இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2015

இளையோரே ....இலக்கடைவீர் !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- வெற்றி ---
1)
முன்மயக்கம் பின்தயக்கம் இல்லாத உன்இயக்கம்
வெற்றியிடம் சேர்த்து விடும்

2)
வெற்றிக்குப் பின்வரும் கர்வம் புதை;தொடரும்
வெற்றிக்கு அதுதான் விதை

3)
வெற்றிக்குப் பின்னும் அடங்கி இருப்பானின்
பின்ஒடுங்கி நிற்கும் அது

4)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்

5)
எல்லையைத் தாண்டுவது ஏதெனினும் தொல்லைதரும்
முன்னரே வெட்டத் துணி

--- எச்சரிக்கை ---
6)
கவசமின்றி சாலைப் பயணம் எதற்கு;
திவசமின்றிப் போகும் உனக்கு

7)
நூறைஎட்டி விட்டால் உனக்காகக் காத்திருக்கும்
நூற்றியெட்டில் பெட்டியொன்று போ

8)
உருவத்தில் ஒன்றாது இருக்கப் பழகு;
பருவத்தில் பன்றி அழகு

9)
அகம்தவிர் உன்னுள்; வெளியே நிகர்எதிரி
உண்டாம் எதற்கும் அறி

10)
பயந்து பயந்துனது பாதம் பதித்தால்
பயந்தது போலாகும் போ

No comments: