இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

August 31, 2017

பாட்டி வைத்தியம் - 6 _ பெண்ணுக்குக் கைமருந்து !


தாய்மை:
1086)
கருவுறும் காலத்தில் கேழ்வரகு சேர்த்தால்
பெருகும் இரும்பின் வரவு


1087)
நொய்யரிசி வெந்தயக் கஞ்சியால் தாய்ப்பால்
சுரந்துவரும் மிஞ்சும் அளவு


மருந்து:
1088)
கருஞ்சீ ரகம்,முள் முருங்கை கருப்புஎள்சேர்
மாத விலக்காகும் சீர்


1089)
பப்பாளி அன்னாசி கத்தரி எள்ளை,
விலக்காகும் நாளில் விலக்கு


1090)
கூடும் உடலெடையை, கட்டுக்குள் வைத்திருந்தால்
நீர்க்கட்டி நீர்த்து விடும்


1091)
வல்லாரை ஆட்டுப்பால் சேர்த்தரைத்து உண்போர்க்கு
வெள்ளைப் படல்நிற்கும் ஆம்


1092)
வெள்ளைப் படலுக்கு எருமைத் தயிரோடு
அருகம்புல் கீழாநெல் லி


1093)
நெல்லியுடன் தேனும் தொடர்ந்துண்போர்க்கு ஆகுமது
வெள்ளைப் படலுக்குத் தீர்வு


எச்சரிக்கை:
1094)
பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும்
கெடுமாம் கருவோடு விந்து


1095)
குருதி வெளுக்கும் கருவும் குலையுமாம்
குங்குமப்பூ கூடும் பொழுது


June 4, 2016

அவள் பார்வை ... கூடல் !



731)
தீண்டாது தன்எல்லைத் தாண்டும் அவன்செயலால்
தூண்டாது எரியும் திரி


732)
மோகத்தின் தாகத்தால் என்இடைப் பற்றும்நீ;
மேகத்து இடைப்பற்றும் தீ


733)
சம்மதம் கேட்கும் வரைதான் அவன்குழந்தை
தந்தபின்நான் ஆவேன் அது


734)
ஆனவரை நானவரை அள்ளி அணைத்திருப்பேன்
ஆணவரே நாணும் வரை


735)
என்விருப்பை முன்வந்து தன்விருப்பம் என்றுரைக்க
என்உருவைக் காட்டுமவர் கண்

March 7, 2016



மகளிர்தின நல்வாழ்த்துகள் ... !
[ + ]
616)
உண்மைக்கும் பெண்மைக்கும் ஓரெழுத்து மாற்றமுண்டு
என்றாலும் உட்பொருள் ஒன்று

617)
உன்வரவுக்கு ஏற்றாற்போல் தன்னுள் சுருங்கிவிடும்
பெண்தான்நீ கேட்டவரம் ஆம்

618)
தாய்க்குநல் சேயாகி; சேய்க்குநல் தாயாகி
நாயாகி பாயாவாள் பெண்

[ - ]
619)
பெண்மையின் உண்மைப் பொருளை அறியாமல்
பொம்மையெனக் கொள்வோர் பலர்

620)
தன்னை துணையை துணைஉறவை தாங்கென்று
பெண்மைக்குத் தந்தோம் பரிசு

July 1, 2015

பெண்ணை அறிந்தேன்...என்னைத் துறந்தேன்... துறவியானேன் !



516)
பெண்வலைக்குள் போய்ப்பாயும் ஆணினம்தான் தன்தலைமேல்
வெண்ணைவைத்துக் காத்திருக்கும் கொக்கு

517)
பெண்மையைக் கண்டுகொண்டேன் இவ்வுலகின் உச்சமென்று;
உண்மையை உண்டகன்றேன் பின்பு

518)
சந்தித்தேன் ஒவ்வோர் நொடியும்தேன்; ஓய்ந்தபின்
சிந்தித்தேன்; எல்லாமும் வீண்

519)
எத்திக்கும் தித்திக்கும் பெண்மானின் மாயையை
புத்திக்குச் சொல்வதுயார் இங்கு

520)
அறிவுரையை எள்ளும்; அறிஞரைக்கீழ் தள்ளும்;
அரிவையின் மேல்கொள்ளும் ஈர்ப்பு

June 24, 2015

பெண்ணினம் மட்டுமே அறிந்த மொழி!


மெளனமொழி :
501)
உம்மென்று எழுப்புவாள் ஓரொலி; கும்மென்று
எழும்பும் எனக்குள் கிலி

502)
இனிநீஉம் என்றால் கணினியெல்லாம் ஏனாம்;
கனிநீயே போதும் எனக்கு

503)
நச்சரித்துக் கொண்டே இருக்கும் - அவள்உதிர்த்த
உச்சென்னும் உச்சரிப்பு ஒன்று

504)
எழுத்துசொல் இல்லா மொழிமெளனம்; என்றாலும்
உணர்த்தாத(து) என்றொன்றும் ஏது

505)
சொல்லா(து) உணர்த்துவதற்கு இல்லாள் அறிவாள்,சொல்
இல்லாத மெளன மொழி

October 8, 2014

பெண்ணே...பெண்ணே....!


391)
பால்நிலவைப் பாற்கடலில் தோய்த்(து)அவள்முன் போஎன்றேன்;
மேலும் வெளுத்த(து) அது

392)
மானவளை வென்றுவிட்ட பின்பு; துவண்டதுகண்(டு)
ஆனேன்நான் அம்புபட்ட ஒன்று

393)
மயிலும் துயிலும் ஒயிலாள்; குயிலும்
பயிலும் ஒலியாள் இவள்

394)
எனதளவில் எல்லாம் எளிதென்று இருந்தேன்
உனதழகைக் காணும் வரை

395)
உந்தன் இருவிழியில் முந்தும் சிறுதுளியும்
எந்தன் கருத்தழிக்கும் அம்பு