இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 21, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 002: வான் சிறப்பு] குறளும், குறளால் விளக்கமும்

அதிகாரம் 002 : வான் சிறப்பு
11)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

விளக்கக் குறள் :
அ)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்
நல்அமுதம் என்றும் மழை

ஆ)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து காலமெல்லாம்
மண்புகும்அ மிழ்தாம் மழை



12)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

விளக்கக் குறள் :
உணவாக்க உற்ற துணையாகும்; உலகுக்(கு)
உணவாய் இருக்கும் மழை



13)
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி

விளக்கக் குறள் :
பருவமழை பொய்த்தால் கடும்பசியில் உய்யும்
பெரும்கடல் சூழ்இவ் உலகு




14)
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்


விளக்கக் குறள் :
அ)
புயல்போல் வழங்கும் மழைவளம் குன்றின்
வயலில் உழவும்குன் றும்

ஆ)
வாரி வழங்காது மாரி குறைந்துவிடின்
ஏரின்றி வாடும் நிலம்



15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


விளக்கக் குறள் :
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்யவல்ல(து) இங்கு மழை




16)
விசும்பின் துளிவீழின் அல்லாமல்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

விளக்கக் குறள் :
மழைத்துளி வீழாது போய்விடின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிது




17)
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

விளக்கக் குறள் :
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்



18)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விளக்கக் குறள் :
அ)
வான்மழை பொய்த்தால் உலகில் தடைபடும்
வானவரை வாழ்த்தும் விழா

ஆ)
வானவர்க்குப் பூசை நடக்காது போய்விடும்
வான்மழை பொய்த்தபின் இங்கு



19)
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விளக்கக் குறள் :
செய்தானம் நற்தவம் நின்றுவிடும் வான்மழை
பெய்யா உலகம் தனில்


20)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கு
வான்இன்று அமையாது ஒழுக்கு

விளக்கக் குறள் :
நீர்இன்றி வாழ்க்கை நகரா(து) உலகினில்;
யார்க்கும் அதுபோல் மழை

No comments: