இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

March 6, 2015

இனிது...இனிது....காதல் இனிது ...!


காதலதிகாரம் :
அவனதிகாரம் :
461)
​​வெண்பாவை என்கண்முன் துள்ளும் பொழுதெல்லாம்
​​வெண்பாவைத் துப்பும் மனது

462)
​​பாவாடை​க் கட்டியே பாவையவள் முன்வந்தால்
​​பாவாடைக் கூட்டும்என் பேச்சு


அவளுக்குச் செய்தி :
463)
கண்ணாடி யின்மேல் விழுந்ததடி போல்உன்சொல்
என்னுள் விழுந்த தடி

464)
கன்னிவைக்கும் கண்ணியென்பது உண்மையெனில் நானுந்தன்
கண்ணிமைக்கும் முன்குதிப்பேன் காண்

465)
குறும்பாட்டை*க் கேட்பாயென்று ஓடோடி வந்தேன்;
குறும்பாட்டை**க் கேட்கிறாய் நீ

(*சிறு பாட்டு **​இள ஆடு)


அவளதிகாரம்
466)
தானே நுழைந்தானே என்னுள்ளே; தந்தானே
'தானே'*யும் தந்த விளைவு

(* - புயல்)

467)
மாமனை* ஒன்றுகட்டி வைத்திருக்கும் மாமனை
வென்றுகட்ட மாதெனை வாழ்த்து

(* - பெரிய வீடு)

468)
அவரைக் கொடிபோல் அடர்ந்தும் படர்ந்தும்
அவரைப் பிடிப்பேன் விரைந்து


அவனுக்குச் செய்தி :
469)
நீர்சூழ்ந்தால் மண்ணாகும் பாழ்த்தீவு; நீர்சூழ்ந்தால்
நானாவேன் சர்க்கரைக்கூழ்ப் பாகு

470)
நீரில்லா ஊரைப்போல் நீரில்லா நானும்தான்
நாறித்தான் போவேனாம் இங்கு

No comments: