இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 3, 2012

பொன்னியின் செல்வன் 100 : ராசராசனுக்கு என் (வெண்)பாமாலை...2



பெருமையின் பெருமை அவன் :
பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நாளில்
பெரும்திரளாய் பொங்கியமெய் கீர்த்தியை கண்ணசைவில்
கொன்றான்; ’அடியேன் சிவபாத சேகரன்’
என்றுரைத்து நின்றான் நிலைத்து (8)

சேனை புடைசூழ பொற்கவசம் பட்டுடுத்தி
யானைமேல் சுற்றுவான் சோழமன்னன் முன்பிங்கு;
வெண்ணிற ஆடையுடன் வெற்றுடம்(பு) என்றாலும்
வின்நிறைந்து நிற்கிறான் இன்று (9)

பொறுமையின் சிகரமானவன் :
அருண்மொழி வர்மனுக்(கு) ஆளும் உரிமை
இருந்தாலும் சிற்றப்பன் இச்சைக்(கு) அருமை
அரியணையை விட்டுத் துறந்த பெருமை
பொறுமைக்கு நல்லதோர் காட்டு (10)
(சிற்றப்பன் = உத்தமச் சோழன்)

கலங்காது காத்திருந்தால் காலம் கனியும்;
உலகாளும் வேளை ஒருநாள் வருமென்றும்
எண்ணிரண்(டு) ஆண்டுகள் கொக்கெனக் காத்திருந்து
திண்ணமாய் வென்றான் அரசு (11)

வேந்தென்றாலும் பாசத்தில் வீழ்ந்தவன் :
ஆதித்த சோழன் கொலைச்சதித் திட்டத்தைப்
போதித்த காந்தளூர்ச் சாலையின்மேல் போர்த்தொடுத்து
மொத்தமாய் வென்றொழித்து சுத்தமாய் நின்றழித்து
ரத்தப் பழிதீர்த்தான் வேந்து (12)

வாழ்வளித்த ஆதித்த சோழனை வஞ்சித்து
வீழ்த்திய சுற்றத்தை வேரோ(டு) அறுத்து
குலத்துடன் பேரரசைத் தாண்டித் துரத்தி
புலம்பெயரச் செய்தான்எம் வேந்து (13)
(ஆதித்த(கரிகால்)சோழன் = ராசராசனின் அண்ணன் )

வந்தியத் தேவன் அருண்மொழி வர்மனுடன்
குந்தவை வானதி பூங்குழலி மாதேவி
ஆதித்த சோழனும் நந்தினியும் உள்நுழைந்து
பாதிக்கா தாருண்டோ இங்கு (14)
(சோழன் பெருமையை தமிழகத்தின் கடைக்கோடிவரையிலும் எடுத்துச் சென்ற
ஐயா. கல்கி அவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்)


...........2

No comments: