இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம்


விதைகள் :
அவன்
முறைவைத்(து) உதவிக்(கு) அழைக்கும் வரையில்
மறைந்திருக்க மாட்டான் இறை [336]

கடவுளைக் காண கடஉள்; கடந்துவிட்டால்
நீயே கிடைக்கலாம் அங்கு
[337]
அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது [338]

அப்பா
சிந்தை சிதறாமல் முன்னேRuRறு; தந்தையின்
பாதையிலுன் எண்ணம் செலுத்து [339]

ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது [340]

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க்கை :
331)
பறக்க முடிந்தும் கிறங்கிக் கிடந்தால்
பரணில் கிடைக்கும் இடம்

332)
புறம்பேசான் வந்தால் தழுவும்; பிறனென்றால்
எள்ளி நழுவும் உலகு

333)
இறுக்கும் இடத்தில் இருக்கும் நிலையைத்
துறந்தால் சிறக்குமுன் வாழ்வு

334)
வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி
முடியும் கணிதமில்லை வாழ்வு

335)
தேங்கிக் கிடந்தால் நதியில்லை; தூங்கிக்
கிடந்தால் கடலில்லை போ

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


வாழ்வின் அச்சு :

326)
கண்ணோடு கண்நோக்கி கன்னம் உருவாக்கும்
உன்நோக்கம் தானென்ன கூறு

327)
நோக்கும்உன் கண்செய்யும் தாக்கம் மிகப்பெரிது;
நோக்கும்முன் தோற்பேன் இனி

328)
தேவையைத் தானுணர்ந்து முன்வந்து தீர்த்துவைக்கும்
தேவதையைக் கொண்டவனாம் நான்

329)
சுற்றுமுற்றும் யாருமின்றிப் போனாலும் சுற்றி
வருமவளே என்வாழ்வின் அச்சு

330)
மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ