இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இல்லாள் :
(81)

‘தங்க’ மயில்வருமா என்றேங்கிக் காத்திருந்தேன்;
வந்ததோ ‘தங்கமயில்’ ஒன்று

(82)
இனியவள் தேனின் இனியாள்; இனியவள்
இல்லா(து) இனியில்லை வாழ்வு

(83)
விறகாய் இருந்தேன்; பிளந்தே நுழைந்தாள்
சிறகாய் விரிந்த(து) எனக்கு

(84)
போகாப் பொழுதெல்லாம் பாவையின் அண்மையில்
போதாத(து) ஆன(து) எனக்கு

(85)
நிழலையும்மண் தீண்டும்முன் தாங்குவேன்; அன்பே
மழலைநீ என்றும் எனக்கு

(86)
தண்டில் இருந்தாலும் மொட்டுக்கு வண்டின்
வரவுதான் சேர்க்கும் சிறப்பு :)

(87)
நொந்துபோய் நின்றாலும் வந்தவள் தாங்கினால்
சொந்தமாய்த் தோன்றும் உலகு

(88)
உண்மைபோல் பொய்யாய்என் முன்நடிப்பள்; உண்மையில்
மெய்க்குள் துடிக்கும் எனக்கு

(89)
வலியை விரட்டும் வழியை அறிவாள்;
வலியதாம் ‘இல்லாள்’ மனது

(90)
மின்னலைப் போல்இணைந்தாள்; என்னுள் பிணைந்(து)இனி
இன்னலைத் தீர்ப்பாள் துணிந்து

April 7, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
76)
செல்பேசி வண்டியில் நீசென்றால்; சொல்லாமல்
வந்துன்முன் நிற்பான் எமன்

77)
குறிகேட்டால் வேண்டுவ(து) ஆகா(து); இலக்கைக்
குறிவைக்க வேண்டும் அதற்கு

78)
இல்லாமை இல்லாமல் போக்கிட இல்லையென்ற
சொல்லையே இல்லாமல் ஆக்கு

79)
வீழ்ந்தவுடன் முற்றா(து) எதுவும்; எழுந்துநின்று
வாழ்வதற்குத் தானே பிறப்பு

80)
வண்ணமுண்டு; எண்ணமுண்டு; உன்மனத் திண்மையின்றேல்
மண்ணாம் வரையும் படம்

April 2, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவள் :
70)
வாள்புருவம் வில்லாக; கூர்க்கண்கள் வேலாக
ஆளானேன் வேட்டை இலக்கு

71)
விடும்கதையை நம்புவது போலிருப்பாள்; நண்பா;
விடுகதையின் மூலம் அவள்.

72)
சொல்லடி என்றேன்; சுழன்றேதான் நான்வீழ்ந்தேன்;
சொல்லடி பட்ட பிறகு

73)
வைத்ததோ பெண்ணவள் மேல்அன்பு; வந்தென்னைத்
தைத்த்தோ மன்மதன் அம்பு

74)
தீயில்லை; ஆனாலும் தீய்கிறேன்; காதலில்
தீதில்லை என்பது பொய்

75)
மருதாணி நாவசைத்தாள்; நானானேன் இங்கு
திருகாணி இல்லாக் கொலுசு

March 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...! ஈழம் : (60 - 69)

ஈராண்டுகளுக்கு முன்னர்
'எனதுயிர் அக்கா'வின்
மனத்துயர்த் துடைக்க
வடித்து அனுப்பிய தம்பியின் ஓலை இது
மடித்து அனுப்பிய தாயின் துண்டுச் சீலை இது..

ஜெனீவாவின் இன்றைய நிலைகண்ட தாக்கத்தோடு ..
இனியாவது நடப்பது நல்லதாகட்டும் என்ற ஏக்கத்தோடு
இதை இங்கே உங்கள்முன் பகிர்ந்துகொள்ள நினைத்தவுடன் ....
விதைத்து விட்டேன் ..உங்கள்முன் படைத்துவிட்டேன்.....

எழுதியதில் இன்று ஒருபகுதி உண்மையாகி இருக்கிறது
பழுதெதுவும் இன்றி மறுமீதியும் நன்மையாக வாழ்த்துங்கள்

வாழ்க உறவுகள் >>.



ஒர் அதிகாரத்திற்கான சாட்சியாய் .......!
1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு, வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு, வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் ’வெட்டி’வீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம்

ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை
ஈழம் உணர்த்தும் உமக்கு [01]

யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த (சிங்கள)யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ’ஈழம்’.

பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே
புதருள் இருக்கும் புலி [02]

எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒருபுலி

அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி
உண்டாம் எதற்கும் அறி [03]

தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று’ எந்த விசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு ‘

புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்
விதையென்(று) அறிவீரா நீர் [04]

சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் ’வீரிய’விதைகள் என்பதை.


ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]

போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது ’வ(வெ)ல்லரசுத்தோற்றம்’ வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்

2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும், கூட்டம் கூட்டமாய் ’கூட்டை’ இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்கு…தொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :
வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;
வலியதாய் ஆகும் மனது [06]

தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்
பழுத்துவிடும் தங்கமடா நாம் [07]

எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்
எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]

ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை நமக்கு [09]

திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்
உலகும் அணிதிரளும் அன்று [10]


மேலுள்ள எதற்கும்….
விளக்கம் என்றெதுவும்
தேவையில்லை உனக்கு .

காலமும் கனியும் நமக்கு..
கலக்கம் தராதிரு மனதுக்கு....

உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்’
கலங்கும்நாள் ’வெகுவிரைவில் இருக்கு’ .......

February 27, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உலகம் :
54)
ஞாலத்தில் எல்லாம் இழந்துவிட்ட பின்வரும்
ஞானத்தால் என்ன பயன்


55)
துதித்துத் தொடர்வோரைத் தூற்றல்; நிழலை
மிதித்து நடப்பதைப் போன்று

56)
பொய்வந்து சாட்சியாய் உண்மையைச் சொன்னாலும்
மெய்யென ஏற்கா(து) உலகு


57)
வேதங்கள் சொல்லாத பேதங்கள் கண்டுணர்ந்து
வாதங்கள் செய்வ(து) எதற்கு


58)
பாடுபட்டோர் வாழ்வுயரப் பாதையில்லை; பாரெல்லாம்
கேடுகெட்டோர் வாழ்வே சிறப்பு


59)
உயரத்தில் ஏற்றம் இருப்ப(து) இயல்பு;
உயிரிடத்தில் மாற்றமெல்லாம் ஏது

February 13, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நாட்டு நடப்பு :
49)
தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்
தோள்தாழத் தொங்குபவன் வேறு

50)
நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ
எல்லையெல்லாம் இல்லை உனக்கு

51)
முயல்பவரை முன்மொழியும் வெற்றி; தயங்குபவர்
பின்னால் ஒளியும் அது

52)
ஈசலுக்கும் கூட இணையில்லார் காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு

53)
தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; வேண்டாம்
குளிர்காய அங்கோர் அடுப்பு

February 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

விலங்கும் விளக்கும் :

45)
படம்பார்க்கப் பேராவல் கொண்டேன்; படர்ந்ததென்
தோள்மேல் கருநாகம் ஒன்று


46)
ஏய்த்திழுக்கும் எண்ணத்தில் இன்சொல் வலைவீசும்
மேயவந்த மாயமான் கன்று


47)
தட்டில் அதற்கும்தான் உண்டே சரிஉரிமை;
விட்டிலுக்கேன் இல்லை பகல்


48)
சாயும் பழத்தோட்டக் காவல் விலகினால்
பாயும் பசித்த கிளி