இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 30, 2015

###### கலாம் ......!!!!!!!!!


546)
அல்லாவின் பிள்ளைஇவர்; இவ்வுலகப் பிள்ளைநம்
எல்லார்க்கும் தந்தை இவர்

547)
வல்லவன் செல்லும் வழியெல்லாம் வாழ்வமையும்;
புல்லும் இவன்கையில் கோல்

548)
விதைத்தவனுக்கு உண்டாம் உறக்கம்; புதைந்தாலும்
தூங்குவது இல்லை விதை

549)
பாவம் புதைக்கப் படும்தீவின் மத்தியில்
நேசம் விதைத்தனர் இன்று

550)
எட்டும் தொலைவிலின்று எட்டாம் அதிசயம்;
எட்டாத் தொலைவிலுண்டு ஏழு

551)
தெற்கில் உதித்து கிழக்கில் மறைந்தது
இரண்டாவது ஆதவன் ஒன்று

552)
கற்பிக்கும் போதேதம் சித்தம்போல் இவ்வுடலை
நீத்தசித்தர் அற்புதத்தைப் பார்

553)
பத்திரிக்கைப் போட்டார்; அவர்பற்றிப் போடாதப்
பத்திரிக்கை ஒன்றில்லை இன்று

554)
உடலொன்றை நீத்தார்; உடன்பல கோடி
உடலுக்குள் பூத்தார் இவர்

555)
தனியொருவன் பின்கூட்டம் கூடுமெனக் காட்ட
இனியொருவன் தேவையில்லை இங்கு


No comments: