இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 2, 2012

பொன்னியின் செல்வன் 100 : ராசராசனுக்கு என் (வெண்)பாமாலை...!


அன்பு உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
ஒரு மாமன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பு இது......
குறிப்புகள் தவறாகத் தோன்றும் இடங்களில் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள் ........காத்திருக்கிறேன்

அருண்மொழி வர்மனாய்ப் பிறந்து
ராஜராஜ சோழனாய் இருந்து
சிவபாத சேகரனாய் நிறைந்து
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
கோடி இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்
எம் மன்னவனுக்கு
நூறு பாடல்கள் கொண்ட
ஒரு பாமாலை அமைக்கும் முயற்சி இது .........

சிவனுக்கும் ...அவனுக்கும் ..
சித்தம் இதுவென்றால்
இவன்மூலம்அத்தனையும் நடந்தேறிவிடும்...பொன்னியின் செல்வனுக்கு ஒரு பாமாலை

மெய்க்கீர்த்தி :
அருள்வழியும் குந்தவையின் அன்பினை உண்டான்;
அருண்மொழி என்னும் இயற்பெயர் கொண்டான்;பல்
ஆயிரம் ஆண்டுகடந்(து) ஓங்குமவன் கீர்த்திநின்று;
பாயிரம்நான் பாடுகிறேன் இன்று (1)

’திருமகள் போல’ எனத்தொடங்கி நிற்கும்
முதலிரண்டு மெய்க்கீர்த்தி; இன்றும் முதற்போரில்
’காந்தளூர்ச் சாலைக் கலமறுத்த’ எம்குல
வேந்தனின் வீரத்தின் சான்று (2)

மதுரையை வீழ்த்தியபின் கொல்லம் அழித்து
கொடுங்கோளூர் வென்று கடல்கடந்து கால்பதித்த
மும்முடிச் சோழனின் மூன்றாம்மெய்க் கீர்த்தியது
நம்முன் உரைக்குமவன் மாண்பு (3)

கட்டடக்கலை :
கொஞ்சும் அழகினை கல்லினில் கண்டவன்;
மஞ்சினை மிஞ்சிடும் கோபுரம் கொண்டவன்;
தஞ்சையின் மூத்தவன்; பாரில் எவரையும்
விஞ்சியவன் எங்களின் வேந்து (4)

ஒருநூறோ(டு) ஐம்பதடி சேர்ந்திணைந்த கோவில்;
இருநூறில் பத்தொழித்(து) ஓங்கும் விமானமது;
ஏழ்பிறப்பும் மீள்பிறந்து கண்டு களித்திட
ஏழாண்டில் கட்டினான் வேந்து (5)

பெரும்கோவில் சிற்பியை பாராட்டிப் போற்றி
பெருந்தச்சன் என்றபெரும் பட்டம் அளித்து
தனக்கிணையாய் கல்வெட்டில் ஒன்றாய்ப் பதித்த
உனக்கிணை இல்லையாம் இங்கு (6)

கலிங்கம் நுளம்பம் தடிகைகங்கை பாடியுடன்
கொல்லமும் காந்தளூர் ஈழத்தைப் பற்றியதில்
இல்லை சிறப்பு; கருங்கல்லில் சிற்பக்
கலைவளர்த்த மாண்பே சிறப்பு (7)

(அமைப்பு : இன்னிசை)
(தொடரும்....

No comments: