இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

June 22, 2017

உன்னால் முடியும்...!


956)
எட்டு திசையும் வழிபிறக்கும், தட்டும்
கதவு திறக்காத போது


957)
விடியுமென நம்பா விடினும் விடியும்;
முடியும் எனமுதலில் நம்பு


958)
தொடங்கும் எதற்கும் இருக்கும் முடிவு,
முதலில் துணிந்து தொடங்கு


959)
உன்னால் எதுவும் முடியும் எனநம்பு,
தன்னால் நடக்கும் அது


960)
எதுவந்த போதும் எதிர்கொள்வாய் என்றால்
இதுவும் கடந்து விடும்

April 9, 2017

நம்பிக்கை... தன்னம்பிக்கை !!


( + )
856)
நம்பிக்கை வெற்றிதரும்; வெற்றியோ நம்பிக்கை
வைத்திருந்தால் தானே வரும்


857)
தன்னடக்கம் கொண்டிருப்போர் தம்முள்;தன் நம்பிக்கை
தன்னால் விளைந்து விடும்


858)
தன்திறத்தை நம்புபவர் தானே பெறுவாராம்
எந்திரத்தை வெல்லும் வரம்


( - )
859)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்


860)
தன்திறன்மேல் நம்பிக்கை வைக்காத வாழ்வாகும்
தண்ணீரின் மேல்வரையும் கோடு

March 13, 2017

இரோம் சர்மிளா ...! .. நல்லதோர் வீணை ..... !!


---பதினாறாண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் - கிடைத்ததோ தொண்ணூறு ஓட்டுகள்----

831)
போராளி என்போர் பெரும்பாலும் ஏமாளி
என்றுதான் பேர்பெறுவார் இன்று

832)
போராளி போராடித் தோற்றுவிட்டால் கோமாளி
யாகத்தான் பார்க்கும் உலகு


833)
நன்றிகெட்ட நாய்களுக்கு நம்பிக்கை ஊட்டவா
தும்பிக்கை யோடலைந்தாய் நீ

834)
ஒருவரிடம் ஏமாந்தாய் என்றால் அவரைமிக
நம்பினாய் என்றே பொருள்


835)
இருக்கும் வரைத்தள்ளி நிற்பது; இறந்தபின்
போற்றுவது தான்நம் இயல்பு

836)
வழிதெரிய வைத்தோரை நன்றி மறந்து
வழித்தெறிவோர் வீழ்ந்தாலும் நன்று


837)
ஊர்வாழ வேண்டுமென ஈரெட்டாண்டு அன்னத்தை
விட்டவளைக் கைவிட்டது ஊர்

838)
நம்நலம் காப்பதற்குத் தன்சோற்றை விட்டதற்கு
தந்தோம்நாம் தொண்ண்ண்ணூறு ஓட்டு


839)
அறியற்கு அரியது அறியானைச் சேர்ந்தால்
பெரிதாய் அடையும் இழிவு


840)
தனைநம்பி வந்தவரை வீழ்த்த நினைப்பவரின்
வாழ்வுதனை வீழ்த்தும் வினை

June 16, 2012

இருவரியில் சொல்வேன்...குறள் போல சில.....!



நம்பிக்கை :

96)
எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு


97)
முயலா முயலுக்கு முன்செல்லும் ஆமை;
இயலும் வரையில் முயல்


98)
முயல்பவரின் முன்நிற்கும் வெற்றி; தயங்குபவர்
பின்சென்(று) ஒளியும் அது


99)

தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; தேவையில்லை
அங்குகுளிர் காயும் அடுப்பு


100)
எளிதன்(று) எனமலைத்(து) ஏங்குகிறேன்; எல்லாம்
எளிதென்று சொல்வீரா வாழ்த்து


(# சதமடிதிருக்கிறேன் ...எத்தனை கணக்கில் வருமோ தெரியவில்லை :))