இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 13, 2009

திருக்குறளும் , என்குரலும்...

அதிகாரம் :3 நீத்தார் பெருமை
(ஆசிடைவெண்பாவாய் என்குறளும் , திருக்குறளும் )

21)
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்கள் - உலகில்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு[முதல்குறள் ஈற்று = நூல் ; ஆசு = கள் ]

23)
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்காண் - பிறப்பில்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு


[முதல்குறள் ஈற்று = கில் ; ஆசு = காண்]


24)
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் பூமிக்கு வித்து - சிறந்த
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


[முதல்குறள் ஈற்று = வித்து ; ஆசு = - ]


25)
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று - மனமென்னும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி


[முதல்குறள் ஈற்று = சான்று ; ஆசு = - ]


28)
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்பார் - சிறந்த
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]

1 comment:

திகழ் said...

இன்று தான் இந்த வலைப்பூவைப் பார்க்கின்றேன்.
தங்களின் பாக்களைக் காண்கையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தங்களின் எழுத்திற்கும் எண்ண்த்திற்கும் வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்