இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இல்லாள் :
(81)

‘தங்க’ மயில்வருமா என்றேங்கிக் காத்திருந்தேன்;
வந்ததோ ‘தங்கமயில்’ ஒன்று

(82)
இனியவள் தேனின் இனியாள்; இனியவள்
இல்லா(து) இனியில்லை வாழ்வு

(83)
விறகாய் இருந்தேன்; பிளந்தே நுழைந்தாள்
சிறகாய் விரிந்த(து) எனக்கு

(84)
போகாப் பொழுதெல்லாம் பாவையின் அண்மையில்
போதாத(து) ஆன(து) எனக்கு

(85)
நிழலையும்மண் தீண்டும்முன் தாங்குவேன்; அன்பே
மழலைநீ என்றும் எனக்கு

(86)
தண்டில் இருந்தாலும் மொட்டுக்கு வண்டின்
வரவுதான் சேர்க்கும் சிறப்பு :)

(87)
நொந்துபோய் நின்றாலும் வந்தவள் தாங்கினால்
சொந்தமாய்த் தோன்றும் உலகு

(88)
உண்மைபோல் பொய்யாய்என் முன்நடிப்பள்; உண்மையில்
மெய்க்குள் துடிக்கும் எனக்கு

(89)
வலியை விரட்டும் வழியை அறிவாள்;
வலியதாம் ‘இல்லாள்’ மனது

(90)
மின்னலைப் போல்இணைந்தாள்; என்னுள் பிணைந்(து)இனி
இன்னலைத் தீர்ப்பாள் துணிந்து

No comments: