இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 7, 2016

நட்பதிகாரம்..!


நண்பர்கள் தின வாழ்த்துகள் !

816)
தன்தவறைக் கல்போன்றும் உன்தவறை எள்போன்றும்
காண்பவனின் நட்பே வரம்


817)
ஆவேசம் நட்பினுள் கொண்டாலும் நட்பாகும்;
வேசமிட்டால தான்தப்பா கும்


818)
சிந்திக்கும் நட்பின் துணைமட்டும் தான்எதையும்
சந்திக்க வைக்கும் உனை


819)
உன்தவறை உன்முன்நின்று சொல்பவன்தான் நண்பன்;உன்
பின்நின்று சொல்பவன் வேறு


820)
சிந்திக்கும் நண்பரை விட்டு விலகியதால்
சந்திக்கு வந்தோர் பலர்

August 6, 2016

நபிமொழி - 15 .... குடும்பவியல் !


என்குறள் 806 - 815 :
உறவியல்:
தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.............................. புகாரி 5971

கணவனின் செல்வத்தை செய்யும் செலவைக்
கணித்திருப்பது இல்லாள் பொறுப்பு
.................... புகாரி 5365

நல்லறம் தானே இறைவிருப்பு; பிள்ளைகளும்
செல்வமும் இவ்வாழ்வின் ஈர்ப்பு
....................... குர்ஆன் 18:46

சிந்தைத் தெளிவும் ஒழுக்கப் பயிற்சியும்
தந்தை வழங்கும் பரிசு


உணவளிக்க ஆளில்லா வேளையில் நானுண்டு
எனும்மகள்தான் உன்தர்மம் ஆம்

(மேலுள்ள இரு மொழிகளுக்கும் .. (கவனக் குறைவால்)குறிப்பெண்ணைக் பதியத் தவறிவிட்டேன். அறிந்தோர் சுட்டினால் மிக நன்றியுடனிருப்பேன்

இல்லறவியல்:
சமஉரிமை கொண்டோர் எனினும் தமக்கிடையில்
விட்டுக் கொடுத்தால் சிறப்பு
........................ புகாரி 2455

இல்லறத்தில் விட்டுக் கொடுத்தொத்துப் போவதில்
இல்லை ஒருபோதும் தப்பு
......................... புகாரி 2694

இல்லற வாழ்வை இறைவழியில் வாழ்வது;
நல்லறம் செய்வதற்கு ஒப்பு
........................ முஸ்லிம் 1674

உறவுநலம் காக்கச் செலவிடல் என்பது
உரியோர்க் கடமையா கும்
......................... புகாரி 5355

உறவின் நலம்காத்து வாழ்ந்து வருவோர்
உறவை விரும்பும் இறை
......................... புகாரி 5987