இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label முத்தம். Show all posts
Showing posts with label முத்தம். Show all posts

July 6, 2017

முத்தமது....! முத்தம் அது......!!


முத்ததின வாழ்த்துகள் :))
துரைக்குறள் :- 971 - 975

இதழொன்றில் பக்கமிரண் டேதான் எனினும்
எழுதித்தான் தீராது அது

என்னில் அடங்கா உனைமடக்க நான்தருவேன்
எண்ணில் அடங்கா அளவு

செவ்வாயே ஆகாதென் போருமுண்டு; ஆனாலுன்
செவ்வாயே போதும் எனக்கு

வியர்க்காது உதடுக்கு எனினும் வியர்க்கவைக்கும்
என்பதுதான் இங்கு வியப்பு

’வரம்வேண்டும்’ என்பேன் ’தரவேண்டும் என்றால்
தரவேண்டும்’ என்பாள் அவள்

April 25, 2016

முத்தவியல் !



முத்தவியல் ... முத்த அவியல் !


666)
முடித்து விடுவோமா முத்தத்தோடு என்றானே;
முற்றாதது என்பது அறிந்து


667)
உன்மத்தம் கொண்டலையும் உன்னைச் சரியாக்க
என்முத்தம் ஒன்றே மருந்து


668)
சிப்பிக்குள் முத்தொன்றைக் கண்டெடுத்தேன்; முத்தென்றேன்
கேட்டவுடன் முத்திவிட்டான் ஏன்


669)
இசென்றேன்; உச்சென்றாள்; பச்சென்றென் உச்சியில்
நச்சென்று வைத்தாளே ஒன்று


670)
யுத்தத்தில் நாளும்தான் தோற்பேன்ஆம்; தண்டனையாய்
முத்தத்தைத் தின்பவன் நான்

July 7, 2015

முத்தம்...அதுவும் மொத்தம் !!


அவளதிகாரம் : முத்த தினம்
526)
முன்வாயில் முற்றமதில் என்வாயில் வாய்வைத்தான்;
பின்சொன்னான் முத்தமது என்று



527)
இதழால் அவன்தீண்டும் அந்நொடியில் பெற்றேன்
முதல்மழையைத் தொட்ட உணர்வு


528)
உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென்று
என்ஆசை கத்தும் தொழுது


529)
தொப்பலாய்த் தான்நனைந்தேன்; என்னவனின் முத்தத்தால்
மொத்தம் உலர்ந்துவிட்டேன் நான்


530)
முத்தம்உண்டு என்றால்தான் என்னுயிர் நீளும்;நான்
முத்த(ம்)உண்டு வாழும் விலங்கு