இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label எளிமை. Show all posts
Showing posts with label எளிமை. Show all posts

April 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இல்லாள் :
(81)

‘தங்க’ மயில்வருமா என்றேங்கிக் காத்திருந்தேன்;
வந்ததோ ‘தங்கமயில்’ ஒன்று

(82)
இனியவள் தேனின் இனியாள்; இனியவள்
இல்லா(து) இனியில்லை வாழ்வு

(83)
விறகாய் இருந்தேன்; பிளந்தே நுழைந்தாள்
சிறகாய் விரிந்த(து) எனக்கு

(84)
போகாப் பொழுதெல்லாம் பாவையின் அண்மையில்
போதாத(து) ஆன(து) எனக்கு

(85)
நிழலையும்மண் தீண்டும்முன் தாங்குவேன்; அன்பே
மழலைநீ என்றும் எனக்கு

(86)
தண்டில் இருந்தாலும் மொட்டுக்கு வண்டின்
வரவுதான் சேர்க்கும் சிறப்பு :)

(87)
நொந்துபோய் நின்றாலும் வந்தவள் தாங்கினால்
சொந்தமாய்த் தோன்றும் உலகு

(88)
உண்மைபோல் பொய்யாய்என் முன்நடிப்பள்; உண்மையில்
மெய்க்குள் துடிக்கும் எனக்கு

(89)
வலியை விரட்டும் வழியை அறிவாள்;
வலியதாம் ‘இல்லாள்’ மனது

(90)
மின்னலைப் போல்இணைந்தாள்; என்னுள் பிணைந்(து)இனி
இன்னலைத் தீர்ப்பாள் துணிந்து

January 27, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



இயலாமை :
36)
கோட்டையெல்லாம் ஆண்டான் கணக்கு; ஒரேயொரு
கோட்டைநெல் போதும் எனக்கு


37)
வேண்டுமட்டும் கூர்வார்த்தை யால்கீறு; ஆனாலும்
வேண்டுமோர் வாய்சுடு சோறு


39)
பட்டிக்குள் ஆடு; முடிந்தவரை ஆடு;பலிப்
பட்டியலில் நீமுதல் ஆடு

December 31, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


எல்லாம் அவள் :

27)
கொடியவள்; நாள்தோறும் என்மனம் கொல்வாள்;
இடையில்லாப் பூங்கொடிய வள்

28)
உறங்கிக் கிடந்தேன்; உலுக்கி அணைத்தாள்;
கிறக்கத்தில் இப்பொழுது நான்

30)
மின்னஞ்சல் வந்துவிழும் மின்னலவள் பேரோடு;
பொன்னூஞ்சல் ஏறும் மனது

December 28, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....5

உண்மை அறி,உன்னை அறி, நீதான் அரி :


சக்கரம்போல் சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளைக் கண்டுணர்வாய்;
அச்சகற்றி வீழ்த்திடுவாய்; அச்சமின்றி வாழ்ந்திடுவாய்;
உக்கிர வேதாளம் மேலேறித் தொங்கிவரும்
விக்கிர மாதித்தன் நீ

(குறிப்பு : விக்கிரமதித்தன் முதுகிலேறி வேதாளம் இருப்பதுதான் வழக்கம் )

December 18, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

காதல் : ( காதலில் கண் ... கண்ணல்ல அது ..துளைக்கும் 'கன்' )
22)
தன்கண்ணால் என்கண்ணுள் தூண்டிலிட்டுப் பார்த்திருப்பாள்;
தன்னால் வியர்க்கும் எனக்கு

23)
மான்விழியால் என்னுள் வலைவிரித்துக் காத்திருப்பாள்;
மீனாகி வீழ்ந்திருப்பேன் நான்

December 11, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

கூடல்:
19)
கண்டோடி, பின்நின்று, கண்ணசைப்பாள்; கண்டபடிக்
கொண்டாடித் துள்ளும் மனது

குறிப்பை விட்டுச் செல்கிறாள் அவள் :)

ஊடல்:
20)
'மலரேன்'*என்(று) என்மனதைத் தைத்தாள்; 'மலரேன்'**
எனவேண்டும் பைத்தியமாய் நான்

(ஒர் வார்த்தை - இருபொருள் _
*எதிர்ப்பதம் - மலர/பூக்கமாட்டேன் என்று மறுக்கிறாள் மலர் போன்ற அவள்.
** வேண்டுகோள் - மலர்வாயா எனக்காக ? எனறு வேண்டும் பைத்தியமாய் அவன் )

தேடல் :
21)
மார்கழியில் மாருள் குளிரெடுக்க; சாமத்தில்
ஊர்க்கோழி* மட்டும் துணைக்கு

(தனிமையின் வேதனை)
* ஊர்க்கோழி - எங்கோ ஊர்எல்லையில் இரவெல்லாம் விழித்துக் கூவியபடி இருக்கும் )


...இன்னும் வரும் :)

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!


புதுக்கவிதைகள் போலவே ..... படித்தவுடன் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெண்பாக்களைத் தரமுடியும் எனக்காட்ட முற்படும் ஒர் 'அணிலின்' சிறு முயற்சி இது ....... பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள் .... கருத்துக்களைக் கூறி ஆதரவு தாருங்கள்.....

பாரதியின் பிறந்த நாளில் பிறக்கிறது இந்த இழை....
உயரத்தில் பறக்கவைக்கப்போவது நீங்கள் தான்

1. அக்கினிக் குஞ்சு :

வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..