இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

September 8, 2017

என்னவளே.. அடி... என்னவளே !!


இன்று ....எங்களது மணநாளில்..... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...என்னவளுக்கு சமர்ப்பணம் .... என்னாலான சின்னஞ் சிறு( நன்றிக்கடன் ) பரிசு !

1116)
உறவுபல உண்டென்ற போதிலும் என்உணர்வு,
ஒன்றுவது உன்னிடத்தில் தான்


1117)
தனக்காகக் காத்திருந்தேன், தன்னிடமே சேர்ந்தேன்,
உனக்குள் எனைக்கண்ட நான்


1118)
கடைசிவரை உன்நிழலில் நானிருக்க வேண்டுவதே
என்கடைசி ஆசையாம் ஆம்


1119)
மூளையெல்லாம் உன்நினைவுள் மூழ்கிவிட, கண்காணும்
மூலையெல்லாம் உந்தன் முகம்


1120)
தேனுள் அடையைப்போல், மீனுள் கடலைப்போல்,
என்னுள் விடையாய் அவள்

August 31, 2017

நடி(த்)......தேன் ! , விட்டுக்கொடு(த்)..... தேன் !!


1081)
பெண்மகிழ ஆணவனும், ஆண்நெகிழப் பெண்ணவளும்
வாழும் உலகுதான் வீடு


1082)
இல்லாளை வெல்வதைத் தன்இலக்காய்க் கொள்வான்ஆண்
தோற்பதுபோல் காட்டுவாள் பெண்


1083)
ஏமாற்றி விட்டதாய்ப் பெண்நினைத்து, ஏமாந்து
விட்டதாய் நான்நடித்தால், தேன்

1084)
என்முன்னால் தூங்குவது போல்நடிக்கும் உன்னை
எழுப்புவது போல்நடிப்பேன் நான்


1085)
எழுப்புவது போல்நடிக்கும் உன்முன் மெதுவாய்
விழித்தது போல்நடிப்பேன் நான்


August 1, 2017

நீரா ? ... தண்ணீரா ??



1031)
நீர்சிக்க வைத்தேன் வலையொன்று; ’நீர்’சிக்கி
வீழ்த்தினீர் நீரின் சிறப்பு


1032)
மீன்என்றும் வேண்டாது நீர்வற்ற வேண்டுமென;
நானும் அதுபோலத் தான்


1033)
நீர்சூழ்ந்தால் வீணான மண்ணாகும் தீவு;என்னை
’நீர்’சூழ்ந்தால் நானாவேன் பூவு


1034)
’நீரில்லை’ என்றால்நான் யார்கூறு; நீரில்லை
என்றால் அதுஇல்லை ஆறு


1035)
நீர்தேங்கி நின்றாலும் ’நீர்’தங்கிச் சென்றாலும்
ஊர்சொல்லும் பாசமுண்டங்கு என்று

September 9, 2015

இதுவும் நன்றிக்கடனே !


இன்று .... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...ஆம் நான் மீண்டு(ம்) பிறந்த மணநாளில் ..என்னவளுக்கு .... என்னாலான சின்னஞ் சிறுபரிசு !
591)
ஆண்டவன்முன் ஓம்சொன்னால்; ஆள்பவள்முன் ஆம்சொன்னால்
தானாகத் தேனாகும் வாழ்வு

592)
வேறாகி நிற்பேன்; நிலையகற்றிக் காலின்கீழ்
வேராகிக் காப்பாள் இவள்

593)
தடுமாறும் என்னை தரைமோதும் முன்பு
கரைசேர்க்க வந்தாள் இவள்

594)
வந்தாரைப் போஎன்றோர் சொல்சொல்லாள்; மந்தாரைப்
பூச்சொல்லால் செய்வாள் சிறப்பு

595)
உலர்ந்த உணவை மலர்ந்த முகத்தால்
விருந்தாக மாற்றிவிடு வாள்

August 19, 2015

வந்து....எனக்கென வாய்த்தாளே...!


576)
அதுவேண்டும் என்பாள்; அதுவேண்டாம் என்பேன்;
அதுதான் நடக்கும் பிறகு

577)
புள்ளியிங்கு வேண்டாமே என்றுவைத்தேன் வேண்டுதலை;
துள்ளிவந்து வைத்தாள் அதை

578)
தலையாட்டச் சொன்னாள்; விளையாட்டாய்ச் செய்தேன்;
வினையாகிப் போனது அது

579)
நான்வேண்டும் என்பதை நீவேண்டாம் என்பாய்;
அதுதானே வேண்டும் எனக்கு

580)
முன்நின்று கூறுவாள் பெண்எதையோ; கண்ணில்
தெரிவதோ வேறு கதை

June 15, 2015

காதலின் கிர(க்)கத்தில் !


486)
சொல்லும் மொழியாலும் கொல்லும் விழியாலும்
வெல்லும் வழியறிவாள் பெண்


487)
பதுமையைப் போலிருப்பாள்; ஆற்றும் செயலால்
புதுமையின் எல்லை அவள்


488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு


489)
மான்குட்டி தானிவள்; பூந்தொட்டித் தேனிவள்;
தேன்சிட்டென் வானவள் தான்


490)
வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சும் கொலுசு

March 6, 2015

இனிது...இனிது....காதல் இனிது ...!


காதலதிகாரம் :
அவனதிகாரம் :
461)
​​வெண்பாவை என்கண்முன் துள்ளும் பொழுதெல்லாம்
​​வெண்பாவைத் துப்பும் மனது

462)
​​பாவாடை​க் கட்டியே பாவையவள் முன்வந்தால்
​​பாவாடைக் கூட்டும்என் பேச்சு


அவளுக்குச் செய்தி :
463)
கண்ணாடி யின்மேல் விழுந்ததடி போல்உன்சொல்
என்னுள் விழுந்த தடி

464)
கன்னிவைக்கும் கண்ணியென்பது உண்மையெனில் நானுந்தன்
கண்ணிமைக்கும் முன்குதிப்பேன் காண்

465)
குறும்பாட்டை*க் கேட்பாயென்று ஓடோடி வந்தேன்;
குறும்பாட்டை**க் கேட்கிறாய் நீ

(*சிறு பாட்டு **​இள ஆடு)


அவளதிகாரம்
466)
தானே நுழைந்தானே என்னுள்ளே; தந்தானே
'தானே'*யும் தந்த விளைவு

(* - புயல்)

467)
மாமனை* ஒன்றுகட்டி வைத்திருக்கும் மாமனை
வென்றுகட்ட மாதெனை வாழ்த்து

(* - பெரிய வீடு)

468)
அவரைக் கொடிபோல் அடர்ந்தும் படர்ந்தும்
அவரைப் பிடிப்பேன் விரைந்து


அவனுக்குச் செய்தி :
469)
நீர்சூழ்ந்தால் மண்ணாகும் பாழ்த்தீவு; நீர்சூழ்ந்தால்
நானாவேன் சர்க்கரைக்கூழ்ப் பாகு

470)
நீரில்லா ஊரைப்போல் நீரில்லா நானும்தான்
நாறித்தான் போவேனாம் இங்கு

April 2, 2014

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



என்னவனே..மன்னவனே..!​

​361)
​​நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்

நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்

​362)​
விழிமூடும் வேளையெல்லாம் ​,​ எந்தன் வழிமூடி

முன்வந்து நிற்பான் அவன்

​363)​
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால

மண்போல் கரையும் மனது

​364)​
அடக்கிவைப்பேன் எ ​ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல

அடங்கித்தான் போவான் பிறகு

​365)​
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்

எண்ணெயின்றித் துள்ளும் கடுகு

November 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / இன்பம்


அவளைப் பற்றி(ய) நான் :
346)​
​​கண்ணில் வெடிவைத்துக் காத்திருப்பாள்; கண்ணிவெடி
தோற்றணையும் கன்னியிவள் முன்பு

​347)​
​​கதிர்அரிவாள்க் கூர்கண் அவளுக்கு; எதிர்வருவாள்
என்செய்யப் போகிறேன் நான்

​348)​
​​வாழப் பிடிக்கும் இடமெது வென்பேன்;உன்
தோள்தான(து) என்பாள் பிடித்து

​349)​
​​முப்பொழுதும் உன்நினைவே தானென்றேன்; மூச்செறிந்தாள்
எப்பொழுதும் ஏனில்லை என்று

​350)​
​​மீனானால் வீழ்ந்திருப்பேன்; மானானால் வாழ்ந்திருப்பேன்
தானாக உன்வலைக்குள் நான்

June 12, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


வாழ்வின் அச்சு :

326)
கண்ணோடு கண்நோக்கி கன்னம் உருவாக்கும்
உன்நோக்கம் தானென்ன கூறு

327)
நோக்கும்உன் கண்செய்யும் தாக்கம் மிகப்பெரிது;
நோக்கும்முன் தோற்பேன் இனி

328)
தேவையைத் தானுணர்ந்து முன்வந்து தீர்த்துவைக்கும்
தேவதையைக் கொண்டவனாம் நான்

329)
சுற்றுமுற்றும் யாருமின்றிப் போனாலும் சுற்றி
வருமவளே என்வாழ்வின் அச்சு

330)
மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ

February 13, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


காதலோ,,காதல்


311)
யுத்தமொன்று சத்தமின்றி முற்றுமின்றி நீண்டிருக்க
முத்தமிட்டுத் தந்தாள் குறிப்பு

312)
நாணாமல் போய்நீ வழங்கு சிறுநகை;
காணாமல் போகும் பகை

313)
நீவருவாய் என்றிருந்தேன்; வந்தாய் நகையோடு;
நீவருவாய் என்றானாய் இன்று

314)
மானாக ஆண்மருக; ஆணாக பெண்உருக
தேனாகும் காதல் உறவு

315)
நானென்(று) அவன்விஞ்ச ஏனென்(று) இவள்கொஞ்ச
வீணாகிப் போனான் அவன்