இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label உழவு. Show all posts
Showing posts with label உழவு. Show all posts

April 10, 2017

இலவு காக்கும் உழவு..!


படம்:நன்றி-RAVI PALETTE
861)
வீர விளையாட்டில் நேராய் விவசாயம்
சேரவழி செய்தது அரசு


862)
ஏடெடுப்போர் ஓங்கி இருந்தாலும் ஏரெடுப்போர்
ஏங்கினால் ஓடெடுக்கும் நாடு


863)
உழவன் உழைத்திருக்க உண்டிருந்தோம் அன்று/இன்று
உழவனையே உண்கிறோம் மென்று


864)
உழைப்பே உயர்வுதரும் என்றால் உழவன்
நிலைதாழ்ந்தே போவது எதற்கு


865)
விதைத்தது அனைத்தும் விளைந்தும் செழிக்கவில்லை
ஏனிங்கு உழவன் நிலை

April 22, 2015

இலவு காக்கும் உழவு ...!


476)
சாகுபடி வேண்டுமென்று சாயா(து) உழைத்திருப்பார்;
ஆகுமடி நல்விளைச்சல் அங்கு

477)
உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்
உழைப்பில் பிழையென்று கொள்

478)
வான்பொழிந்தும் மண்விளைந்தும் நல்லவிலை இல்லையெனில்
வீணாகும் ஏரின் உழைப்பு

479)
உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு
அழுதால் நமக்கே இழுக்கு

480)
விளைநிலம் எல்லாம் விலைநிலம் ஆனால்
நிலையென்ன ஆகும் இனி

June 30, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உழவும் , உலகும் :

116)
சாகும் படித்தூண்டும்; நீரின்றிக் காய்ந்திருக்கும்
சாகுபடி இல்லா நிலம்

117)
விருந்து சிறக்கும்; விதைப்பை சிறுக்கும்,
விதைப்பை நிறுத்தும் அளவு

118)
"கதுரடிச்ச காடெல்லாம் வீடாச்சு; போகும்
சதுரடிக்கு நல்ல விலை"

119)
விதையுண்டு நீருண்டு; நல்விலை இன்றேல்
புதையுண்டு போகும் உழவு

120)
முன்னோரும் மூவேந்தும் போற்றிவைத்த மண்மரபைக்
காக்கும் முறையை அறி


....தொடர்வேன் ... ;>)