இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 18, 2017

கருப்பு .. ஆம் ... நான் கறுப்பு ...!


946)
கருப்பென்னும் காரணத்தால் யாரும் நிழலில்
ஒதுங்க மறுப்பதில்லை ஆம்


947)
சிகப்பை அழகாய், கருப்பை இழுக்காய்,
வகுப்போர் உறவை விலக்கு


948)
குயிலை, நிறத்தால் குறிப்போர் இயல்பை
அறிந்து,அவரை மொத்தம் ஒதுக்கு


949)
கருப்பை இழிவென்று உரைப்போர், கரும்பலகை
மேல்எழுதிக் கற்றவர்தாம் பார்


950)
மணக்கும் மலரிலும் இல்லை கருப்பு,
மனிதர்க்கு அதுதான் சிறப்பு

June 16, 2017

எமன்.... நெகிழி.... ! (ப்ளாஸ்ட்டிக் )



936)
நெகிழியில் சூடாய்த் தரும்உணவு ஆகும்,
தகழியின் மத்தியில் நஞ்சு

(தகழி = தட்டு)

937)
இளநீர் குடிக்க, நெகிழிக் குழாய்நட்ட
அன்றே விதைத்துவிட்டோம் நஞ்சு


938)
நெகிழியை ஊரில் விதைத்தாய், அரிசிக்குள்
வந்து விளைகிறது பார்


939)
வெண்கொக்கு அலைந்த வயல்வெளி எங்கிலும்
நுண்நெகிழிப் பைபறக்கும் இன்று


940)
மண்பானை வாழையிலை மஞ்சள்ப்பை கொன்று,
நெகிழிக்குத் தந்துவிட்டோம் வாழ்வு


941)
பாழ்மதுவோ பாட்டிலில் பாதுகாப் போடுவரும்,
பாழ்நெகிழிப் பாக்கெட்டில் பால்.


942)
நெகிழியில் உண்போர் அறியார், மெழுகையும்
சேர்த்துத்தான் உண்கிறோம் என்று


943)
நெகிழிக்கு உரம்சேர்க்கப் பூசும் மெழுகு,உள்
சேர்ந்தால் அழுகும் குடல்


944)
மகிழ்வில் நெகிழியில் உண்டால், அழிவுள்
அமிழ்ந்து விடும்வரும் வாழ்வு


945)
நிகழாமல் நின்றுவிடும் வாழ்வு, நெகிழியாய்
மூளையும் மாறிய பின்பு

May 22, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் இரண்டாம்படி இது ...

என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடுஆற்றில், தங்கிய
தண்ணீரில் கால்வைத்தால் தப்பு
(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு நம்பிக்கை வைத்து,ஆற்றில்
கால்வைத்தால்
ஆகிவிடும் தப்பு
(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[பழிமொழி - மண்குதிரையை நம்பி.... ]

ஆயிரம் பேருக்கு போய்ச்சொன்னால் ஆகிவிடும்
நின்ற திருமணமும் நன்று
[பழிமொழி - ஆயிரம் பொய்சொல்லி.....]

ஆயிரம் வேரை அறிந்துகொண்டால் தானொருவன்
ஆவான் அரைமருத்து வன்
[பழிமொழி - ஆயிரை பேரைக் கொன்றவன்....]

நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும் சுவடு
[பழிமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ]

ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]

May 15, 2017

நபிமொழி - 19 :- மும்முறை..! மும்முறை...!! மும்முறை.... !!!



என்குறள் ;- 926 -930
உம்உரை உள்வரையில் சென்றடைய வேண்டுமெனில்
மும்முறை சொல்லி விடு
............................ புகாரி 94

ஒருமுறை மேலும் ஒருமுறை மேலும்
ஒருமுறை போதும் உரை
............................ புகாரி 6337

இறையை நெருங்கும் கவியை வரவேற்க
மும்முறை கேட்பான் அவன்
......................... முஸ்லிம் 4540

’பொருள்வந்த பின்’உதவும் உந்தன் உறுதியை
மும்முறை தந்து விடு
..............................முஸ்லிம் 4632

கெட்டக் கனவெதும் கண்டால் தொழும்முன்
இடப்பக்கம் மும்முறை துப்பு
.............................. முஸ்லிம் 4550

தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.......................... புகாரி 5971

(+)
குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி ஊட்டு
தொடர்வோர்க்கு சாவினைக் காட்டு ........................ அபுதாவூத் 3886


May 14, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 1 (0 - 5)


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் முதல்படி இது ...

என்குறள்:921 - 925

பெண்கள் பற்றிய பழமொழிகளின் உண்மை நிலவரம் :
சேல்அகட்டிச் சாலையில் ஆள்வரப் பார்த்திருக்கும்
மாதரை நம்பிவிடா தே
(சேல் – கண்)
[மூலம்- சேலை கட்டிய மாதரை நம்பாதே]


உண்டி சுருக்கும் வழியை அறிந்தோரின்
பண்டிக்குக் சேரும் அழகு
(உண்டி – உணவு , பண்டி – வயிறு)
[மூலம்- உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு]

மாமி உழைத்தால்மண் ணுக்குஉரம் ஆகும்
மருமகளால் பொன்னுக்கு உரம்
[மூலம்- மாமியார் உடத்தால் மண்குடம்...... ]

பெண்புத்தி என்பதோர் ஆணின்பின் நின்றவனை
முன்செலுத்தும் புத்தியா கும்
[மூலம்- பெண்புத்தி, பின்புத்தி]

தாய்மேல் பழிசொல்லிக் கொல்வோரும் நீர்மேல்
பிழை
கண்டு சொல்வோரும் ஒன்று
[மூலம்- தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே]

April 26, 2017

நபிமொழி - 18 :- கல்வி..! கற்போம்...கற்பிப்போம்..!!


916)
ஆளுமைக்கு மத்தியில் பெண்களுக்குக் கற்பிக்க
நாளொன்றை மொத்தம் ஒதுக்கு
................ புகாரி 101

917)
பெற்றதைத் தந்துதவ; கற்றதைக் கற்றுத்
தருவதற்குப் பேராசை கொள்
................... புகாரி 73

918)
விரும்பாரைக் கண்(டு)அவரைத் தள்ளி; அறிவோரைத்
தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொடு
.................. புகாரி 127

919)
இனியதைச் சொல்வீர் விரும்பத் தருவீர்
திணிக்காதீர் என்பதுஇறை வாக்கு
............... புகாரி 69 6125

920)
நேரடியாய்க் கேட்பதைக் காட்டிலும் கேட்டவர்
கூறுவதைக் கேட்பதும் நன்று
.................... புகாரி 67

April 24, 2017

துரோகம் ...! விரோதம் ...!!

911)
துரோகத்தால் வீழ்ந்தோரின் எண்ணிக்கை இன்று
விரோதத்தில் வீழ்ந்தோர்க்கும் மேல்


912)
பிறர்வாழ வேண்டுவோர் வீழ்ந்தால்; அவர்சரிவின்
பின்இருப்பார் வாழும் பிறர்


913)
விரோதியிடம் போய்த்தானாய் வீழ்ந்தாவது உந்தன்
துரோகியின்முன் வாழ்ந்து விடு


915)
விரோதம்தான் வீரனின் வாழ்விற்கு அழகு;
துரோகத்தால் சேரும் இழுக்கு


915)
விரோதியைக் கண்டால் பொருது; துரோகியைக்
கண்டால் விரைந்து விலகு