இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 29, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 003: நீத்தார் பெருமை] குறளுக்குக் குறளால் விளக்கம்

21)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
விளக்கக் குறள் :
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்


22)
துறந்தார் பெருமை துணைக்கூறி வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
விளக்கக் குறள் :
அ)
துறந்தோரின் நற்பெருமை கூறல்; உலகில்
இறந்தோரை எண்ணுதல் போல்
ஆ)
துறவியர் நற்பெருமை கூறுதலின் ஞாலத்(து)
இறந்தோரை எண்ணுவ(து) எளிது


23)
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு
விளக்கக் குறள் :
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்


24)
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
விளக்கக் குறள் :
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து


25)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி
விளக்கக் குறள் :
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று


26)
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
விளக்கக் குறள் :
அ)
பெரியோர் பெரும்செயல் செய்வார்; சிறியோர்
பெருமைச் செயல்செய்யா தோர்
ஆ)
அருஞ்செயல் செய்வோரே சான்றோர் ; சிறியோர்
எனப்படுவோர் ஒன்றும்செய் யார்


27)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
விளக்கக் குறள் :
அ)
புலம்ஐந்தும் ஆள்பவனைத் தேடிவந்து சேரும்
உலகினை ஆளும் பலம்
ஆ)
ஐம்புலன் ஆட்க்கொள்ளும் ஆற்றல் உடையோரை
என்றும் போற்றும் உலகு


28)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
விளக்கக் குறள் :
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்


29)
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
விளக்கக் குறள் :
அ)
நற்பண்புச் சான்றோர் பெருங்கோபம் கொண்டால்
சிறுகணம் கூடநிலைக் காது
ஆ)
நற்பண்புச் சான்றோரின் கோபம் எதிர்த்து
ஒருகணம் நிற்கஇய லாது

[இங்கே காத்தல் = இரண்டு பொருளும் தருவதாய் உணர்கிறேன்]
30)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
விளக்கக் குறள் :
அ)
அனைத்துயிர் அன்புகொண்(டு) அருள்புரிவார் அந்தணர்
என்ற அறஞ்செய் பவர்
ஆ)
அனைத்துயிர் அன்பால் அருளால் அறமாய்
அணைப்பார் அந்தணர்என் போர்

2 comments:

உமா said...

நன்று, நன்று. மிக அருமையாக செய்துள்ளீர்கள். சில நாட்களாய் வலைப்பக்கம் வரயியலாத நிலை. இனி தொடர்ந்து தங்கள் வலைப் பக்கம் வர முயல்கிறேன். நன்றி.

சிவகுமாரன் said...

காளான் எனச்சொன்னீர் காய்கறி வாங்கிடும்

ஆளாய் இருந்தால் தெரியுமே- நாளடைவில்

மட்டனுக்கும் சிக்கனுக்கும் மாற்றாம் அதனோடு

கட்டு(ம்)சோறு உங்கள் கவி.