இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 16, 2016

நபி மொழி - 1 ..... என் வழி ..!


வாழ்க உறவுகள் ....
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...எல்லாரையும் சென்றடையும் வகையில் எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது நீண்டநாள் கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )

என்குறள் :- 646 - 655
பாட்டன் திருக்குரலை_பாட்டாய், திருக்குறளாய்
ஏட்டில் விதைப்பேன் இனி

நபி மொழிகள்:


இறையை எதனோடும் செய்யாதீர் ஒப்பீடு;
அறிவீர் அவர்க்கில்லை ஈடு
./அல்குர்ஆன் 19:74

அணுஅளவு தீதோ அணுஅளவு நன்றோ
அனுபவிப்பார் செய்தோர் அதை
./அல்குர்ஆன் 99:7,8

கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவனம்
தவறித் தொழுவோர்க்குக் கேடு
./அல்குர்ஆன் 107: 5,6,7


கூடும்நற் செல்வமுடன் நீண்டநாள் வாழ்ந்திட
கூட்டுக் குடித்தனம் செய்
./புகாரி 2067


தன்உழைப்பால் வந்தடையும் எவ்வுணவும் இவ்வுலகில்
ஆகச் சிறந்த உணவு
./புகாரி 2072

தங்கத்தில் ஆனதட்டில் உண்போரின் அங்கத்துள்
சேரும் நரக நெருப்பு
./புகாரி 5634


உருவோஉன் கைஇருப்போ அன்றி பிறர்க்(கு)உருகும்
உள்ளம் இறையின் விருப்பு
./முஸ்லிம் 5012

தற்பெருமை உன்னுள் கடுகளவே சேர்ந்தாலும்
சொர்க்கத்தில் இல்லை இடம்
./முஸ்லிம் 131

புறம்பேசும் வீணருக்குச் சொர்க்கத்து அருகில்
வருவதற்கும் வாராது வாய்ப்பு
./முஸ்லிம் 168


No comments: