இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2015

இளையோரே....அறிவீரா...துணிவீரா !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- அறிவீரா ---
1)
ஆவணம் இன்றி அவைப்புகுந்தால் கோவணம்
போகும் நிலைதான் வரும்

2)
மழையில்லா ஊரில் குடைப்பிடித்தால் உந்தன்
நிலையின்மேல் ஐயம் வரும்

3)
எள்கேட்டால் எள்மட்டும் கொண்டுசெல்; இல்லையெனில்
எள்ளும்தான் எள்ளுமுனைக் கண்டு

4)
பின்தொடர்வோர் எல்லாம் பணிந்தவர் இல்லை;அதில்
உன்னைக் குறிவைப்போர் உண்டு

5)
எதிரியில்லை என்றாலும் வீழ்த்திவிடும்; வீழ்த்த
எதிரியில்லை என்னும் செருக்கு

--- துணிவீரா ---
6)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


7)நெஞ்சினுள் அஞ்சுவதை கொஞ்சம்நீ காட்டுமிடம்
நஞ்சினைப் பாய்ச்சிவிடும் பாம்பு

8)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை

9)
எதிர்க்க முடியாதது என்றெதுவும் இல்லை
எதிரிக்கும் உண்டுபயம் நம்பு

10)
மிஞ்சியதைத் தந்துன் உழைப்பையள்ளித் தின்பவரை
மிஞ்சவும்ஓர் நாள்வரும் வாய்ப்பு

No comments: