் என்றெதுவும் பாராது உதவநினை;
ஊருலகும் வாழ்த்தும் உனை

9)
செல்வாக்கு செல்வத்தைச் சேர்ந்ததன்று; சொல்வாக்கின்
சுத்தத்தைச் சார்ந்தது அது

10)
நானென்று நிற்காமல் நாணாமல் நாணலைப்போல்
நன்றாய் வளைவோர்க்கே வாழ்வு

இளையோரே ....இலக்கடைவீர் !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- வெற்றி ---
1)
முன்மயக்கம் பின்தயக்கம் இல்லாத உன்இயக்கம்
வெற்றியிடம் சேர்த்து விடும்

2)
வெற்றிக்குப் பின்வரும் கர்வம் புதை;தொடரும்
வெற்றிக்கு அதுதான் விதை

3)
வெற்றிக்குப் பின்னும் அடங்கி இருப்பானின்
பின்ஒடுங்கி நிற்கும் அது

4)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்

5)
எல்லையைத் தாண்டுவது ஏதெனினும் தொல்லைதரும்
முன்னரே வெட்டத் துணி

--- எச்சரிக்கை ---
6)
கவசமின்றி சாலைப் பயணம் எதற்கு;
திவசமின்றிப் போகும் உனக்கு

7)
நூறைஎட்டி விட்டால் உனக்காகக் காத்திருக்கும்
நூற்றியெட்டில் பெட்டியொன்று போ

8)
உருவத்தில் ஒன்றாது இருக்கப் பழகு;
பருவத்தில் பன்றி அழகு

9)
அகம்தவிர் உன்னுள்; வெளியே நிகர்எதிரி
உண்டாம் எதற்கும் அறி

10)
பயந்து பயந்துனது பாதம் பதித்தால்
பயந்தது போலாகும் போ

இளையோரே....அறிவீரா...துணிவீரா !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- அறிவீரா ---
1)
ஆவணம் இன்றி அவைப்புகுந்தால் கோவணம்
போகும் நிலைதான் வரும்

2)
மழையில்லா ஊரில் குடைப்பிடித்தால் உந்தன்
நிலையின்மேல் ஐயம் வரும்

3)
எள்கேட்டால் எள்மட்டும் கொண்டுசெல்; இல்லையெனில்
எள்ளும்தான் எள்ளுமுனைக் கண்டு

4)
பின்தொடர்வோர் எல்லாம் பணிந்தவர் இல்லை;அதில்
உன்னைக் குறிவைப்போர் உண்டு

5)
எதிரியில்லை என்றாலும் வீழ்த்திவிடும்; வீழ்த்த
எதிரியில்லை என்னும் செருக்கு

--- துணிவீரா ---
6)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


7)நெஞ்சினுள் அஞ்சுவதை கொஞ்சம்நீ காட்டுமிடம்
நஞ்சினைப் பாய்ச்சிவிடும் பாம்பு

8)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை

9)
எதிர்க்க முடியாதது என்றெதுவும் இல்லை
எதிரிக்கும் உண்டுபயம் நம்பு

10)
மிஞ்சியதைத் தந்துன் உழைப்பையள்ளித் தின்பவரை
மிஞ்சவும்ஓர் நாள்வரும் வாய்ப்பு

இளையோரே...உமக்குச் சொல்வேன் !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​


--- உன்னால் முடியும் ---
1)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு;
வரம்கேட்டு நிற்பது எதற்கு

2)
வாழைக்கும் உண்டாம் வழித்தொடர ஓர்கன்று;
நாளைநமக்(கு) உண்டென்று நம்பு

3)
எதனால் இழக்கிறாய் உன்தெம்(பு); எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு

4)
தலைக்கனம் இல்லா(து) இலக்கணம் தாண்டு;
துலங்கும் புதிய உலகு

5)
தடைமுடையைக் கண்டுபிடி;. வென்றுமுடி; வாழ்வின்
மடைதிறக்கும் நல்ல படி

---அறிவரை சில ----
6)
பலம்கொண்டேன் என்று பலரைப் பகைத்தால்
பயனின்றிப் போய்விடும் வாழ்வு

7)
வாயில் கடக்கும் பொழுதுபிறர் வாயில்
விழாதவகை வாழ்வ(து) அறிவு

8)
தூக்கம் ஒருதோளும் ஏக்கம் மறுதோளும்
தூக்கினால் வீணாகும் வாழ்வு

9)
பழம்பெரும் சொற்பொருளை புத்திக்குள் ஏற்று;
பலம்பெறும் இவ்வுலக வாழ்வு

10)
துச்சமென்று யாரையும் தூற்றாதே; யார்க்குமுண்டு
உச்சமொன்றை வந்தடையும் வாய்ப்பு



September 25, 2015

ஆண்மையின் மறுபக்கம்...!


611)
ஆண்அழுதால் கோழையெனக் கொள்ளாதே; தான்யார்
எனஉணரும் வேளை அது

612)
பெண்மைமேல் ஆளுமை செய்யாதத் தன்மையே
உண்மையில் ஆண்மையெனக் கொள்

613)
ஆளுமையை ஓர்குழந்தை மேல்காட்டும் ஆணெல்லாம்
கோழையினம் என்போர்க்கும் கீழ்

614)
எப்பொழுதோர் பெண்உன்னை நம்பத் துணிவாளோ
அப்பொழுது தான்ஆவாய் ஆண்

615)
மீசையைக் காட்டி மடக்காமல் ஆசையைக்
கொட்டி அடக்குவான் ஆண்


September 17, 2015

கூடா நட்பு / உட்பகை ..!


606)
பசப்புமொழி பேசி அருகிருக்கும் நட்பே
கசப்பின் இருப்பிடமா கும்

607)
புரிந்துகொள்ளல் இல்லா உறவை உதறிப்
பிரிந்துசெல்லல் என்றும் சிறப்பு

608)
புரிந்தோரால் உண்டாகும் நோவு; பிரிந்தோரால்
உண்டாகும் நோயிலும் தீது

609)
வலிய வருவார்; விலகி விடுவார்;
வலியைத் தருவார் இவர்

610)
மெய்வாள்வேல் போலன்றி; சொல்லாமல் கொல்லுமாம்
பொய்யாய் இணைந்திருக்கும் நட்பு

September 15, 2015

கலிகாலம் ...இது கலிகாலம்...!



601)
ஊர்சேர்ந்து தேரிழுப்பார் என்பது(அ)ன்று; ஆறேழு
பேர்சேர்ந்தால் தேரெரிப்பார் இன்று

602)
சூழல்பார்த்து ஊழல் நடந்ததன்று; ஊழலில்லாச்
சூழலே இல்லையாம் இன்று

603)
மெய்யது உலவத் துவங்கும்முன்; பொய்யது
உலகத்தைச் சுற்றிவிடும் இன்று

604)
இயலாரின் வெற்றி; முயல்வோரின் தோல்வி;
இயல்பாகிப் போய்விட்டது இன்று

605)
ஏய்த்துப் பிழைக்குமந்தத் தந்திரத்தைக் கற்றோர்க்கே
வாய்க்கும் சுதந்திரம் இன்று

September 12, 2015

குறிப்புகள் சில ... உள்ளிருக்கும் செய்திகள் பல ...!


596)
வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலும் பள்ளத்தைப்
பார்த்துத்தான் பாயும் புனல்

597)
கூர்முனைத் தாக்குதலைத் தாங்கிநிற்கும் பாறையை
வேர்முனை வீழ்த்தி விடும்

598)
இடைவெளி இல்லாது இடித்தால்; மறையும்
இடிமேல் இருக்கும் பயம்

599)
இருள்சூழ்ந்து இருக்கும் பொழுதே தெரியும்
மிகவும் தெளிவாய் நிலவு

600)
அருகில் இருந்தும் அகப்பை அறியா(து)
அருமை அமுதின் சுவை

September 9, 2015

இதுவும் நன்றிக்கடனே !


இன்று .... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...ஆம் நான் மீண்டு(ம்) பிறந்த மணநாளில் ..என்னவளுக்கு .... என்னாலான சின்னஞ் சிறுபரிசு !
591)
ஆண்டவன்முன் ஓம்சொன்னால்; ஆள்பவள்முன் ஆம்சொன்னால்
தானாகத் தேனாகும் வாழ்வு

592)
வேறாகி நிற்பேன்; நிலையகற்றிக் காலின்கீழ்
வேராகிக் காப்பாள் இவள்

593)
தடுமாறும் என்னை தரைமோதும் முன்பு
கரைசேர்க்க வந்தாள் இவள்

594)
வந்தாரைப் போஎன்றோர் சொல்சொல்லாள்; மந்தாரைப்
பூச்சொல்லால் செய்வாள் சிறப்பு

595)
உலர்ந்த உணவை மலர்ந்த முகத்தால்
விருந்தாக மாற்றிவிடு வாள்

September 3, 2015

வாய்ச்சொல் வீரர் !


586)
பின்புலத்தைத் தூக்கிமுன் பந்தியில் வைத்ததை
தன்பலம் என்பார் இவர்

587)
தற்செயலாய் வந்தடைந்த ஒன்றினை தன்செயலால்
வந்ததிது என்பார் இவர்

588)
நாறியதை ஊரறிந்த பின்னாலும்; தற்பெருமைக்
கூறித் திரிவார் இவர்

589)
பணிவாய் தணிவாய் பழகும் குணத்தை
துணிவில்லை என்பார் இவர்

590)
எள்ளின்றி நெய்எடுப்பேன்; தூண்டியில் முள்ளின்றி
மீன்பிடிப்பேன் என்பார் இவர்